Published : 14 Apr 2017 12:33 PM
Last Updated : 14 Apr 2017 12:33 PM

காதல் வழிச் சாலை 30: ஏன் காதலை வெறுக்கிறார்கள் பெற்றோர்?

பெற்றோர் ஏன் காதலை எதிர்க்கிறார்கள்? காதல் என்பதையே ஒரு பாவச்செயலாகப் பார்க்கும் பெற்றோர்களின் உளவியல் என்ன? காதல் திரைப்படங்கள் பெருவெற்றியைப் பெறுகிற நாட்டில் நம் வீட்டுப் பையனோ, பெண்ணோ காதலித்தால் பெற்றோர் பதறித் துடிப்பது ஏன்? காதலிப்பது அர்த்தமற்றது போலவும், எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்வதை வாழ்க்கையின் தோல்வியாகவும் பெற்றோர் பலர் நினைப்பது ஏன்?

“நாங்கள் இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். அந்தப் பையனை மதம் மாறச் சொல்கிறார் என் அப்பா. அவன் சம்மதித்துவிட இப்போது வேறு காரணங்களைச் சொல்லி மறுக்கிறார். அவனை அவருக்குப் பிடிக்கும். ‘நம்ம மதமா இருந்தா எப்பவோ கல்யாணம் பண்ணிக் கொடுத்திருப்பேனேம்மா’ என்று சில சமயம் புலம்புகிறார். சொந்த பந்தம் அவரைப் புறக்கணித்துவிடுமோ என்று பயப்படுகிறார்” என்று சொல்கிறார் நன்கு படித்து வேலையில் இருக்கும் ஒரு இளம்பெண். மூன்று ஆண்டுகளாகப் பெற்றோரின் சம்மதத்துக்குக் காத்திருக்கிறார்.

எது குடும்ப கவுரவம்?

பொதுவாகக் காதல் திருமணங்கள் வெற்றி பெறுவதில்லை என்பது பல பெற்றோரின் நினைப்பு. காலப் போக்கில் காதல் உணர்வு குறைவது ஏற்பாட்டுத் திருமணங்களிலும் நடக்கும் என்றாலும், காதல் திருமணங்களில் அது மிகைப்படுத்திப் புரிந்துகொள்ளப்படுகிறது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் ஒருவித சமூகப் பாதுகாப்பை அளிக்கின்றன. ஏதாவது தவறு என்றால் நான்கு பேரை வைத்து நியாயம் பேசலாம், சமாதானம் செய்யலாம். காதல் திருமணங்களில் அதற்கான வாய்ப்புக் குறைவு என்பது அவர்கள் எண்ணம்.

இவை தவிர நம் சமூகம் திருமணங்களுக்கு அலாதி முக்கியத்துவம் கொடுத்தே வந்திருக்கிறது. திருமணம் என்பது இருவர் சம்பந்தப்பட்டதில்லை. இரு குடும்பத்துக்கிடையே, இரு கிராமங்களுக்கு இடையேயான பிணைப்பு என்று நம்புகிறார்கள். அதன் நினைவுகளும் வீச்சும் ஆண்டாண்டுகளுக்குப் பேசுபொருட்களாக இருக்கின்றன. தங்கள் குடும்ப கவுரவத்துக்குக் கேடு வந்துவிடுமோ என்ற சமூக அச்சமே காதல் திருமணங்களை எதிர்க்கச் சொல்கிறது.

ஆதியிலிருந்தே கூட்டாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் நாம். அதுதான் எப்போதும் நமக்குப் பாதுகாப்பு. எல்லாவித அச்சுறுத்தல்களையும் தாண்டி நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றால் நமக்குக் குடும்பம், சமூகம் என அனைத்தும் தேவை என்று நம்புவது இயல்பே. காதல் என்ற ஒன்றுதான் இந்தக் கட்டமைப்பில் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது என அவர்கள் நம்புகிறார்கள். “என் மகள் தற்கொலை செய்துகொள்வதாக இருந்தாலும் சரி, நான் பார்த்திருக்கிற மாப்பிள்ளையிடமிருந்து தாலி கட்டிக்கொண்டு அப்புறம் சாகச் சொல்லுங்க” என்று என்னிடம் சொன்னார் ஒரு பெண்ணின் தந்தை. “அவள் காதலனை மறக்கச் செய்ய ஏதாவது மருந்து இருக்கா டாக்டர்?” என்று என்னிடம் கேட்ட அப்பாக்கள் நிறையப் பேர்.

இவற்றைத் தாண்டி பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதிய மனப்பான்மை போன்றவையும் பெற்றோரின் அளவுகோல்களாக இருக்கின்றன. அவ்வளவு ஏன்… “காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டால் வரதட்சிணை கிடைக்காதே. அதுக்கா இவ்வளவு செலவுசெய்து படிக்க வெச்சோம்?” என்று கேட்பவர்களும் உண்டு. தன் பையனுக்கு வரும் சீர்செனத்தி, தன் சமூக கவுரவத்திற்கான அடையாளம் என்று நினைக்கும் பெற்றோர்கள் நிறைய பேர்.

தன் பிள்ளைக்குத் திருமண வயது எட்டியும் இன்னும் நல்ல வரன் அமையவில்லையே என்று ஏங்கும் பெற்றோர் எத்தனை பேர் தெரியுமா? முப்பது ஜாதகம் பார்த்திருப்பார்கள். ஏழெட்டு முறை பெண் பார்க்கும் வைபவமும் நடந்திருக்கும். இன்னும் எதுவும் பொருந்தி வரவில்லையே என்று கடும் மன உளைச்சலில் இருக்கும் பெற்றோரும் இருக்கிறார்கள். ஆனால் தங்கள் பிள்ளைகளே யாரையாவது தேர்ந்தெடுத்து அதற்குக் காதல் என்று பெயர் சூட்டும்போது மட்டும் ஏன் அப்படித் துள்ளிக் குதிக்கிறார்கள்? சொல்லப்போனால் காதல் திருமணங்கள் அதிகரித்தால் தானாகவே வரதட்சிணைக் கொடுமை போன்றவையெல்லாம் குறைந்து விடுமல்லவா? யோசித்துப் பாருங்கள் இளைஞர்களே. அந்த இடத்தில்தான் பெற்றோரின் எண்ணங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களது அத்தனை அச்சங்களையும் தவறான எண்ணங்களையும் போக்க முயல்வதே உண்மையாகக் காதலிப்பவர்களின் முதல் வேலை.

மனதை மாற்றும் மந்திரம்

இதை எப்படிச் செய்வது? முதலில் உங்கள் காதலை நீங்கள் முழுவதுமாக நம்ப வேண்டும். இன்னாருடன்தான் என் வாழ்க்கை என்பதில் உங்களுக்கு இருக்கும் தெளிவே கால் பங்கு வெற்றிக்குச் சமம். அடுத்து நேரம் பார்த்துச் சொல்ல வேண்டும். உங்களவரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதற்கான காரணங்களை மிக மென்மையாக எடுத்துரைக்க வேண்டும். தன் கட்சிக்காரருக்காக வாதாடும் ஒரு தேர்ந்த வழக்கறிஞரின் நேர்த்தி அதில் இருக்க வேண்டும். அவர்கள் மறுத்துச் சொல்லும் விஷயங்களைப் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.

முடிந்தவரை உங்கள் குடும்பத்தில் முக்கியமான யாருடைய ஆதரவாவது உங்களுக்குக் கட்டாயம் வேண்டும். பாட்டி, தாத்தா போன்ற சீனியர்கள் தொடங்கி அப்பாவுக்குச் செல்லமான கடைசித் தங்கைவரை யார் வேண்டுமானாலும் உங்களுக்கு உதவலாம். பேசிய உடனேயே உங்களவரை உங்கள் பெற்றோர் சந்திக்க வேண்டும். உங்களை அவரது பெற்றோர் சந்திக்க வேண்டும். எப்படிச் செய்வீர்களோ அது உங்கள் பாடு. ஆனால் பெரும்பாலான மாற்றுக் கருத்துகள் எல்லாம் ஒரு நபரை நேரில் சந்திக்கும்போது மாறிவிடும். அவரது நேர்மறைப் பக்கங்களையும், நீங்க ‘இதற்காகத்தான் அவனை விரும்புகிறேன்’ என்று சிலாகித்த நல்ல விஷயங்களைப் பெற்றோரும் உணர்வார்கள். தம் பிள்ளை மீதும் அவரின் மனமுதிர்ச்சி மீதும் ஓரளவேனும் நம்பிக்கை வைத்திருந்தால் இப்படியொரு சந்திப்புக்கு நிச்சயம் உங்கள் பெற்றோர் தடை சொல்ல மாட்டார்கள்.

படிப்பு, நல்ல வேலை, நல்ல நட்பு வட்டம், சுயமாகச் செய்த சாதனைகள் என நீங்கள் கடந்து வந்த பாதை ஓரளவு நன்றாக இருந்தால், உங்கள் காதல் பாதிக்கடல் தாண்டியதாகவே எடுத்துக்கொள்ளலாம். இதையெல்லாம் ஜெயித்த என் மகள் வாழ்க்கைத் துணைத் தேர்விலும் சரியாகத்தான் இருப்பாள் என்றுதான் நினைக்கத் தோன்றும். வெட்டியாக ஊரைச் சுற்றிக்கொண்டு கைச்செலவுக்கே வீட்டில் உள்ளவர்களை நம்பிக்கொண்டு இருக்கும் போது “இவளை லவ் பண்றேன்.. கல்யாணம் பண்ணி வையுங்க” என்றால் எப்படி இருக்கும் பெற்றோருக்கு? ஓரளவு கல்வித் தகுதி, நம் செலவுகளைப் பார்த்துக்கொள்ளும் அளவிலாவது சிறு வருமானம் இவைகூட இல்லையென்றால் தயவுசெய்து காதல் திருமண எண்ணத்தைத் தள்ளிப்போடுங்கள்.

உங்களவரைக் காத்திருக்கச் சொல்லுங்கள். நீண்ட வாழ்க்கைப் பயணத்துக்கே தயாராக இருக்கும் உங்கள் காதலி சில ஆண்டுகள் கண்டிப்பாகக் காத்திருப்பார், காத்திருக்கத்தான் வேண்டும். அதுதானே காதல்!



எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x