Published : 24 Mar 2017 10:35 AM
Last Updated : 24 Mar 2017 10:35 AM

காதல் வழிச் சாலை 27: காதல் சொல்லும் நேரம் எது?

அந்தக் கல்லூரி மாணவியின் பதற்றம் அவர் எழுதியிருந்த கடிதத்திலேயே தெரிந்தது. “எனக்கு அவன் சீனியர். இன்னும் இரண்டு வாரங்களில் கடைசித் தேர்வும் முடிந்து கல்லூரியை விட்டுக் கிளம்பப் போகிறான். பாழாய்ப்போன மனசு கிடந்து அடித்துக்கொள்கிறது. ஒரு வருஷமாதான் அவனைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

எல்லா விஷயத்திலும் அவனைப் பிடிக்கிறது. எனக்கு அவன் நல்ல நண்பனும்கூட. இது ஈர்ப்பாக மட்டுமே இருக்கலாம் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் ஏன் காதலாக இருக்கக்கூடாது? அல்லது காதலைத் தெரிவிக்க எவ்வளவு காலம் பழகிப் பிறகு சொல்ல வேண்டும்? அவன் ஒரு பெண்ணைக் காதலிக்க, அவள் வேறொருவரின் பின்னால் சென்றுவிட்டாள். அந்த மன உளைச்சலில் இனி பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யும் முடிவோடு இருக்கிறான்.

இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் நான் காதலைச் சொல்வது? என்னை நிராகரித்துவிட்டால் இப்போது இருக்கும் நல்ல நட்பும் கெட்டுவிடுமா? நான் என்னதான் செய்வது?” என்று எழுதியிருந்தார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி.

காதல் உணர்வைப் பகுப்பாய்ந்து எப்போது, எப்படிச் சொல்ல வேண்டும் என்ற அளவுக்கு அவர் யோசிப்பதே ஆரோக்கியமானதுதான். எப்போது காதலைச் சொல்வது என்பது பலருக்கும் மண்டை குடையும் கேள்வியாகவே இருக்கிறது. அதற்கும் ஒரு சரியான நேரம் வேண்டும். உரிய நேரம் தவறி அவசரக் குடுக்கைத்தனமாக நேசத்தை வெளிப்படுத்துவது அடுத்தவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

அவசரப்படும் ஆண்கள்

ஆண், பெண் இருவரில் காதலை முதலில் சொல்வது பெரும்பாலும் ஆண்தான் என்கின்றன ஆய்வுகள். ஒரு பெண்ணைச் சந்தித்துப் பழகி, பிடித்துவிட்டால் 88 நாட்களில் ஒரு ஆண் தன் காதலைச் சொல்கிறான். ஆனால் பெண் தன் காதலை வெளிப்படுத்த சராசரியாக 134 நாட்கள் எடுத்துக்கொள்கிறாள் என்கிறது ஒரு ஆய்வு. நேசத்தைச் சொல்ல ஒரு பெண் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கும் மேலாக எடுத்துக்கொள்கிறாள்.

புற அழகின் வசீகரிப்பே ஆணின் முதல் மயக்கம். அவளை எப்படியாவது அடைய வேண்டும் அல்லது சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்பது அவனே அறியாதபடி ஆழ்மன எண்ண ஓட்டமாக இருக்கும். இனப்பெருக்கம் என்கிற உள்ளார்ந்த ரகசிய நோக்கத்தின் அடிப்படையில்தான் காதல் கொண்டுசெல்லப்படும் என்கிறது பரிணாம உளவியல் (Evolutionary psychology). இது இயல்பே. புறக்கவர்ச்சியின் அடிப்படையில் அணுகும் ஆண், தனக்கான நிரந்தரத் துணையாக இருப்பானா என்ற ஆழ்மனக் கேள்விகளை அசைபோடத்தான் பெண் சற்று நேரம் எடுத்துக்கொள்கிறாள். இவை பொதுவான கருத்துகளே தவிர உலகெங்கும் எல்லா ஆண்களும் பெண்களும் இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

காதல் பொதுவல்ல

வருடத்துக்கு ஒருவரை டேட்டிங் செய்து வாழ்க்கையைப் புரிந்துகொள்ள(!) முயற்சிப்பவர்கள் ஒரு நாட்டில் நிறைந்திருப்பார்கள். “கல்யாணமாவது வெங்காயமாவது… ஒரு வீட்டைப் பிடிப்போம். எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் சேர்ந்து வாழ்வோம். குழந்தையெல்லாம் பெற்றுக்கொள்ள வேண்டாம். எப்போது நாம் அசவுகரியமாக உணர்கிறோமோ அந்த நிமிடமே பிரிந்துவிடலாம்” என்ற ‘கோ ஹேபிச்சுவேஷன்’ முறை ஒப்பந்தத்தில் வாழ்பவர்களைக் கொண்ட நாடுகளும் உண்டு. முறைகள் மாறினாலும் நோக்கம் ஒன்றுதான்.

நாமிருவரும் சேர்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பதோடு முடிந்து விட்டால் இயற்கையின் இயக்கத்தை நாம் மறுதலிப்பது போலாகிவிடும். ஏனெனில் துணையைத் தேர்ந்தெடுப்பதும், அதைத் தக்கவைத்துக்கொள்வதும், அதன் மூலம் ஒரு சந்ததியை உருவாக்குவதும், உருவாக்கிய வாரிசை வளர்த்தெடுப்பதில் இருவரது சக்தியையும் முதலீடு செய்வதுமே வாழ்வின் ‘ஒன்லைன்’. அதற்கான ஆரம்பமே காதலெனும் மந்திர உணர்வு.

‘ஐ லவ் யூ’ சொல்லலாமா?

இப்போது அந்தக் கல்லூரி மாணவியின் விஷயத்துக்கு வருவோம். அன்புத்தோழி… உங்கள் சீனியரை உங்களுக்குப் பிடித்திருக்கிறது. சரி, திருமணம் அவரோடு சாத்தியமா? அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்கிறீர்கள். காதல் உணர்வு பீறிடும்போது இப்படி இருப்பது இயல்பே. திருமணம் உங்கள் குறிக்கோளா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். காரணம் நம் சமூகத்தில் மதம், இனம் தாண்டி தொழில், குடும்பம், பொருளாதாரம் போன்றவையும் திருமண வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளாகக் கருதப்படுகின்றன.

அவருடன் நல்ல நட்பில் இருப்பதால் இப்போதே பலமுறை அவருடன் உங்களைப் பல விதத்திலும் பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள். காரணம் இரண்டு பேருக்கும் ஒருங்கே காதல் வந்து அதை மேலெடுத்துச் செல்வது வேறு. உங்களுக்கு மட்டும் வந்து அதை இனிமேல்தான் அவரிடம் சொல்லப்போகிறீர்கள் என்பது வேறு. ஒரு குளத்தில் கல்லெறியப்போகிறீர்கள். முடிவை மட்டும் தீர்க்கமாக யோசித்து எடுத்துவிடுங்கள்.

அடுத்த கட்டம் கொஞ்சம் முக்கியமானது. இன்னும் நன்கு பழகுங்கள். சரியான தருணத்துக்காகக் காத்திருங்கள். பதற்றம் இல்லாமல் தொடங்குங்கள். “என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேளுங்கள். “உங்களை எனக்கு எல்லா விதத்திலும் பிடித்திருக்கிறது. நீங்கள் என்னுடன் இருந்தால் நம் இருவரின் வாழ்வும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. எப்படியும் நான் ஒருவரை மணக்கப்போகிறேன். அது ஏன் நீங்களாக இருக்கக் கூடாது? உங்களுக்கும் யாராவது ஒருவர் மனைவியாகப் போகிறார். அது நானாக இருக்க விரும்புகிறேன். இப்படிச் சொல்வதில் தவறேதும் இல்லை என்று தான் நினைக்கிறேன். உங்கள் எண்ணம் எதுவாக இருந்தாலும் நிதானமாக யோசித்துப் பதில் சொல்லுங்கள்” என்று அவரிடம் உங்கள் காதலைச் சொல்லுங்கள்.

‘ஐ லவ் யூ’ என்று சொல்வதுதான் சினிமாத்தனமானது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். பதற்றம் இல்லாமல் வார்த்தைகள் வரும். அதற்காகத் தாமதமாகவும் காதலைத் தெரிவிக்கக் கூடாது. அவசரத்தில் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் காதலைச் சொல்வதும் நல்லதல்ல. எது சரியான சந்தர்ப்பம் என்பதை உங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவும் முடியாது. இதுதான் காதலின் தனித்துவம்.

ஒருமுறைதான் காதல் வருமா?

“நான் அப்படித் தெரிவிக்கத் தயங்கி கடைசியில் அந்தப் பெண்ணுக்கு இன்னொருவருடன் திருமணம் நிச்சயமாகிவிட்டது. என்ன செய்வது... இப்போதுதான் அவளை முன்னைவிட அதிகமாக நேசிக்கிறேன்” என்று எழுதியிருக்கிறார் ஒரு இளைஞர். ஒருவரைக் காதலிப்பது, பின் அவரை அடைவது என்பதைத்தாண்டி ‘காதலித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதன் முடிவு பற்றியெல்லாம் கவலை இல்லை’ என்பதை இயல்பானதாகப் பார்க்க முடியாது. இவர்கள் காதல் என்பதைத்தான் காதலிக்கிறார்களே தவிர தங்கள் காதலியைக் காதலிக்கவில்லை. இவையெல்லாம் ஆரோக்கியமான காதலில் சேர்த்தி இல்லை.

எனவே சரியான தருணம் பார்த்து உங்கள் காதலைச் சொல்லிவிடுங்கள். உங்கள் நண்பர் ஏற்கெனவே காதல் தோல்வி அடைந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ‘முதல் காதலே முற்றுப் பெற்ற காதல். அடுத்து காதலைப் பற்றி சிந்திப்பதே அபத்தமானது. காதலின் இலக்கணத்துக்குப் புறம்பானது’ என்று நினைப்பதெல்லாம் முட்டாள்தனம். அறிவியலுக்கு எதிராக இந்தச் சமூகம் பயிற்றுவித்த தப்பர்த்தமே அது.

அதனால் முதல் காதலுக்குப் பிறகு நாம் இன்னொருவரையும் நேசிக்க முடியும் என்று அவர் சிந்திப்பதுதான் ஆரோக்கியமானது. அவருக்கு அதை நீங்கள் புரியவைக்க முயல்வதும் தவறில்லை. ஒரு பெண் குழப்பிவிட்டார் என்பதால் பெண்களின் காதலே கண்ணாமூச்சி விளையாட்டுதான் என்ற முடிவுக்கு மட்டும் அவர் வராதிருந்தால் போதும். பிறப்பு, இறப்பு என்ற இரண்டைத்தவிர இந்த உலகில் வேறு எல்லா விஷயங்களும் மறுபரிசீலனைக்கு உரியவையே என்பதை அவருக்கு உணர்த்துங்கள்.

ஆணோ, பெண்ணோ… அவர்களின் காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மகிழ்ச்சி. ஆனால் அது நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? பெரும்பாலான பெண்கள் காதலை எப்படி நிராகரிக்கிறார்கள்? ‘உங்களை நல்ல நண்பனாக நினைத்தேன்’ என்றோ, ‘சேச்சே உங்களை என் அண்ணன் மாதிரியில்ல நினைச்சிட்டிருந்தேன்’ என்றோ மன குண்டுகள் வீசப்படும்போது அதை எப்படி எதிர்கொள்வது? காதலை மறுப்பதிலும் ஒரு நளினம் இருக்கிறதா? மறுக்கப்படும் காதலை எதிர்கொள்வதிலும் ஒரு நாகரிகம் இருக்கிறதா? அவற்றைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x