Published : 17 Feb 2017 10:10 AM
Last Updated : 17 Feb 2017 10:10 AM

காதல் வழிச் சாலை 22: காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா?

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பள்ளி ஒன்றின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் இப்படி எழுதப்பட்டுள்ளது. ‘காதல், மாணவிகளின் வாழ்வை நிச்சயம் சீர்கெடுத்துவிடும். இந்தப் பள்ளி மாணவர்கள், காதல் விவகாரங்களில் ஈடுபடக் கூடாது’. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வகையான உணர்வுகளை இது எழுப்பலாம். ஆதரித்தும் மறுத்தும் பலரும் தங்கள் வாதத்தை முன்வைக்கலாம். ஆனால் இதைப் பற்றியெல்லாம் அந்தப் பள்ளி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

‘பதின்ம வயதில் காதல் வேண்டாம், அது நல்லதல்ல. படிப்பு கெட்டு, உடலும் உள்ளமும் கெட்டுப்போகும். நாங்கள் நிறைய பார்த்தாகிவிட்டது. நல்ல காதலும் வேண்டாம், கெட்ட காதலும் வேண்டாம்’ என்பதாகத்தான் அந்தப் பள்ளி நினைக்கிறது. நாடு வேறு, அதன் கலாச்சாரம் வேறு. அவர்களின் பிரச்சினைகளின் தாக்கம் வேறு. அதை நம் கலாச்சாரம், சமூக நடைமுறைகளோடு ஒப்பிடத் தேவையில்லை. ஆயினும் எந்த அளவுக்கு அங்கு சீரழிவுகள் அரங்கேறியிருந்தால் அந்தப் பள்ளி இப்படியொரு நடவடிக்கையை எடுத்திருக்கும்?

காதலும் போதையே

பெற்றோர்கள்தான் காலம் காலமாகக் காதலுக்கு எதிரியாக இருந்துவருகிறார்கள். இது போதாதென்று பள்ளி முதல்வர்களும் வில்லன்களாகிவிட்டார்களே. அப்படி என்ன பாவம் செய்துவிட்டது காதல்? ஏன் எதிர்க்கிறார்கள்? டீன் ஏஜ் வயதில் காதல் வருவது இயல்புதானே. எல்லாம் சரிதான். ஆனால் காதலை, போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் (addiction) மனநிலையோடு ஒப்பிடுகிறது உளவியல்.

அந்தப் பொருள் கிடைத்தால் அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்படுவதால் மீண்டும் மீண்டும் அது வேண்டும் என்ற ஏக்கமும், சதா அதைப் பற்றிய நினைப்பும் ஏற்படும். வேறு எல்லாவற்றையும்விட அந்தப் பொருளே பிரதானத் தேவையாகிவிடும். இந்த நிலையில் படிப்பு, பெற்றோர் உட்பட மற்றவையெல்லாம் இரண்டாம்பட்சமாகிவிடும். ஆனால் அந்தப் பொருள் கிடைக்காதபோது ஏற்படும் எதிர்மறை விளைவுகள் மிகவும் பாதிக்கக் கூடியவை. போதைப் பொருளாக இருந்தால் அந்த விளைவுகளை ‘withdrawal syndrome’ என்றும், காதல் போதை கிடைக்காமல் போனால் அதைக் காதல் தோல்வி, காதல் நோய் என்றும் ஒப்பிட்டு நோக்குகிறது உளவியல்.

வண்ணம் மாறலாமா?

காதல் ஒரு அடிமைத்தனம் என்பதை அறிவியலின் துணையோடு விளக்க முடியும். ஆனால் அந்தக் காதல்தான் மானுடவியலின் மையப்புள்ளி என்பதும் உயிர்களின் பெருக்கத்துக்கான இயற்கைச் சூத்திரம் என்பதும் மறுப்பதற்கல்ல. ஆனால் அந்தக் காதலின் வண்ணத்தை நம் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்வதுதான் பிரச்சினைகளுக்கு ஆணி வேர். ஆணுக்கு ஒரு பெண்ணைப் பிடிக்கிறது. கல்லைத் தூக்கியோ காளையை அடக்கியோ அவளைத் தனதாக்கிக்கொள்கிறான். அவள் என்றுமே எனக்குத்தான் என்பதைத் திருமணம் மூலம் உறுதி செய்துகொள்கிறான்.

பலதார மணங்களுக்கும் பலருடனான தொடர்புக்கும் வழிவகைகள் இருந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி எனபதையே நம் நாகரிகம் பரிந்துரைக்கிறது. காலப்போக்கில் பலதார மணங்கள் குறைந்துவருவதையும் நாம் பார்க்கிறோம். இயற்கையை மீறிய விஷயங்களை எல்லாரும் செய்து பார்க்க முடியும்.

ஆனால் அது விஷப் பரீட்சையே. உடலும் உள்ளமும் பாதிப்படையும். பாதிக்கப்படுவதே தெரியாதவாறு அது மெல்லமாக நிகழும். மது குடிக்க ஆரம்பித்தவுடனேயே கல்லீரல் கெட்டுப்போய் விடாது. புகைபிடிக்கத் தொடங்கியவுடனேயே புற்று நோய் வந்து விடாது. தவறு செய்ய வாய்ப்பும் வழியும் இருக்கிறது என்பதற்காக தவறு செய்துவிடக் கூடாது. செய்து கொண்டே இருக்கவும் கூடாது.

நேற்று யாரோ சிலர் செய்துவிட்டதனாலேயே இன்று நாமும் செய்யலாம் எனத் தலைப்படக் கூடாது. அந்த ஒரு தவறு, தொடர்ந்த பல தவறுகளுக்கான கதவை அகலத் திறந்து விட்டுவிடும். ஒருவனுக்கு ஒருத்தி என்பதாகத்தான் நம் உடலும் மனமும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. லேசான பக்கவாட்டு நீட்சிகள் பெரிய பாதிப்பை உண்டாக்காது என்றாலும் கால் போன போக்கில் பல காதல்கள் போய்விட்டதென்றால் உடல் பிறகு கெடும். உள்ளம் முதலில் கெடும்.

கொல்லும் முதல் காதல்

குடும்பத் தலைவி ஒருவர் எழுதுகிறார். “என் கணவருடன் நிம்மதியாக வாழ முடியவில்லை. அவருக்குத் துரோகம் செய்துவிட்டோமோ என்று மனம் பரிதவிக்கிறது. எனக்கு ஒரு காதலன் இருந்தான். பள்ளி இறுதி ஆண்டு படிக்கும்போது பழக்கம். இரவு நேரங்களில் நீண்ட நேரம் அவனுடன் பேசுவேன். கல்லூரி முதலாண்டு படிக்கும்போது நெருக்கம் அதிகமானது. விளையாட்டாகப் பேசத் தொடங்கி பின் தன் பேச்சை விரசமாகக் கொண்டுசெல்வான். சரி, இளம் வயதில் இதெல்லாம் இருக்கத்தானே செய்யும் என்று நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் ஒரு முறை என் வீட்டில் யாருமில்லாததை எப்படியோ தெரிந்து கொண்டு வந்துவிட்டான். தனிமையின் சுதந்திரத்தில் என்னிடம் எல்லை மீறப் பார்த்தான். நல்லவேளை நான் சுதாரித்துக்கொண்டேன். இருந்தும் அவன் என்னைச் சீண்டியதையும் என்னைத் தொட்டு எல்லை மீற முயன்றதையும் இன்றளவும் என்னால் மறக்கவும் முடியவில்லை; மன்னிக்கவும் முடியவில்லை.

என்னதான் பழகினாலும் காதலுக்கு ஒரு எல்லைக் கோட்டை நான் வகுத்துக்கொண்டிருந்தேன். இப்போது நானும் என் கணவரும் மகிழ்வாக இருக்கும் தருணங்களில் குற்ற உணர்வு என்னைப் பிடுங்கித் தின்கிறது. நான் நினைப்பது தேவையற்ற குழப்பச் சிந்தனை என்று எனக்கே தெரிகிறது. ஆனால் என் நிம்மதியைக் கெடுத்த என் முன்னாள் காதலனைப் பழி வாங்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது” என்று போகிறது அவர் எழுடிய கடிதம்.

ஆணுக்கு இல்லையா கற்பு?

கல்லூரி மாணவர் ஒருவர் தன் வேதனையை இப்படி வார்த்தைகளாக்கி யிருக்கிறார். “சார், அவளை மறக்க முடியவில்லை. ரெண்டு வருஷமா பழகினோம். இப்போ ரொம்ப சாதாரணமா இன்னொரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்கிறாள். அவளுக்குச் சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்த்து பத்திரிகை எல்லாம் அடிச்சிட்டாங்க. டக்குனு மனசை மாத்திக்கிட்டா சார்.

மத்ததையெல்லாம்கூட மறந்துடலாம். ஆனால் புருஷன் பொண்டாட்டியாவே பாவிச்சி நாங்க இருந்த அந்த நிமிடங்களை என்னால் மறக்கவே முடியலை. கற்பு ஆண்களுக்கும் உண்டுங்கிறதை நான் எப்படி நிரூபிப்பது? அவளை மனைவியாகப் பாவித்து, தொட்டுத் துலங்கிய என்னால் இன்னொரு பெண்ணை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லையே. இதைச் சொன்னால் ‘ஒரு பொண்ணு நானே அதையெல்லாம் மறக்கச் சொல்றேன். நீ ஆம்பளை தானே. ப்ராக்டிகலா இரு’ என்று சாதாரணமாகச் சொல்கிறாள்.

இப்போது என்னால் சுத்தமாகப் படிக்க முடியவில்லை. என் வேலையை வைத்துதான் என் குடும்பமே இயங்கப் போகிறது. என் நண்பனிடம் சொன்னால் என்னை புத்தி சரியில்லாதவனைப் போலப் பார்க்கிறான். அவளுடன் நிரந்தரமாக இருப்போம் என்றுதான் காதலோடு காமத்தையும் பகிர்ந்துகொண்டேன். இது தவறா? ஆண்கள் இப்படி நினைக்கக் கூடாதா?” என்று நீள்கிறது அவரது புலம்பல்.

ஆளுமை அவசியம்

அவரவர் காதலில் இருந்தவரைக்கும் இவர்கள் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பருவத் தீ பற்றிக்கொள்ள ஆரம்பித்தவுடன்தான் சிக்கல். விரல் பட்டதே பாவம் என்று நினைக்கும் ஒரு பெண். தாம்பத்ய சாகரத்துக்குப் பின்னும் என்னை ஏற்க மறுக்கிறாளே என்று ஒரு ஆண். இதற்கு மனநிலை (mindset) தான் காரணம் என்று சொல்லிக் கடந்துவிடலாம். ஆனால் உளவியல் இங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. நம் அடிப்படை ஆளுமை (personality), பிரச்சினைகளைக் கையாளும் திறன், வளர்க்கப்பட்ட விதம், குடும்பம் மற்றும் சமூக முன்மாதிரிகள், குடும்ப உறுப்பினர்களிடையே இலைமறை காயாகத் தொடர்ந்து வரும் உளவியல் கோளாறுகள் என்று பலவற்றைச் சார்ந்துதான் காதல் பற்றிய நமது கோணமும் அணுகுமுறையும் அமையும்.

படிக்கும் வயதில்தான் இந்தக் காதல் விவகாரங்கள் விஸ்வரூபமெடுக்கும். காதல் வெற்றியா தோல்வியா என்பது வேறு விஷயம். நாம் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்களில்தான் காதல் வந்து குறுக்கே நிற்கும். அதையும் சமாளித்து, படிப்பிலும் வென்று, வாழ்க்கையிலும் வெல்லும் தெம்பும் திறனும் இருந்தால் காதலியுங்கள். இல்லையென்றால் உங்கள் வாழ்வில் காதல் ஒரு கத்திரிக்காயாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.



எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x