Published : 20 Jan 2017 11:41 AM
Last Updated : 20 Jan 2017 11:41 AM

காதல் வழிச் சாலை 18: நெருப்பை விழுங்கி அன்பைத் தரும் காதல்

நான் என் வேலையைக் காதலிக்கிறேன், என் ஊரைக் காதலிக்கிறேன், என் வீட்டுச் செல்ல நாய்க்குட்டியைக் காதலிக்கிறேன்... பலரும் இப்படிப் பல விதங்களில் தங்கள் நேசத்தை வெளிப்படுத்துவார்கள். இதுபோன்ற உணர்வுகளும் காதல்தான் என்றாலும் ஆணும் பெண்ணும் நேசிப்பதைத்தான் ‘ரொமான்டிக் லவ்’ (Romantic love) என்கிறோம். ஆம், இது கொஞ்சம் ஸ்பெஷல்தான்.

இந்த ரொமான்டிக் காதலில் விழுந்தால் நாம் எப்படி உணர்வோம்? ஆளைப் பார்த்ததுமே ஏற்படும் கிளர்ச்சி, படபடப்பு, வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி போன்ற இன்ன பிற சமாச்சாரங்களை மட்டும் நான் சொல்லவில்லை. அதி அற்புதமான, மிகவும் அழகான, உணர்வுகளுக்கெல்லாம் ஆசானாக இருப்பதும் இளமையின் மிகப்பெரும் நன்கொடையுமான காதலின் வெளிப்பாடு எப்படி இருக்கும்?

ஆளே மாறிடுவீங்க

காதலுக்கு முன், காதலுக்குப் பின் என்று உங்கள் வாழ்க்கையே இரண்டு அத்தியாயங்களாகப் பிரிந்துவிடும். அதை நீங்களே உணர்வீர்கள். இல்லையென்றால் உங்கள் குடும்பத்தாரோ, உற்ற நண்பர்களோ அந்த மாற்றங்கள் குறித்து உங்களிடமே சொல்லக்கூடும். உங்கள் தனித்தன்மையான பிம்பமே (self image) மாறிவிடும் அதிசயம் காதலில்தான் சாத்தியம். அவரின் நட்பு உங்களிடம் ஒரு பெரிய நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுதான் உண்மைக் காதல்.

கொண்டாடித் தீர்ப்பீர்கள்

நீங்கள் தோல்வியடைந்த ஒரு விஷயத்தில் உங்களவர் வெற்றி பெற்றுவிட்டால் அந்த வெற்றியை அப்படிக் கொண்டாடுவீர்கள். உங்களால் முடியாத ஒன்றை அவர் சாதித்துக் காட்டினால் உங்களுக்குக் கொஞ்சம்கூடத் தாழ்வு மனப்பன்மை வராது. மாறாக அவரைப் பார்த்துப் பெருமையும் பெருமிதமும்தான் பொங்கும்.

அறிமுகம் பரவசம்

என் தேர்வு எப்படி என்பதைக் காட்டுவதற்கு மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்துவைப்பதற்காகவும் அவரை உங்கள் வீட்டுக்கு அழைப்பீர்கள். அந்த வசந்த அழைப்புகளின் அர்த்தம் என்ன தெரியுமா? உங்கள் உறவும் நட்பும் உங்களவரை விரும்பி நட்புப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம்தான். ஒரு உறவு மிகவும் வலுவாகப் பிணைக்கப்படுவதற்குச் சொந்த பந்தங்களின் அரவணைப்பும் அவசியம்தானே.

எதிலும் இழப்பில்லை

காதலில் விழுந்துவிட்டோம் என்பதற்காகக் குடும்பம், நண்பர்கள், வேலை, கடமை என எதையும் புறந்தள்ள மாட்டீர்கள். மாறாக முன்பைவிட இன்னும் மகிழ்வுடன் உழைக்கவும் சம்பாதிக்கவும் தொடங்குவீர்கள். ஆரோக்கியமான காதல், சந்தேகத்துக்கும் சங்கடங்களுக்கும் அப்பாற்பட்டது. அவருக்கான நேரத்தை அவருக்குத் தரும் அதே சமயம் மற்றவர்களுக்கான நேர முதலீட்டிலும் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டீர்கள்.

மிஸ் பண்ணுவீங்க

உங்களவர் அருகில் இல்லாத போதோ, சில நாட்கள் பார்க்க முடியவில்லை என்றாலோ அவரை ‘மிஸ்’ பண்ணுவீர்கள். காதல் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறதோ அவ்வளவு தூரத்திற்கு அந்தப் பிரிவுணர்வும் கூடுதலாக இருக்கும். ஆனால் அதில் பதட்டம் இருக்காது, பயம் இருக்காது, பரிதவிப்பு மட்டுமே இருக்கும்.

சுதந்திரம் இருவர் உரிமை

ஒவ்வொருவருக்கும் ஒரு சுதந்திர வெளி இருக்கிறது. காதலிக்கிறோம் என்பதற்காக அந்தத் தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது. அப்படி மூச்சு முட்டும்படி ஆதிக்கம் செலுத்துவது ஆரோக்கியமான காதலாக இருக்காது. அப்சஸிவ் (obsessive) காதலாகத்தான் இருக்க முடியும்.

சேர்ந்தே யோசிப்பீர்கள்

இனி உங்களுக்கெனத் தனியான விடுமுறை இல்லை. தனியாக ஊர் சுற்றத் தோன்றாது. தனி ஷாப்பிங் இல்லை. சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும் என்றாலும் உங்களவரை யோசிக்காமல் எதுவும் செய்ய மாட்டீர்கள். உங்கள் இருவர் நலனும் எல்லா இடத்திலும் சேர்ந்தே யோசிக்கப்படும், முன்னிறுத்தப்படும்.

விட்டுக்கொடுத்தல் சுகம்

சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டால் அந்தக் கணமே அதைத் தூக்கி வீசிவிடுவார்கள். ஆரோக்கியமான காதல் அதற்கான சக்தியைக் கொடுக்கும். உங்களுக்கு என்று சேமித்து வைத்திருக்கும் தொகையின் மூலமாக அவருக்கு ஒரு அவசரத் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டிய சூழலில் புன்முறுவலுடன் அதைச் செய்வீர்கள். அவர் குடும்பத்துப் பிரச்சினைகளை உங்கள் வீட்டுப் பிரச்சினை போல நினைத்து தீர்த்துவைக்க நினைப்பீர்கள். தன்னலம் தாண்டியதே உண்மைக் காதல் என்பதை உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் காரியங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டே இருப்பீர்கள்.

பொறாமைக்கும் இடம் உண்டு

காதலில் பொறாமையும் அவசியமே. அந்தச் சிறு அளவிலான ‘பொஸஸிவ்னெஸ்’ (possessiveness) காதலுக்கு ஆரோக்கியமானதே. ஆனால் எள்ளளவும் சந்தேகம் இருக்காது. எத்தனை நாட்கள் பிரிந்திருந்தாலும் எத்தனை பேருடன் பழகுவதற்கான வாய்ப்பும் உங்களவருக்கு இருந்தாலும் பரவாயில்லை. அவர் மேல் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை நீங்களே நினைத்தாலும் அசைந்து கொடுக்காது. அதுதான், அந்த நம்பிக்கைதான் உண்மைக் காதலுக்கான இலக்கணம்.

வன்முறை இல்லாதது

முகர்ந்தால் வாடிவிடுகிற அனிச்ச மலரைவிட மென்மையானது காதல். இதுவரை இருந்த உங்கள் முரட்டுத்தனம் மாறும். பொய்ப் பித்தலாட்டங்கள் குறையும். ஆடை அணிவதிலிருந்து சாப்பிடும் உணவுவரை உங்களவரால் சீரமைக்கப்படும். அந்த மாற்றங்கள் நம்மை மேலும் மெருகேற்றும், நாகரிகப்படுத்தும் என்பதால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதில் நமக்கும் எந்தச் சிரமமும் இருக்காது. கருத்து வேறுபாடுகள் எழாமல் இருக்க முடியாது. சின்னச் சின்னதாய் சண்டைகள் வரும். ஆனால் காதலில் வன்முறை மட்டும் இருக்கவே இருக்காது.

கை ஓங்கப்படலாம். ஆனால் அடிக்க மனம் வராது. பல்லைக் கடிக்கலாம், சொல்லைக் கொட்டலாம். ஆனால் எதுவுமே எல்லை மீறாது. உன்னைக் காப்பேன் என்பதை ஆழ்மனதில் வகுத்துக்கொண்டு நம்மை நம்பி வாழ்க்கைத் துணையாய் வந்த ஒருவரை உடலால் தாக்குவது வன்முறையே. அப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவருக்கு ஏதோ ஒரு வகையில் மனநலம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். வேண்டாம் என்று மறுத்துவிட்ட பெண்ணைத் துரத்தித் துரத்தித் துன்புறுத்துவதும், நடுத்தெருவில் கீழே தள்ளி நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து இருபத்தோரு முறை கத்தியால் குத்திக் கொல்வதும் காதலின் பெயரால் நடப்பது எத்தனை அருவருப்பானது.

கால மாற்றத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். பருவ மழை பொய்த்துப் போகலாம். தை பிறந்தும் வழி பிறக்காமல் போகலாம். அத்தைக்குக்கூட மீசை முளைக்கலாம். ஆனால் காதலின் குணமும் மணமும் என்றென்றைக்கும் மாறவே மாறாது.



எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x