Published : 18 Nov 2016 10:55 AM
Last Updated : 18 Nov 2016 10:55 AM

காதல் வழிச் சாலை 09: காதலும் போதையைப் போன்றதே!

நமது மூளையில் ‘ரிவார்டு சென்டர்’ (Reward centre) என்றொரு இடம் இருக்கிறது. இன்பகரமான விஷயங்கள், நம்மை மதிமயக்கிக் குஷிப்படுத்தி வேறு லெவலுக்கு அழைத்துச் செல்லும் சமாச்சாரங்கள் போன்றவற்றின் மையம் இது. டோபமைன் (Dopamine) என்னும் சந்தோஷ வேதிப்பொருள் கையாளப்படும் இடம் இது. மனதில் உற்சாகம் கரைபுரளும்போது இந்த டோபமைன் அதிகமாகச் சுரக்கும். போதைப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் உச்சம் என்பது இந்த ரிவார்டு சென்ட்ரில்தான் பதிவாகிறது. காதலும் ஒரு வகை போதைதானே… அதனால் இதற்கும் இந்த ரிவார்டு சென்டர்தான் பட்டறை!

தீவிரமாகக் காதலித்துக் கொண்டிருக்கும் சிலரையும், அதிதீவிரக் காதல் அகாலத் தோல்வியடைந்ததால் மனம் வெறுத்திருக்கும் சிலரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூளையை ஆய்வு செய்வதற்காக அந்த இரு தரப்பினருக்கும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பதிவு செய்யப்பட்டது. முதல் பிரிவினருக்கு அவர்கள் கட்டுண்டு கிடக்கும் இனிய இதயத்தின் ஒளிப்படமோ காணொலியோ காண்பிக்கப்பட்டது. தங்கள் மனதுக்கினியவரைக் கண்டதும் அவர்கள் மூளையில் குறிப்பிட்ட ஒரு பகுதி பளபளவென்று மின்னத் தொடங்கியது. டோபமைன் வெள்ளமெனச் சுரந்தது.

உற்சாக வெள்ளம்

உச்சக்கட்ட போதையில் இருக்கும்போது ரிவார்டு சென்டர் தூண்டப்படுவதைப் போலவே காதலில் தீவிரமாகவும் ஆழமாகவும் இருப்பவர்களின் ஸ்கேன் ரிப்போர்ட் இருந்தது. அதே சமயம் காதல் தோல்வியடைந்தவர்களின் ஸ்கேன் வேறு மாதிரி இருந்தது. ஒளிப்படத்தைப் பார்த்ததும் முதலில் பரவசமடைந்தார்கள். உடனே ரிவார்டு மையம் சுறுசுறுப்பானது. டோபமைன் சுரந்தது. ஆனால், அதேநேரத்தில் மூளையின் வேறு சில ஏரியாக்களும் பளீரென்று ஒளிரத் தொடங்கின. எண்ணச் சுழற்சிக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எந்த மூளைப்பகுதி காரணமோ, அதே பகுதி இவர்களுக்கும் செயல்பட்டது. அவர்களுடைய காதலன்/ காதலியின் நினைவலைகளிலேயே இவர்கள் நீந்திக்கொண்டிருக்கின்றனர் என்பதை அந்த ஸ்கேன் ரிப்போர்ட் நிரூபித்தது.

இது மட்டுமல்ல… செரடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருள் பற்றியும் ஆராய்ந்தனர். எண்ணச் சுழற்சிக் கோளாறாலோ மனச்சோர்வு நோயினாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செரடோனின் அளவு குறைந்திருக்கும். அதேபோல காதல் விவகாரங்களில் சிக்கியவர்களுக்கும் குறைவான அளவிலேயே செரடோனின் இருப்பதை நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

நினைத்தாலே இனிக்கும்

ஒரே நேரத்தில் நாம் இரு வேறு மனநிலைகளைப் பெற்றிருக்க முடியுமா? அது சாத்தியமா? கஷ்டம்தான். காதலித்தவரைக் கண்டதும் வந்த மகிழ்ச்சி என்பது கடந்தகாலம். அது நினைத்தாலே இனிக்கும் வசந்த காலம்! ஆனால் அந்த துர்பாக்கியமான தோல்வி அவ்வளவு சீக்கிரம் விட்டுப்போகிறதா என்ன?

காதலித்துக்கொண்டிருக்கும் போதும் எண்ணச் சுழற்சிதான். அது தோல்வியுற்றுத் துன்புறும்போதும் எண்ணச் சுழற்சிதான்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காதல் நோய் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவிசென்னா (Avicenna), பன்முகத்திறமை கொண்ட பாரசீக அறிஞர். இன்றைய உஸ்பெகிஸ்தான் நாடுதான் அவரின் தாய்வீடு. இஸ்லாம் கண்ட மிகப் பெரும் ஞானிகளுள் ஒருவர். மனநலம், காதல், ஆன்மா பற்றியெல்லாம் அப்போதே தனது ஆய்வு முடிவுகளைப் பதிவுசெய்து வைத்திருக்கிறார். எலும்பும் தோலுமாக வந்த நோயாளிக்குச் சிகிச்சை அளித்தது பற்றி இப்படி எழுதுகிறார். “நீண்ட கால நோயில் சக்தியிழந்து வந்தவரைப் பார்த்தேன்.

அவையனைத்தும் காதல் கோளாறின் அறிகுறிகள் என்பதைப் புரிந்துகொண்டேன். அவரது நெஞ்சுக்கு நெருக்கமானவரைச் சென்று அடைந்ததும் என்ன ஆச்சரியம்… புத்துணர்ச்சியுடனும் புதிய உத்வேகத்துடனும் அவர் மாறியதைக் கண்டேன். ஆச்சரியப்பட்டேன். ஆக மனிதனின் ஆரோக்கியம் என்பது அவனது மனதின் கட்டுப்பாட்டிலும் அதற்குக் கீழ்ப்படிந்தும்தான் இருக்கிறது”.

அவிசென்னா சொன்னது இன்றைக்கும் பொருந்தும். மனம் என்று தனியாக ஒரு உறுப்பு இல்லை. மூளையின் செயல்பாடுகளே மனதின் வெளிப்பாடுகள் என்பது நாமறிந்ததே. மனமும் உடலும் பின்னிப் பிணைந்த ரெட்டை வாழைகள். ஒன்றன் சோகம் இன்னொன்றைத் தாக்கும் என்பதெல்லாம் நிரூபிக்கப்பட்ட மருத்துவ உண்மைகள்.



“தோல்வியின் சோகம் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளலாமா என்று யோசிக்கிறேன்” என்று வந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து அந்த இளைஞரிடம் பேசினேன். “பல வருடங்களாகக் காதலித்தோம் சார். கொஞ்சம் ஜாலியான பொண்ணு அவங்க. ஆண்களோடு இயல்பாகப் பழகுவார். சமூக வலைத்தளங்களில் ‘ஆக்டிவ்’ ஆக இருப்பார். முகம் தெரியாத ஆண் நண்பர்களை நம்பி வீட்டு முகவரி எல்லாம் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்துகொள்வார். ஒரு முறை தன் புதிய நண்பர் என்று சொல்லி, ஒரு பையனுடன் நெருக்கமாக நின்றுகொண்டிருக்கும் போட்டோவைப் பதிவிட்டார்.

கொஞ்சம் கட்டுப்பாடு வேண்டும் என்று அப்போதே எச்சரித்தேன். என்னுடன் பழகிக்கொண்டிருக்கும்போதே இரண்டு முறை பெண் பார்க்கும் வைபவம் நடந்திருக்கிறது அவர் வீட்டில். அதில் ஒரு பையனைத் தேர்ந்தெடுத்து அவருடன் ‘சாட்’ செய்திருக்கிறார். எதேச்சையாக அவரது மொபைலைப் பார்த்தபோது இது எனக்குத் தெரியவந்தது. கேட்டதற்குப் பெரியவர்கள்தான் பார்க்கிறார்கள் என்றார். கொஞ்ச நாள் கழித்து எனக்கு வேலை இல்லை, செட்டில் ஆகவில்லை, எப்படிக் கல்யாணம் செய்வது என்று சாதாரணமாகக் கேட்டார். அதிர்ந்து விட்டேன். நம்ப மாட்டீங்க சார். என் மேல அவ்வளவு லவ்வா இருந்தா…” என்று சொல்லிவிட்டு விசும்பத் தொடங்கினார்.

ஒருவாறு சமாளித்துக்கொண்டு, “ஓப்பனா சொல்றேன் சார். ரெண்டு முறை டேட்டிங் போனபோது எங்களுக்குள் எல்லாமே நடந்துவிட்டது. ‘அதையெல்லாம் கனவா நினைச்சு நானும் மறந்துடறேன். நீயும் மறந்துடு’ன்னு சொல்றா சார். எப்படி சார் இதைத் தாங்குறது?” என்றவர் அழுதேவிட்டார். தற்போது அந்தப் பெண்ணுக்குத் திருமணம் முடிந்து வளைகுடா நாடொன்றில் செட்டில் ஆகிவிட்டார். இங்கே இந்த இளைஞர் மனச்சோர்வின் எல்லைக்கே போய்விட்டார். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் என்பதே, அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் இவருக்குத் தெரியவந்ததாம்.

காதலின் கோணல் கோலங்களில் இதுவும் ஒன்று. பிராக்டிக்கலாக இருக்கிறோம் என்று அந்தப் பெண் பிரிந்து சென்றுவிட்டார். காதலிக்கும் நபரையேதான் திருமணம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் பழங்கதையாகி வருகிறது. பார்க்கலாம், பழகலாம், முடியவில்லை என்றால் பிரியலாம் என்ற மனநிலை பரவலாக இருக்கிறது. பழகும்போது ஏற்படும் உணர்வுரீதியான நெருக்கத்தில் இந்த இளைஞர் அவரை மனைவியாகவே பாவித்துவிட்டார். அவர் காதலுக்குக் கொடுத்திருக்கும் இடம் அப்படி. ஆனால், அந்தப் பெண் இவரை நிறையக் குழப்பிவிட்டார். தனி ஒருவரின் ஒழுக்கம், காதலின் ஓர் அங்கமில்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது இவர் கதை.

காதலி பிரிந்து சென்றுவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. அதைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது. காலப்போக்கில் அந்த இளைஞர் வேறொரு காதலையும் சந்திக்கலாம். காதலைத் தெரிவு செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் அவர் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். காதல் வேகமாகப் பிறக்கலாம். ஆனால், அதை வளர்த்தெடுப்பதற்கு நாளாகும். அதில் இருவரின் பங்கும் அவசியமே. சமமான பங்கு மட்டுமே காதலை ஆரோக்கியமாக்கும்.

பின் குறிப்பு: அந்த இளைஞருக்கு உளவியல் ஆலோசனை தரப்பட்டது. மருந்துகள் உட்பட தீவிர உளவியல் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார். தற்போது தேறிவருகிறார்.

காதலில் ஏன் தோற்கிறோம்?

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x