Published : 24 Jul 2015 02:23 PM
Last Updated : 24 Jul 2015 02:23 PM

உறவுகள்: அம்மாவும் அம்மாவைப் போன்ற பெண்களும்

எனக்கு 27 வயது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண். பெற்றோர் இருவரும் வேலை பார்க்கிறார்கள். எனக்குத் தம்பிகள் இருவர். எனது பிரச்சினை என் அம்மாதான். எனது ஏழு வயதிலிருந்தே என் அம்மா என்னிடம் மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறார். அவருக்கு நான் உதவவில்லை என்றும், அவர் இழிவாகக் கருதும் உறவினர் களுடன் பழகுகிறேன் என்று கூறியும் என்னை அடிக்கிறார். தந்தையுடன் சண்டை என்றாலும் எனக்கு அடிதான் கிடைக்கும். சில வேளைகளில் தகாத சொற்களில் என்னைத் திட்டுவார்.

எனது 12 வயதில் என் கஸினுடன் பேசிக்கொண்டி ருந்ததற்காக என்னைக் கடுமை யாகத் திட்டினார். அதிலிருந்து நான் எதிர் பாலினத்தினர் யாரும் என்னிடம் பேசினாலே அதைத் தவிர்த்துவிடுகிறேன். அம்மாவின் மோசமான பேச்சுக்கள் என்றாலே எனக்கு மிகவும் பயம். எனக்கும் அவருக்கும் எல்லா விஷயங்களிலும் முரண்பாடுதான்.

விசேஷ நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்துகொண்ட போது ஓர் இளைஞர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அதை நான் தவிர்த்துவிட்டேன். ஆனால், அவர் விடாமல் என்னையே பார்த்தபடியே இருந்தார். இதைக் கவனித்த என் அம்மா வீட்டுக்கு வந்த பின்னர் அவர் யாரெனக் கேட்டு படாத பாடு படுத்திவிடார்.

அம்மாவால் எனக்கு ஏற்படும் எந்தப் பிரச்சினையிலும் அப்பா தலையிட மாட்டார். வேலை காரணமான அழுத்தத்தால் தம்பிகள் முன்னிலையில் இப்போதும் என்னை அடிக்கிறார். அழுதால் ஆறுதல்கூட சொல்ல மாட்டார். அதுதான் கொடுமையானது. போலி அழுகை என்று வேறு குற்றம்சாட்டுவார். மோசமாகத் திட்டுவார். எனவே அவர் முன்னால் அழாமல் இருக்க முயல்வேன். அப்பாவுடனான அவரது சண்டைக்கு என்னைக் காரணமாகக் காட்டுகிறார். அம்மாவின் எல்லாத் தவறுகளுக்கும் என்னைக் காரணம் சொல்கிறார். அப்பாவுக்கும் எனக்குமான உறவைச் சிதைக்க முயல்கிறார்.

என்னால் யாருடனும் சரியான உறவைப் பேண முடியவில்லை. வளர்ந்த பின்னர் என் அம்மாவின் குணம் எனக்கும் வந்துவிடுமோ, என் பிள்ளைகளிடம் மோசமாக நடந்துகொள்வேனோ எனப் பயமாக இருக்கிறது. ஆனால் நான் அப்படி இருக்க விரும்பவில்லை. எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். என் தனிப்பட்ட திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆசைப்படுகிறேன். நான் உளவியல் ஆலோசகரைப் பார்க்க வேண்டுமா?

என் அருமைத் தோழியே! அம்மாவால் ஏற்படும் வேதனைகள் உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதைப் புரிந்துகொள்கிறேன். இங்கு ஒரு தாய், மகளை வெறுப்பதாக மகள் நினைக்கிறாள் என்றால் பின்னணியில் தாய்க்கு ஏதாவது பாதிப்பு இருக்கலாம் என்று தோன்றுகிறது! முழு விவரமும் தெரிந்துகொள்ளாமல் நான் அறிவுரை சொல்வது தவறு. இருந்தாலும் சில கேள்விகள் உங்களைச் சிந்திக்க வைக்கலாம். உங்கள் அம்மாவுக்கு உணர்வுப்பூர்வமான பாதுகாப்பின்மை (emotional insecurity) இருக்கலாமோ? நீங்கள் பிறந்ததும் அப்பா உங்களிடம் அதிகம் பாசம் காட்டியதால் அப்படி உணர்கிறாரோ? மகள் தன்னிடமிருந்து தன் கணவரைப் பறித்துக்கொண்டுவிட்டாள் என்று நம்புகிறாரோ? உங்கள் கடிதத்தில் உள்ள ஒரு வரி என்னை இப்படி யோசிக்க வைத்தது! (‘அப்பாவுக்கும் எனக்குமான உறவைச் சிதைக்க முயல்கிறார்.’)

சில அம்மாக்கள் மகளைக் கணவனுடன் தவறாக இணைத்துக்கூட சந்தேகப்படுவார்கள்! சில சமயம் தன்னை மீறி மகளிடம் பாசம் வெளிப்படும்; அவசர அவசரமாக அதைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள்! நான் ஊகித்தது சரியென்றால் பிரச்சினை உங்கள் அம்மாவுக்குத்தான். மனநல மருத்துவ சிகிச்சை அவருக்குத் தேவை. சரியில்லை என்றால் அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரிந்துகொள்ள மேலும் விவரங்கள் தேவை.

அவர் இப்படி நடந்துகொள்வதால், உங்களது தன்னம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு ஏற்படுகிறது. உங்கள் வாழ்க்கையை அவர் சொல்படி நடத்துகிறீர்கள்! இது நிறுத்தப்பட வேண்டும். ஆண்களிடம் பேசுவதற்கே இப்போது பயந்தால், மணமான பின் ஒரு ஆணுடன் நெருக்கமாகப் பழக வேண்டுமே! என்ன செய்யப்போகிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் அவரது பாதிப்புகள் இல்லாமல் சுதந்திரமாக இயங்க ஒரு மனநல ஆலோசகரின் உதவியை நாடுங்கள்.

எனக்கு வயது 26, திருமணமாக வில்லை. இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவன். கிராமப்புறத்தைச் சேர்ந்தவன். பள்ளி கல்லூரிகளில் நன்றாகப் படித்து தற்போது பொறுப்பான அரசுப் பணியில் உள்ளேன். என் தாயைத் தவிர வேறு பெண்ணிடம் அவ்வளவாகப் பேசியதில்லை; பழகியதுமில்லை. தற்போது நகரத்தில், அலுவலகத்தில் வயதில் மூத்த பெண்களுடன் பணிபுரிகிறேன். இப்போது இதுநாள் வரை இல்லாத ஒரு உணர்வு ஏற்படுகிறது. அலுவல் நிமித்தமாகச் சந்தித்த பெண்கள் இரவில் கனவில் வருகிறார்கள்.

பெரும்பாலும் பாலியல்ரீதியான கனவுகளே வருகின்றன. மேலும் மறுநாள் அவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் அந்தக் கனவுகள் நினைக்கு வர, குற்ற உணர்வால் நிம்மதியின்றித் தவிக்கிறேன். என் தாய் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர் என்பதால் நாகரிகம் என்று எதிலும் ஆர்வம் காட்டாதவர். கல்லூரியில் நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டுதான் எனக்குப் பெண்களின் உள்ளாடை அறிமுகம் ஆனது. தற்போது நகரத்தில் என் அம்மா வயதை ஒட்டிய பெண்களைச் சந்திக்கும்போதுகூட அவர்கள் அணியும் உள்ளாடை பற்றியான வக்கிரமான எண்ணங்கள் தோன்றுகின்றன. என் மனதில் பெண்களின் உள்ளாடை பற்றிக் கிளர்ச்சியான, வக்கிரமான எண்ணங்களே வருகின்றன.

இந்த எண்ணங்களைத் தவிர்க்க நான் புத்தகம் படிப்பது, இசை கேட்பது என மனதை மாற்றிக் கொண்டாலும் பொது இடங்களில் பெண்களின் முதுகில் தென்படும் உள்ளாடையின் பட்டைகள் தெரிந்தாலே எனக்கு வக்கிரமான எண்ணங்கள் வருகின்றன. இதைத் தவிர்க்க நான் என்ன செய்வது?

பெண்களின் உள்ளாடை பற்றிய கற்பனையால் அதைத் திருடி, தொட்டுப் பார்த்து பின் அதே இடத்தில் வைத்துவிடுவேன். இதனால் நான் குற்றவுணர்வால் துடிக்கிறேன். இயல்பாக நல்ல சூழ்நிலையில் வளர்ந்த நான் பெண்களின் உள்ளாடை பற்றிய தவறான எண்ணங்களில் சிக்கித் தவிக்கிறேன் இது மனநோயா? இதிலிருந்து விடுபடுவது எப்படி?

நண்பரே! பரவலாக நாம் கவனிக்கும் விஷயம்-ஒரு பெண்ணின் அங்கங்களும் உள்ளாடையும் இளைஞர்களுக்கும், மணமான ஆண்களுக்கும் (கூட!) ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். இது சரியோ, தவறோ இந்தப் பழக்கம் எந்த விதத்திலும் அவர்களுக்குப் பாதகம் விளைவிக்காமலிருந்தால், பிரச்சினையில்லை. ‘ஃபெட்டிஷிஸம்’ (Fetishism) எனும் பாலியலில் பிறழ் நடத்தை (sexually deviated behaviour) உள்ளவர்கள் பெண் சம்பந்தப்பட்ட ஒரு பொருளைப் பார்த்தவுடன் பாலியல் கிளர்ச்சியோடு நிற்காமல் பாலியல் உறவு கொண்டாற்போன்ற ஒரு உச்சகட்டத்துக்கே போய்விடுவார்கள்.

ஒரு பெண்ணின் உள்ளாடை/ கைப்பை/ காலணிகள் போன்ற பொருட்களை நுகர்வது, தொட்டுப்பார்ப்பது போன்ற செயல்கள் அவர்களைப் பாலுணர்வின் உச்சிக்குக் கொண்டுசெல்லும். உளவியல் மருத்துவக் கணிப்பின்படி இந்தப் பழக்கம் அவர்களது தினசரி வாழ்க்கையிலும், பாலியல் உறவிலும் குறுக்கிடாதவரை இதை நோய் என்று முத்திரையிடத் தேவையில்லை. வேறு எதிலுமே கவனம் செலுத்த முடியாமலிருப்பதும், தாம்பத்திய உறவில் கிடைக்கும் நிறைவை, உடலுறவு கொள்ளாமல் இந்தப் பழக்கத்தில் தேடிக்கொள்வதும் ஒரு நபரை ‘ஃபெட்டிஷ்’ (fetish) நோயாளியாக்குகிறது.

உங்களுக்கு ‘ஃபெட்டிஷ்’ (fetish) பொருட்கள் இப்படி ஒரு நிறைவைக் கொடுப்பதாகத் தெரிகிறது. இது தொடர்ந்தால், திருமணமானபின் மனைவியுடன் உடலுறவு கொள்வதில் நாட்டமில்லாமல் ‘ஃபெட்டிஷ்’ (fetish) பொருள்களில் திருப்தி அடைவீர்கள். தன்னை நீங்கள் அவமானப்படுத்துவதாக உங்கள் வருங்கால மனைவி நினைப்பார்!

மனதில் பதுங்கிக் கிடக்கும் வக்கிரத்தைக் கண்டு கொண்டதாலும், சமூக அங்கீகாரம் கிடைக்கப்பெறாத ஒரு செயலைச் செய்துகொண்டிருப்பதாலும் குற்றவுணர்வு உங்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது. பெரும்பாலும் ஆண்களுக்கே வரும் இந்த பிறழ் நடத்தைக்கு உளவியல் ஆலோசனை அவசியம் தேவை. உங்களுக்கு மருந்து தேவையென்று உளவியல் ஆலோசகர் கருதினால் மனநல மருத்துவரிடம் அனுப்புவார்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x