Last Updated : 07 Jun, 2014 12:00 AM

 

Published : 07 Jun 2014 12:00 AM
Last Updated : 07 Jun 2014 12:00 AM

ஆயி மண்டபம்: மக்கள் தொண்டுக்கு அரச கெளரவம்

புதுச்சேரி சட்டப்பேரவை எதிரேயுள்ள பாரதி பூங்காவில் அழகாய் அமைந்துள்ளது ஆயி மண்டபம். பல திரைப்படங்களில் இந்த மண்டபத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். இம்மண்டபம்தான் புதுச்சேரி அரசுச் சின்னமும்கூட. பொதுவாக இம்மாதிரியான மண்டபங்கள் எதற்காகக் கட்டப்பட்டன என்பது காலப்போக்கில் மறைந்து அதன் அழகிற்காக மட்டும் நினைவுகூரத் தக்கதாக மாறிவிடும். இந்த மண்படமும் அப்படித்தான் ஆகிவிட்டது. கிரேக்க - ரோமானியக் கட்டிடக் கலையின் கூட்டு அழகுடன் கலையம்சத்துடன் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் எதற்காகக் கட்டப்பட்டது என்பது நம்மில் பெரும்பாலானவருக்குத் தெரியாது. இதற்குப் பின்னால் அசாதாரணமான ஒரு வரலாறு உண்டு.

16-ம் நூற்றாண்டு வாக்கில் தென் இந்தியாவின் பெரும்பகுதி பேரரசர் கிருஷ்ணதேவராயரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அந்தச் சமயத்தில் அவர் தனது ஆட்சி இடங்களைப் பார்வையிட விரும்பினார். அப்படிப் பயணம் செல்லும் வழியில் வேலூர் பயணத்தை முடித்துவிட்டு புதுவை உழவர் கரையிலுள்ள தனது ஆதரவாளர் உய்யகுண்ட விசுவராயரைப் பார்க்க வந்தார். அப்போது புதுச்சேரி முத்தரையர்பாளையத்தில் இருந்த ஒரு கோயிலைப் பார்த்துப் பிரமித்துப் போய்க் கைகூப்பி வணங்கியுள்ளார். கிருஷ்ணதேவராயரின்

இந்தச் செயல் அங்கிருந்து மக்களுக்கு வியப்பாக இருந்தது. இளைஞர்கள் சிலர் மறைந்து லேசாகத் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். ஒரு முதியவர் மட்டும் அரசனிடம் தயக்கத்துடன், “நீங்கள் கைகூப்பி வணங்கும் இந்த இடம் கோயில் இல்லை. அது ஒரு தாசி இல்லம்” என்றார். அரசருக்குக் கோபமும் அவமானமும். அந்த மாளிகையை உடனடியாக இடிக்க உத்தரவிட்டார்.

கோயிலுக்குரிய அமைதியுடனும் அழகுடனும் மிளிர்ந்த மாளிகையின் உரிமையாளர் ஆயி என்னும் தேவதாசி ஆவார். அவர் அந்த மாளிகையைப் பார்த்துப் பார்த்து அழகுறக் கட்டியிருந்தார். அரசர் தன் மாளிகையை இடிக்க உத்தரவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தான் நேரில் சென்று முறையிட்டால், அரசர் மனம் இறங்குவார் என நினைத்தார். அதுபோல அரசனிடம் சென்று, “தயவுகூர்ந்து மாளிகையை இடிக்க வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், அரசர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

கடைசியில் ஒரு வழியாக மாளிகையை இடிக்க ஆயி ஒத்துக்கொண்டார். ஆனால் தான் ஆசையாகக் கட்டிய மாளிகையைத் தானே இடிப்ப தாகவும், அதற்குக் கால அவகாசம் வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதன் பேரில் அதை அரசர் ஏற்றார்.

அரசன் ஆணைப்படி ஆயி தனது மாளிகையை இடித்தார். ஆனால் அந்த இடத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில் தனது சொந்தச் செலவில் ஒரு ஏரியை, உருவாக்கினார். அந்த ஏரி அன்றிலிருந்து இன்று வரை புதுவை மக்களுக்கு முக்கியமான நீராதாரமாக இருந்துவருகிறது.

அதன் பின்னர் 18-ம் நூற்றாண்டில் புதுவையில் பிரெஞ்சுக்காரர்கள் வேரூன்றினர். கடற்கரைக்கு அருகில் உள்ளதால் புதுவையில் எங்கும் உப்புநீர்தான் கிடைத்தது. தண்ணீர்ப் பிரச்சினை பிரெஞ்சுக் காலனி ஆட்சியாளர்களுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. இப்பிரச்சினையைத் தீர்க்க அப்போதைய கவர்னர் போன்டெம்ப்ஸ் பிரெஞ்சு அரசுக்குக் கடிதம் எழுதினார். அதையடுத்து மூன்றாம் நெப்போலியன் உத்தரவின் பேரில் பொறியாளர் லாமைரெஸ்சே தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் புதுச்சேரி வந்தார்.

அவர் ஆயி வெட்டிய முத்தரையர்பாளையம் ஏரியில் இருந்து நீளமான வாய்க்கால் வெட்டி தற்போதைய பாரதி பூங்கா வரை கால்வாய் அமைத்தார். ஆயி ஏரியிலிருந்து அக்கால்வாய் மூலம் புதுவை நகருக்குத் தண்ணீர் வந்தது. புதுவையின் நீண்ட நாள் பிரச்சினை தீர்ந்ததால் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மகிழ்ச்சி.

ஆயி குளத்தின் பின்னணி குறித்து பிரெஞ்சு அரசர் மூன்றாம் நெப்போலியனுக்கு தெரியவந்து அவர் ஆச்சரியம் அடைந்தார். தாசி குலத்தில் பிறந்து தனது விருப்பமான மாளிகையை மன்னர் உத்தரவால் இடித்துவிட்டு மக்களுக்காக ஏரியை வெட்டிய ஆயியின் சிறப்பை பிரெஞ்சு அரசர் வியந்தார். ஆயிக்குச் சிறப்புசெய்ய அரசர் விரும்பினார். அதன்படி ஆயிக்கு நினைவு மண்டபத்தை எழுப்பினார்.

வெள்ளை நிறத்தில் பார்ப்போரைக் கவரும் விதத்தில் அமைந்தது ஆயி மண்டபம். பிற்காலத்தில் ஆயி மண்டபத்தைச் சுற்றி பாரதி பூங்கா அமைந்தது. மக்கள் தொண்டு மூலம் பல நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் நினைவில் வாழும் ஆயியின் நினைவு மண்டபம்தான் சுதந்திரம் பெற்ற புதுவையின் அரசுச் சின்னமாகவும் ஆகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x