Last Updated : 25 May, 2016 12:24 PM

 

Published : 25 May 2016 12:24 PM
Last Updated : 25 May 2016 12:24 PM

வாண்டு பாண்டு: குட்டிப் பசங்களின் பெரிய சாதனை!

வாண்டு: மனசிருந்தா மார்க்கமுண்டு... மனசிருந்தா மார்க்கமுண்டு..

பாண்டு: என்னப்பா, ஏதோ உனக்குள்ள பேசிக்கிட்டு வர மாதிரி இருக்கு.

வாண்டு: ஏன் சொல்ல மாட்ட. உனக்கு ஒரு விஷயத்தை நினைச்சுக்கிட்டே வந்தேன். அது நான் தனியா பேசிக்கிட்டு வர மாதிரி இருக்கா?

பாண்டு: சரி, கோச்சுக்காத. என்ன விஷயத்தைச் சொல்லனும்னு நினைச்ச. அத முதல்ல சொல்லு.

வாண்டு: இரண்டு கால்களே இல்லாத ஒரு சிறுவன் கிரிக்கெட் விளையாட்டில் சக்கைப்போடு போடுறான். உனக்குத்தான் கிரிக்கெட்னா ரொம்ப பிடிக்குமே. அதான் உன்கிட்ட அதைப் பத்தி சொல்லனும்னு வந்தேன்.

பாண்டு: மாற்றுத் திறனாளி கிரிக்கெட் போட்டியில விளையாடுறானா அந்தச் சிறுவன்?

வாண்டு: மாற்றுத் திறனாளிகள் விளையாடுற கிரிக்கெட் இல்ல. நீ எப்படி விளையாடுவியோ அதுபோலத்தான்.

பாண்டு: ரெண்டு கால்களும் இல்லாம எப்படி விளையாட முடியும்? யார் அந்தச் சிறுவன்?

வாண்டு: இங்கிலாந்துல இருக்குறான் அந்தச் சிறுவன். அவனோட பேரு ஹார்வி பாரி. சின்ன வயசுல நோயால பாதிக்கப்பட்டதால ரெண்டு கால்களையும், கை விரல்களையும் அந்தச் சிறுவனுக்கு எடுத்துட்டாங்க. அவனுக்கு விளையாட்டு மேலே ரொம்ப ஆசை. அதுவும் கிரிக்கெட்னா உசுரு.

- மில்லா பிஸோட்டோ

எப்படியும் கிரிக்கெட் விளையாடனும்னு செயற்கைக் கால்களைப் பொருத்திக்கிட்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சான். நிறைய போட்டிகள விளையாடி நிறைய ரன் எடுத்திருக்கான்.

பாண்டு: ஓ... செயற்கைக் கால் பயன்படுத்தி விளையாடுறது ரொம்ப கஷ்டமா இருக்குமே. எப்படித்தான் அந்தச் சிறுவன் விளையாடுறானோ.

வாண்டு: கரெக்ட். நீ இப்படி யோசிச்ச மாதிரி இங்கிலாந்துல இருக்குற செயற்கைக் கால் தயாரிக்குற நிறுவனமும் யோசிச்சிருக்கு. அந்தச் சிறுவனுக்காக ‘பயோனிக் கிரிக்கெட்’ கால்களைத் தயாரிச்சுக் கொடுத்திருக்கு. உண்மையிலேயே கால் இருந்தா எப்படி விளையாடுவாங்களோ, இப்போ அதுபோல விளையாட ஆரம்பிச்சுட்டான் ஹார்வி.

பாண்டு: ஓ... அப்போ இங்கிலாந்துல ஒரு கிரிக்கெட் வீரர் உருவாக ஆரம்பிச்சுட்டான்னு சொல்லு.

வாண்டு: ஆமா பாண்டு. பயோனிக் கால்களைப் போட்டுட்டு விளையாட ஆரம்பிச்சவுடனே, இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடி சாதனை படைக்கனும்னு, அதுதான் தன்னோட ஆசைன்னும் சொல்லியிருக்கான். அதனாலத்தான் மனசு இருந்தா மார்க்கமுண்டுன்னு சொன்னேன். இப்போ புரியுதா?

பாண்டு: புரியுது... புரியுது... ஹார்வி மாதிரி சாகசங்களைச் செய்யுற இன்னொரு சிறுமியைப் பத்தி நான் சொல்லட்டுமா?

வாண்டு: யார் அந்தச் சிறுமி? அப்படி என்ன சாசகத்தை செஞ்சிட்டா?

பாண்டு: அமெரிக்காவுல ஃப்ளோரிடாவுல வசிக்குறா மில்லா பிஸோட்டோ. அவளுக்கு ஒன்பது வயசுதான் ஆகுது. இந்த வயசுலேயே ராணுவ வீரர்கள் செய்யுற எல்லா சாசகப் பயற்சிகளையும் செய்யுறாப்பா.

வாண்டு: ராணுவ சாகசப் பயிற்சினா?

பாண்டு: அதான்பா, முள்கம்பி பந்தலுக்கு அடியில் ஊர்ந்துபோறது, பெரிய சுவர்கள்ல ஏறுவது, உயரத்திலிருந்து குதிப்பது, கயிற்றைப் பிடிச்சுக்கொண்டு வேகமாக மேலே ஏறுவதுன்னு ராணுவ வீரர்கள் பயிற்சி செய்யுவாங்களே. அதுதான்.

வாண்டு: அது சரி, மில்லா ஏன் இந்தச் சாகசங்களைச் செய்யுறா?

பாண்டு: அது பின்னால ஒரு கதையே இருக்குப்பா. மில்லா நாலாம் வகுப்பு படிக்குற வரைக்கும் ரொம்ப அமைதியாத்தான் இருந்திருக்கா.

யார்கிட்டேயும் பேசக்கூட மாட்டாளாம். இதனால கூடப்படிக்குற பசங்க, மில்லாவை ரொம்ப கேலி செய்வாங்களாம். வீட்டுக்கு வந்தா எப்போ பார்த்தாலும் இதைப் பத்திதான் யோசிப்பாளாம். கூடப் படிக்குற பசங்களுக்கு ஏதாவது பதிலடி கொடுக்கனும்ணு நினைப்பாளாம்.

வாண்டு: ஓ... இது ஸ்கூல்ல படிக்குறப்ப எல்லோருக்குமே நடக்குறதுதானே..

- ஹார்வி பாரி

பாண்டு: நீ சொல்றது உண்மைதான். நாமெல்லாம் இதை ரொம்ப பெருசா எடுத்துக்கமாட்டோம். ஆனா, மில்லா அப்படியில்லை. அவுங்க அப்பா உடற்பயிற்சி மையம் நடத்துறாரு. இந்தப் பிரச்சினைப் பற்றி தன்னோட அப்பாகிட்ட மில்லா பேசியிருக்கா. தான் பெரிய சாகசக்காரின்னு நிரூபிக்கணும்னு சொல்லியிருக்கா.

அந்த நேரத்துல அவளோட அப்பா போர் பயிற்சி செஞ்சுக்கிட்டு இருந்திருக்காரு. அவளும் அந்தப் பயிற்சியைச் செய்ய ஆசையா இருப்பதாகச் சொல்லியிருக்கா. அதுக்கு அவுங்க அப்பாவும் ஒத்துக்கிட்டாரு.

வாண்டு: அதெல்லாம் சரி, இதனால அவளுக்கு என்ன உபயோகம்?

பாண்டு: உபயோகம் இல்லாமலா? வாரத்துல 5 நாள்னு தினமும் 3 மணி நேரம் இப்படிப் பயிற்சி செஞ்சிருக்கா. ஆறு மாதங்கள் கழிச்சு போர் பயிற்சி சம்பந்தமான ஒரு போட்டியில மில்லா கலந்துகிட்டா.

ரொம்ப கஷ்டமான இந்தப் போட்டியில, ராணுவத்துல செய்யுற ரொம்ப கஷ்டமான எல்லாப் பயிற்சிகளையும் போட்டியில் செஞ்சு காட்டியிருக்கா. ரொம்ப கஷ்டமான 25 இலக்குகளை 24 மணி நேரத்தில் கடந்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைச்சுருக்கா மில்லா.

வாண்டு: ஓ... ரொம்ப சமத்தான பொண்ணா இருப்பா போல..

பாண்டு: ஆமாப்பா. யாருகூடயும் பேசாம இருக்குற பொண்ணா இவ்ளோ சாதனைகளைச் செஞ்சுருக்கான்னு ஊரே அவளை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடுது. இதனால பள்ளிக்கூடம் முழுக்க ரொம்ப பிரபலம் ஆயிட்டா.

கேலி, கிண்டல் பேசுன மில்லாவோட கூடப் படிக்குற பசங்க இப்போ அவளோ ஃபேன் ஆயிட்டாங்க. வர ஆகஸ்ட் மாசம் ஹவாய் தீவுல நடக்க இருக்குற இன்னொரு கடினமான சாகசப் போட்டியிலையும் மில்லா கலந்துக்கப்போறாளாம்.

வாண்டு: கூடப் படிக்குற பசங்க செஞ்ச கேலி, கிண்டல் இந்தக் குட்டிப் பொண்ணைப் பெரிய ஆளா ஆக்கியிருச்சுன்னு சொல்லு.

பாண்டு: ஆமா வாண்டு. ஆனா, அது மட்டுமே காரணம்னு சொல்லிட முடியாது. கடினமான பயிற்சிகளைச் செய்ய அவ எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பா.

வாண்டு: உண்மைதான். கஷ்டப்பட்டதால கைமேலே பலன் கிடைச்சுருக்கு. சரி பாண்டு, இன்னைக்கு சாயங்காலம் நாம ரெண்டு பேரும் விளையாடப் போவோமா?

பாண்டு: சரி வாண்டு. இப்போ நான் வீட்டுக்குப் போறேன்.

வாண்டு: டாட்டா, பை...பை...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x