Last Updated : 31 Aug, 2016 11:22 AM

 

Published : 31 Aug 2016 11:22 AM
Last Updated : 31 Aug 2016 11:22 AM

வாண்டு பாண்டு: ஆசிரியர்களுக்கு என்ன பரிசு தரலாம்?

பாண்டு: என்னா வாண்டு, ஏதோ கவலையா இருக்குற மாதிரித் தெரியுதே.

வாண்டு: ஆமாப்பா, வர்ற திங்கள்கிழமை (செப்டம்பர் 5-ம் தேதி) பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாதுல்ல. அதான் கொஞ்சம் கவலையா இருக்கேன்.

பாண்டு: அப்படி என்ன கவலைப்பா?

வாண்டு: அன்னைக்கு விநாயகர் சதுர்த்தினால பள்ளிக்கூடம் லீவு இல்லையா? ஆனா, அதே நாள்லதான் ஆசிரியர் தினமும் வருது. அதான் கவலையா இருக்கேன்.

பாண்டு: வழக்கமா ஆசிரியர் தினத்தன்னைக்கு ஆசிரியர்களுக்கு ரோஸ் கொடுக்குறது, கலை நிகழ்ச்சிகள் நடத்துறதுன்னு நீ கலக்குவியே.

வாண்டு: ஆமாப்பா. காரணத்தை கரெக்டா சொல்லிட்ட.

பாண்டு: இதுக்கு ஏன் கவலை, ஆசிரியர் தினத்தை முன்னாடியே கொண்டாடலாம். முன்னாலயே அவுங்களுக்குப் பரிசு கொடுக்கலாம்.

வாண்டு: பரிசா?

பாண்டு: ஆமாப்பா. இந்தியால மட்டுமில்ல. உலகத்துல பல நாடுகள்லையும் ஆசிரியர் தினம் கொண்டாடுறாங்க. அங்கல்லாம் கலை நிகழ்ச்சிகள் நடத்துறதெல்லாம் கிடையாது. நம்மள மாதிரிப் பசங்கள்லாம் சேர்ந்து ஆசிரியர்க்குப் பரிசு கொடுக்குறாங்க.

வாண்டு: ஓ... பரிசு கொடுப்பாங்களா? என்ன மாதிரிப் பரிசு கொடுப்பாங்களாம்?

பாண்டு: நீ நினைக்குற மாதிரி நினைவு பரிசா அது இருக்காது. ஆசிரியர் - மாணவருக்கும் உள்ள உறவைக் காட்டுற மாதிரி எளிமையான பரிசைப் பசங்க கொடுக்குறாங்க. உதாரணத்துக்கு, கிரையான்களைப் பரிசா கொடுப்பாங்களாம். அதுல ஒவ்வொரு வண்ணத்துல கிரையான் இருக்குமில்லையா? நம்மள மாதிரிப் பசங்களோட வாழ்க்கையை வண்ணமயமா மாத்துறதுல ஆசிரியர்களுக்கு நிறையப் பங்கிருக்குல்ல. அதை உணர்த்துற மாதிரி கிரையான்களைத் தருவாங்களாம்.

வாண்டு: அட ஆமால்ல, கிரையான்களுக்குப் பதிலா ஸ்கெட்ச்கூடத் தரலாம் இல்லையா.

பாண்டு: ஆமா, வண்ணத்தை உணர்த்துற மாதிரி இருக்கணும், அவ்ளோதான். பசுமையைக் குறிக்குற மாதிரியும்கூடப் பரிசு கொடுப்பாங்களாம். நாம படிச்சு கொஞ்சம் கொஞ்சமா வளர்றதை உணர்த்துற மாதிரி ஆசிரியர்களுக்குச் செடி அல்லது மரக்கன்றையும்கூட கொடுக்குறதும் உண்டாம்.

வாண்டு: இதுகூட நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. சரி, இதெல்லாம் உனக்கு யாரு சொன்னா? வேற எந்த நாடுகள்ல ஆசிரியர் தினம் கொண்டாடுறாங்களாம்?

பாண்டு: எங்க மாமாத்தான் சொன்னாரு. நம்ம நாட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர் தினமா கொணாடுற மாதிரி, 92 நாடுகள்ல வெவ்வேறு காரணங்களுக்காக ஆசிரியர் தினம் கொண்டாடுறாங்க. வருஷம் பூராவும் ஒவ்வொரு மாசத்துல எங்காவது ஒரு நாட்டுல ஆசிரியர் தினம் கொண்டாடிக்கிட்டுத்தான் இருக்காங்க.

வாண்டு: ஓ... இவ்ளோ நாடுகள்ல கொண்டாடுறாங்களா?

பாண்டு: இவ்வளவு ஏன்? உலக ஆசிரியர் தினம்கூடக் கொண்டாடுறாங்க. அக்டோபர் 5-ம் தேதி உலக அளவுல கொண்டாடுறாங்க. ஆனா, 1997-ம் வருஷத்துல இருந்துத்தான் இந்தத் தினத்தைக் கொண்டாடுறாங்க. கல்விப் பணிக்கு ஆசிரியர்களின் பங்களிப்பை எடுத்துச் சொல்ற விதமா யுனெஸ்கோ ஏற்பாட்டுல இந்த நாளைக் கொண்டாடுறாங்க. ஆனா, நம்ம நாட்டுல 1962-ம் வருஷத்துல இருந்தே செப்டம்பர் 5-ம் தேதியன்னைக்கு தேசிய ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிட்டு வர்றோம்.

வாண்டு: ஆசிரியர் தினத்தைப் பத்தி நிறைய சொல்லியிருக்க. அப்புறம், நம்மள மாதிரிக் குட்டிப் பசங்க நினைச்சா எதையும் சாதிக்கலாம்னுன்றதுக்கு ஒரு நிகழ்வு நடந்துச்சே, அதைக் கேள்விப்பட்டியா?

பாண்டு: அப்படி என்ன நிகழ்வு அது?

வாண்டு: நாகை மாவட்டம் வேதாரண்யத்துல மாணவன் ஒருவனுக்கு அவன்கூடப் படிக்குற பசங்க சேர்ந்து கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்காங்க. தேத்தாகுடின்ற ஊருல அகத்தியன்னு ஒரு பையன் அரசுப் பள்ளிக்கூடத்துல 8-ம் வகுப்பு படிக்கிறான். ரொம்ப ஏழைப் பையனாம். வீட்டுல தனியா கழிப்பறைகூட இல்லையாம். பொதுவெளியைத்தான் பயன்படுத்துறானாம். இதனால, அடிக்கடி நோய் தொற்று ஏற்பட்டு அகத்தியனுக்கு உடம்பு முடியாம போச்சாம். இதுக்குப் பொதுவெளியில மலம் கழிக்கிறதுதான் காரணம்னு தெரிய வந்துச்சாம். அதனால் அகத்தியனுக்காக அவனோட வீட்டுல கழிப்பறை கட்டக் கூடப் படிக்குற ராகுல், ஹரிஸ், வசீகரன், நவீன்ராஜ்ன்னு 4 பேரும் முடிவு பண்ணியிருக்காங்க. இதுக்காக மற்ற பசங்ககிட்ட 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் இவுங்க பணம் வசூல் செஞ்சிருக்காங்க. அந்தப் பணத்துல கட்டுமானப் பொருட்கள வாங்கி, கட்டிடத் தொழிலாளியை வைச்சு அகத்தியன் வீட்டுல புதுசா கழிப்பறை ஒன்றைக் கட்டிக் கொடுத்திருக்காங்களாம்.

பாண்டு: ஐயோ! கேட்குறப்பவே சந்தோஷமா இருக்கே. ரொம்ப சமத்து பசங்களா இருக்காங்களே.

வாண்டு: ஆமா, என் ஃபிரெண்டை வீட்டுக்கு வரச் சொல்லிட்டு உங்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனே. நான் கிளம்புறேன்.

பாண்டு: சரிப்பா, டாட்டா!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x