Published : 17 Dec 2014 11:28 AM
Last Updated : 17 Dec 2014 11:28 AM

முட்டையும் காற்றும்

நீங்கள் ஸ்கூலுக்கு போகும்போது அவசர அவசரமாக இங்க் பாட்டிலை எடுத்து பேனாவுக்குள் மையை நிரப்புவீர்கள் இல்லையா? அதற்கு எதைப் பயன்படுத்துவீர்கள்? இங்க் ஃபில்லரை அல்லவா? அது எப்படி வேலை செய்கிறது? வாங்க, அதை ஒரு சிறிய சோதனை செய்து தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்

ஓடு நீக்கிய அவித்த முட்டை, 50 மில்லி லிட்டர் கூம்புக் குடுவை, கற்பூரம், தீப்பெட்டி, சிறிய கரண்டி

சோதனை:

1. கூம்புக் குடுவையின் வாயில் அவித்த முட்டையை வைத்து கையால் அழுத்திப் பார்க்கவும். முட்டை தானே உள்ளே போகாது. முட்டை உள்ளே செல்வதற்கு ஒரு எளிமையான வழி இருக்கிறது.

2. சிறிய கரண்டியில் இரண்டு அல்லது மூன்று கற்பூரங்களை வைத்து அவற்றைக் கொளுத்துங்கள். இப்போதுதான் மேஜிக் தொடங்குகிறது. கரண்டியில் எரியும் கற்பூரத்தை அப்படியே கூம்புக் குடுவைக்குள் போடவும்.

3. இப்போது ஓடு நீக்கி அவித்த முட்டையை கூம்புக் குடுவையின் வாய் மீது வைக்கவும். என்ன நடக்கிறது என்று பாருங்கள். முட்டை ‘டமால்’ என்ற ஓசையுடன் குடுவைக்குள் போய்விட்டதா? அட, இப்போது மட்டும் முட்டை குடுவைக்குள் எப்படிச் சென்றது?

அதற்கு காரணம் இருக்கிறது. ஒரு பொருள் எரிவதற்கு ஆக்ஸிஜன் தேவை இல்லையா? குடுவைக்குள் இருந்த ஆக்ஸிஜனை கற்பூரம் எரிவதற்கு எடுத்துக் கொண்டுவிட்டது. இதனால் குடுவையினுள் காற்றின் அழுத்தம் குறையும். மேலும் குடுவைக்குள் கற்பூரம் எரியும்போது காற்றின் மூலக்கூறுகளையும் சேர்த்து வெப்பப்படுத்துகிறது. இதனால் காற்றின் மூலக்கூறுகள் ஒன்றை விட்டு ஒன்று தள்ளிச் செல்கின்றன. சூடான காற்று சிறிதளவு குடுவையை விட்டு செல்கிறது. கற்பூரம் அணைந்ததும் காற்று மூலக்கூறுகள் குளிர்ச்சியடைந்து அருகே வருவதால் குடுவைக்குள்ளே பாதி வெற்றிடம் (Partial Vacucum) ஏற்படுகிறது. இப்போது குடுவைக்கு வெளியே உள்ள காற்றழுத்தம், குடுவைக்குள் இருக்கும் அழுத்தத்தைவிட அதிகமாக இருக்கும். இந்த அழுத்தம் வேறுபாட்டினால் வெளிக் காற்று ஒரு விசையுடன் முட்டையை குடுவையினுள் தள்ளி விடுகிறது.

அது சரி, முட்டை உள்ளே செல்லும்போது டமால் என்று ஒலி ஏற்பட்டதே, அதெப்படி? குடுவைக்குள் கற்பூரம் எரிய ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு விடுவதால், வெற்றிடம் உருவாகிறது இல்லையா? இப்போது வெற்றிடத்தை நிரப்புவதற்காக வெளியே உள்ள காற்று மிக வேகமாக குடுவையின் வாயினுள் நுழையும். அப்போது காற்றின் மூலக்கூறுகள் அதிர்வடைகின்றன. இதனால்தான் ‘டமால்’ என்ற பெரிய ஒலி ஏற்படுகின்றது.

இச்சோதனையின் மூலம் காற்றுக்கு அழுத்தம் உண்டு என்பதை புரிந்துகொள்ளலாம். இங்க் ஃபில்லரை பாட்டிலில் வைத்து, குப்பியின் மேற்பகுதியை அழுத்தும்போது குப்பியினுள் உள்ள காற்று வெளியே சென்றுவிடுகிறது. இதனால் குப்பியினுள் காற்றின் அழுத்தம் குறைகிறது. வெளியே உள்ள வளிமண்டலக் காற்று குப்பியினுள் உள்ள அழுத்தக் குறைவை சமப்படுத்துவதற்கு மையை அழுத்தி, மை நிரப்பும் குப்பிக்குள் செலுத்துகிறது. இதன்பின்னர் மை நிரம்பிய இங்க் ஃபில்லரை வெளியே எடுத்து பேனாவை நிரப்பிவிடலாம் இல்லையா?

காற்றுக்கு அழுத்தம் உண்டு என்கிற கருத்தின் அடிப்படையில்தான் சொட்டு மருந்து குப்பி, உறிஞ்சுக் குழல், மருந்து ஊசி, அடி பம்ப் ஆகிய பொருட்களும் வேலை செய்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x