Last Updated : 24 May, 2017 11:36 AM

 

Published : 24 May 2017 11:36 AM
Last Updated : 24 May 2017 11:36 AM

புதுப் புத்தகத்துக்கு ஜீன்ஸ் அட்டை!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. புதிதாக வாங்கிய நோட்டு, புத்தகங்களை முகர்ந்து பார்த்து மாணவர்கள் மகிழும் தருணம் இது. அதைவிடப் புத்தகங்களுக்கு அழகாக அட்டை போட்டு தினுசு தினுசான லேபிள் ஒட்டுவதில் சிறார்கள் ஆர்வம் காட்டுவார்கள். வழக்கமாக பிரவுன் கலர் காகிதத்தில் அட்டை போடுவது சிறார்களின் வாடிக்கை. ஆனால், இப்போது ஜீன்ஸ், பனியன் எனத் துணிகளில் அட்டை போடும் அளவுக்கு வசதிகள் வந்துவிட்டன. இந்தத் துணி அட்டைகள் தண்ணீரில் நனையாது என்பது ஆச்சரியம்.

உங்கள் அம்மா, அப்பா பள்ளியில் படித்த காலத்தில் செய்தித் தாள்களில் அட்டை போடுவதுதான் பழக்கம். லேபிள் ஒட்ட வேண்டுமென்றால் வெள்ளைத் தாளைச் சிறியதாக வெட்டி ஒட்டிவிடுவார்கள். பிறகு பிரவுன் கலர் அட்டை, பேப்பர் அட்டை, பசையுடன் கூடிய லேபிள் எனக் காலத்துக்கு ஏற்ப அட்டைகள் அறிமுகமாயின. ஆனால், இப்போது புதிதாக அறிமுகமாகியுள்ள துணி அட்டைகளில் பசை தடவ வேண்டியதில்லை. ஒட்ட வேண்டியதில்லை. குழந்தைகளை இழுத்துப் பிடித்துச் சட்டை போடுவதுபோல புத்தகங்களுக்கும், இந்தத் துணி அட்டையை இழுத்துப் பிடித்துப் போர்த்திவிடலாம்.

உங்களுக்கு மிகவும் பிடித்த நோட்டு, புத்தகங்களுக்கெல்லாம் ஆடை உடுத்தும் புதிய உத்தியை உருவாக்கியவர் கோவையைச் சேர்ந்த சங்கரசுப்பு பிச்சை. இவர் நவீன அச்சுத் துறையில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார். 5 மாதங்களுக்கு முன்பு நடந்த புத்தகக் கண்காட்சியின்போது இந்தப் புதுவித உத்தியுடன் கூடிய துணி அட்டையை அறிமுகப்படுத்தினார் அவர். எதற்காக இந்த முயற்சி என அவரிடம் கேட்டோம்.

“2 ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் மனைவியும் அமெரிக்கா போயிருந்தோம். அங்கே பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நோட்டுப் புத்தகங்களுக்கு விநோதமான இந்தத் துணி அட்டையைப் பயன்படுத்தியதைப் பார்த்தேன். இதை ஏன் இங்கு பயன்படுத்திப் பார்க்கக் கூடாது என்று நினைத்தேன். இப்போது பள்ளி திறக்கும் காலம் என்பதால் நோட்டு புத்தகங்களுக்கு ஏற்ற இந்தத் துணி அட்டையை அறிமுகப்படுத்தினேன். பார்ப்பதற்கு நம்ம ஊர் பனியன் போல உள்ள இந்தத் துணி அட்டை, உண்மையில் பனியன் துணி அல்ல. இது பேப்ரிக் வகையைச் சேர்ந்தது. தண்ணீரில் நனையாது. கிழியாது. அச்சிட்டால் அழியாது” என்கிறார் சங்கரசுப்பு.

இப்போது இதே துணியைப் பயன்படுத்தி ஒரு புத்தகம் முழுமைக்கும் பயன்படுத்த ஒரு மாதிரி உறையைத் தயாரித்துவருகிறார் இவர். அந்த அட்டையைப் போட்ட பிறகு நோட்டோ புத்தகமோ தண்ணீருக்குள் விழுந்தாலும் ஒன்றும் ஆகாதாம். அதை சிறிது நேரம் காய வைத்தால் போதும். எதுவும் ஆகாது. தண்ணீரில் நனையாத இந்தத் துணி அட்டைகள் செய்வதில் சங்கரசுப்பு ஈடுபட்டுள்ளார்.

நோட்டு, புத்தகங்களுக்கு இப்படியொரு பாதுகாப்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x