Last Updated : 24 May, 2017 11:10 AM

 

Published : 24 May 2017 11:10 AM
Last Updated : 24 May 2017 11:10 AM

தினுசு தினுசா விளையாட்டு: ராணியின் வளையலை எடுத்தது யார்?

“யப்பா… வெயில் இந்தக் கொளுத்து கொளுத்துதே. இதுல பிள்ளைக எப்படி வெளியே போய் விளையாடுறது!”

நல்ல கேள்விதான்; விளையாட்டு என்றதுமே மைதானத்தில், வெட்டவெளியில் விளையாடும் விளையாட்டுகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன. வீட்டிற்குள்ளேயோ அல்லது வெளித் திண்ணையிலோ உட்கார்ந்தபடி விளையாடும் விளையாட்டுகளும் நிறைய இருக்கின்றன.

அப்படியான விளையாட்டுகளில் சேர்ந்து விளையாடும்போது, குழந்தைகளுக்குக் கூடுதலாக இன்னொரு திறனையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாரம் நாம் விளையாடப்போகும் விளையாட்டின் பெயர் ‘ராணியின் வளையலை எடுத்தது யார்?’.

தமிழகம் முழுவதும் இந்த விளையாட்டை வேறுவேறு பெயர்களில் விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டில் பங்கேற்கும் குழந்தைகள் எல்லோரும் கணக்குப் போடும் திறனையும் கற்றுக்கொள்வார்கள்.

எப்படி விளையாடுவது?

இருபால் குழந்தைகளும் சேர்ந்து விளையாடலாம். 10, 12 குழந்தைகள் வரை சேர்ந்து விளையாடலாம்.

முதல் போட்டியாளர், ‘உத்திப் பிரித்தல்’ இப்படி எதுவும் இந்த விளையாட்டில் இல்லை. நேரடியாக விளையாடலாம்.

ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக்கொள்ளுங்கள். அதைப் பத்து சிறுசிறு துண்டுகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். அந்தத் துண்டு காகிதத்தில் ராஜா, ராணி, அமைச்சர், கணக்காளர், தலைமைக் காவலர், காவலர்கள், திருடன் என்று எழுதிக்கொள்ளுங்கள்.

இந்த ஏழு பேர் தவிர, விளையாட்டில் பங்கேற்கும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கேற்ப காவலர்கள் என துண்டுச் சீட்டில் கூடுதலாக எழுதிக்கொள்ளுங்கள்.

இவ்வாறு எழுதிய சீட்டுகளை எல்லோருக்கும் நடுவில் யாராவது ஒருவர் குலுக்கிக் கீழே போடுங்கள்.

விளையாட்டில் பங்கேற்கும் குழந்தைகள் ஒவ்வொரு சீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அவரவர் சீட்டில் என்ன பெயர் எழுதியிருக்கிறது என்பதை யாருக்கும் காட்டாமல் படித்துக்கொள்ளுங்கள்.

ராஜா என்று எழுதப்பட்ட சீட்டை எடுத்தவர், “நேற்றிலிருந்து ராணியின் வளையலைக் காணவில்லை. தலைமைக் காவலரே… உடனடியாக கண்டுபிடித்துத் தாருங்கள்” என்று சொல்வார்.

உடனே, தலைமைக் காவலர் என்ற சீட்டை வைத்திருப்பவர், எஞ்சியிருக்கிறவர்களில் யார் கையில் ‘திருடன்’ சீட்டு இருக்கிறது என்பதை முகப் பானையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும்.

ஒரு வேளை தலைமைக் காவலர் ‘காவலராக இருப்பவரை திருடன் என்று நினைத்து சொல்லிவிட்டால், , இன்னொரு வாய்ப்பு தரப்படும். அதற்குள் சரியான ‘திருடனை’ கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு சொல்லத் தவறினால், தலைமைக் காவலருக்கு ‘பூஜ்யம்’ மதிப்பெண் வழங்கப்படும். சரியாக அடையாளம் காட்டிவிட்டால், அவருக்கு 300 மதிப்பெண்கள் கிடைக்கும்.

கணக்காளர் சீட்டு யார் கைக்கு கிடைத்ததோ, அவர் ஒரு வெள்ளைத் தாளில் ராஜா- 500, ராணி- 400, அமைச்சர்- 300, கணக்காளர்- 200, காவல் உதவியாளர்கள்- 100 என மதிப்பெண்களைக் குறித்துக்கொள்வார்.

‘திருடனை’ சரியாகக் கண்டுபிடித்துவிட்டால், தலைமைக் காவலருக்கு 250 மதிப்பெண். தவறாக காட்டினால் திருடனுக்கு அந்த 250 மதிப்பெண்களும் போய்விடும்.

இப்படியாக, மறுபடியும் சீட்டை மடித்துப்போட்டு, 10 முறை இந்த விளையாட்டை விளையாடலாம்.

10-வது ஆட்டத்தின் முடிவில், ஒவ்வொரு ஆட்டத்திலும் பெற்றிருக்கும் மதிப்பெண்களைக் கூட்டி, முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களை வெற்றியாளர்களாக பாராட்டுங்கள். என்ன, இந்த விளையாட்டுப் பிடிச்சிருக்கா..?

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x