Last Updated : 03 May, 2017 11:21 AM

 

Published : 03 May 2017 11:21 AM
Last Updated : 03 May 2017 11:21 AM

தினுசு தினுசா விளையாட்டு: துள்ளித் தொடு ஆட்டம் ஆடுவோமா?

“இவ(ள்)ன் சரியாவே சாப்பிட மாட்டேங்கிறா(ள்)ன்..!” இது பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் மீது வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. குழந்தைகள் எப்போதும் பசியெடுத்தால் மட்டுமே சாப்பிடுவார்கள். நம்மைப் போல் ‘சாப்பிடுகிற நேரமாச்சே…’ என்பதற்காகச் சாப்பிடுபவர்கள் அல்ல. மேலும், ஒரு குழந்தை சரியாகச் சாப்பிடாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உணவின் ருசி பிடிக்கவில்லை, உடல் நிலை சரியில்லை, யார் மீதாவது இருக்கும் கோபம் அல்லது வருத்தம் போன்ற காரணங்களாலும் சாப்பிட மறுப்பார்கள்.

அதேபோல், ‘எனக்குப் பசிக்கலே…’ என்று சொல்லும் குழந்தைகளும் உண்டு. வீட்டிலேயே ‘சும்மா’ உட்கார்ந்திருக்கும் குழந்தைகளுக்குப் போதிய செரிமானமின்மையால் பசி எடுப்பதில்லை. ஓடியாடும் குழந்தைகளுக்கு நல்ல பசி எடுக்கும். அவர்கள் நன்றாகவும் சாப்பிடுவார்கள்.

இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டை விளையாடும் குழந்தைகளுக்கு நன்றாகவே பசியெடுக்கும். அந்த விளையாட்டின் பெயரைத் தெரிந்துகொள்ள ஆசையா..? ‘துள்ளித் தொடு ஆட்டம்..!’.

இந்த விளையாட்டை இருபது குழந்தைகள் வரை ஒரே நேரத்தில் சேர்ந்து விளையாட முடியும். வழக்கம்போல், ‘சாட், பூட், திரி…’ விளையாட்டின் வழியாக, இந்த விளையாட்டில் பங்கேற்கும் குழந்தைகளில் யாரையாவது ஒருவரை முதல் போட்டியாளராகத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

முதலில், விளையாடும் குழந்தைகள் அனைவரும் மைதானத்தின் நடுப்பகுதியில் வட்டமாக நின்றுகொள்ள வேண்டும். பிறகு, அனைவரும் ஒருவர் முதுகை மற்றவர் பார்த்தபடி திரும்பி நின்றுகொள்ள வேண்டும்.

அதாவது, வட்டத்தில் வெளிப்புறமாகப் பார்த்தபடி எல்லாரும் நிற்க வேண்டும்.

அடுத்ததாக, அனைவரும் இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி, “வெள்ளை வாத்து துள்ளி வருது… ஓரம்போ, ஓரம்போ..!” என்று குரல் கொடுத்தபடி, வட்டத்தையே துள்ளித் துள்ளிக் குதித்தபடி, மெதுவாகச் சுற்றி வர வேண்டும்.

இப்போது, முதல் போட்டியாளரும் இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி துள்ளித் துள்ளி வர வேண்டும். வட்டத்தைச் சுற்றிவருபவர்களில் யாரையாவது ஒருவரை முதல் போட்டியாளர் தொட வேண்டும். உடனே, “வாத்துக் குஞ்சைத் தூக்கிப் போறான்… காவல்காரன் கையைப் பிடி..!” என்று அனைவரும் சத்தமாகச் சொல்லிவிட்டு, வட்டத்தைச் சுற்றி வராமல், அப்படியே நின்றுகொள்ள வேண்டும்.

முதல் போட்டியாளர் யாரைத் தொட்டாரோ அவர், துள்ளித் துள்ளிக் குதித்தபடியே, முதல் போட்டியாளரைத் துரத்திச் சென்று தொட வேண்டும். முதல் போட்டியாளரும் துள்ளித் துள்ளிக் குதித்தபடி, அப்படியே வட்டத்தை ஒரு சுற்று சுற்றி வந்து, தான் தொட்டவர் நின்ற அதே இடத்தில் நின்றுவிட வேண்டும். அதற்குள் அவர் தொடப்பட்டால் ‘அவுட்’ ஆவார். ‘அவுட்’ ஆகாமல் வந்து நின்றுவிட்டால், அவர் யாரைத் தொட்டாரோ அவர் போட்டியாளராக மாறி, விளையாட்டைத் தொடர வேண்டும்.

வாத்துகளைப் போல துள்ளித் துள்ளிக் குதித்தபடி விளையாடும் இந்த விளையாட்டை விளையாடிப் பாருங்கள்; நல்ல பசியும் எடுக்கும்; மனதிற்கு உற்சாகமாகவும் இருக்கும்.

இன்னும் விளையாடலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x