Last Updated : 24 May, 2017 11:37 AM

 

Published : 24 May 2017 11:37 AM
Last Updated : 24 May 2017 11:37 AM

சின்னஞ்சிறு கதை: வானத்தில் பறந்த பல்லி!

முன்னொரு காலத்தில், ‘ஸ்கைனோசரஸ்’ என்ற பல்லி இனம் பூமியில் வாழ்ந்து வந்தது. ஸ்கைனோசரஸ் பல்லிகள் உருவத்தில் மிகவும் சிறியவை. ஓர் அங்குலம் மட்டுமே நீளமாக இருந்தன. சிறு சிறு பூச்சிகளையும் உண்ணிகளையும் உணவாக உண்டு அவை வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் ஒரு காட்டில் ஸ்கைனோசரஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு பல்லி தனியாகச் சுற்றிக்கொண்டிருந்தது. அதன் பெயர் லிச்சா. அது, ஒரு குறும்புக்காரப் பல்லி. அது மரங்களையும் மணல் பகுதியையும் சுற்றி இரை தேடிக்கொண்டிருந்தது. ஆனால், எங்கும் சிறு பூச்சிகூடக் கண்களுக்குத் தட்டுப்படவில்லை.

தட்டான்களும் பட்டாம்பூச்சிகளும் செடிகொடிகளைச் சுற்றிப் பறந்துகொண்டிருந்தன. மாலையில் சூரியன் மறைகிற நேரமாகியும் லிச்சா எதையும் சாப்பிடவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. பசி மயக்கத்தில் களைத்துப்போன பல்லி, ஒரு மரத்துக்கடியில் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டது.

திடீரென்று கண் விழித்துப் பார்த்தபோது காடெங்கும் இருள். லிச்சா, சட்டெனத் தலையை உயர்த்திப் பார்த்தது. ஆயிரக்கணக்கான வெண்ணிறப் பூச்சிகள் வானத்தில் விளையாடிக்கொண்டிருந்தன. ஒன்றிரண்டு ஆகாயப்பூச்சிகள் தரையில் விழுந்தால் நன்றாக இருக்குமே என ஏக்கத்தோடு காத்திருந்தது பல்லி.

சில மணி நேரங்கள் கடந்தன. இனி, ஆகாயப் பூச்சிகளுக்காகக் காத்திருப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தது பல்லி. அடுத்த சில நொடிகளில், அங்கு ஓர் அழகான தட்டான் வந்து சேர்ந்தது. லிச்சா பல்லிக்கு அருகில் இறங்கிவந்த தட்டானைப் பார்த்து ஓர் உதவி கேட்டது.

“தட்டானே! வானத்தில் தெரியும் பூச்சிகளை நீ எனக்குப் பிடித்துத் தருகிறாயா? நான், அவற்றைச் சாப்பிட்டுப் பசியாறுவேன்” என்று ஆசையோடு கேட்டது.

“பல்லியே, உன்னிடம் இறகுகள் இருந்தால், நீயே வானத்துக்குப் பறந்து செல்லலாம் அல்லவா? சரி, கவலை வேண்டாம்” என்று பதிலளித்த தட்டான் மேலும் சொன்னது.“என்னிடம் நான்கு இறக்கைகள் உள்ளன. அதில் இரண்டு இறகுகளை உனக்கு இரவலாகத் தருகிறேன். இறகுகளை உன் முதுகோடு ஒட்டவைத்துக்கொள். நீ நினைத்த இடத்துக்கெல்லாம் பறக்கலாம்” என்ற தட்டான், இரண்டு இறகுகளை உடனடியாகக் கழற்றித் தந்தது.

தட்டான் செய்த உதவியை எண்ணி லிச்சா மகிழ்ந்தது. அதே நேரத்தில் இருவருக்கும் மத்தியில் நடந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பட்டாம் பூச்சி அருகில் வந்தது. அழகான அந்தப் பட்டாம்பூச்சியும் பல்லிக்கு உதவியது.

“லிச்சா! வானத்தை நெருங்கக் நெருங்க குளிர் அதிகமாகும். மேகக்கூட்டங்களைக் கடந்து செல்வதற்குள், குளிரைத் தாங்க முடியாது” என்று அறிவுரை சொன்ன பட்டாம்பூச்சியின் பேச்சைக்கேட்டுக் கொஞ்சம் பயந்தது பல்லி.

“ஐயோ! நான் எப்படி வானத்துக்குப் போவேன்? சரியான வழி தெரிந்தால் சொல்லேன்” என்று பட்டாம்பூச்சியிடம் கேட்டது பல்லி.

“கவலைப்படாதே. நான், சற்று நேரத்துக்கு முன்புவரை லார்வா கூட்டில் தங்கியிருந்தேன். கூட்டில் இருந்தபடி வளர்ச்சி அடைந்து, பட்டாம்பூச்சியாக வெளியே வந்தேன். அந்தக் கூடு, என்னிடம் பத்திரமாக உள்ளது. நான் அதை உனக்குத் தருகிறேன். நீ அந்தக் கூட்டைப் பிரித்து, உடலைச் சுற்றிக் கவசமாக அணிந்து கொள். அந்தக் கூடு உறுதியானதால், கடுமையான குளிரைக்கூடத் தாங்கும்” என்ற பட்டாம்பூச்சி, தன்னிடமிருந்த கூட்டைப் பல்லிக்குத் தந்து உதவியது.

பல்லி, பட்டாம்பூச்சிக்கு நன்றி சொன்னது. பறப்பதற்கு இறக்கையும் குளிர் தாங்கும் அங்கியும் கிடைத்து விட்டன. பல்லி, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. இனி பறக்கலாம் என்று தயாரான நேரத்தில், ஒரு கரும்புள்ளி வண்டு அங்கு வந்து சேர்ந்தது.

கரும்புள்ளி வண்டின் முதுகு, சிவப்பு நிறத்தில் இருந்தது. பாதி முந்திரிக்கொட்டையை முதுகில் கவிழ்த்தியது போல ஒரு ஓடு வைத்திருந்தது. சிவப்பு நிற ஓட்டுக்கு மேலே நிறைய கறுப்பு நிறப் புள்ளிகள் தெரிந்தன. பல்லியைப் பார்த்துப் பரிதாபப்பட்ட வண்டு பரிவோடு சொன்னது.

“வானத்தில் பறப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. வானத்தில் பறப்பதென்றால், நீ தலைக்கவசம் அணிய வேண்டியது அவசியம். தலைக்கவசம் அணியாவிட்டால், நீல வானத்தில் முட்டி மோத நேரிடும். தலையில் காயம் உண்டாகும். என்னிடம், தேவையான ஓடுகள் உள்ளன. அதில் ஒன்றை உனக்குத் தருகிறேன். அதை நீ, தலைக்கவசமாக அணிந்து கொள். ஆகாயத்தில் எந்த விபத்தும் நேராமல் தப்பிக்கலாம்” என்றது.

“அப்படியே ஆகட்டும்” என்ற பல்லி, கரும்புள்ளி வண்டு தந்த ஹெல்மெட்டை வாங்கி அணிந்துகொண்டது.

கடைசியில், லிச்சா பல்லி பறக்கத் தயாரானது. நண்பர்கள் மூவரிடமிருந்தும் விடைபெற்ற பல்லி, மேலே தாவிப் பறக்கத் தொடங்கியது. ஆனால் அந்தப் பல்லி, ஒரு பெரிய மரத்தின் உச்சியைக்கூடத் தொடவில்லை. சீக்கிரம் களைத்துப்போனது. இறகை அசைக்கப் பழக்கமில்லாத பல்லியால் வானத்தை எப்படித் தொடமுடியும்? மரக்கிளையில் சோர்ந்து உட்கார்ந்த பல்லி, காடு முழுவதும் எதிரொலிக்கும்படி கத்தியது.

“ஐயோ! யாராவது என்னைக் காப்பாற்றுங்களேன்”.

பெருமரத்தின் உச்சிக் கிளையில் உட்கார்ந்திருந்த பல்லியை, ஓர் ஆந்தை பார்த்துப் பரிதாபப்பட்டது.

“வா! சிறிது தூரம் வரை உனக்குத் துணையாக வருகிறேன். அதற்குள், நீ நன்றாகப் பறப்பதற்கான பயிற்சி பெற்று விடுவாய். பிறகு, நீ வானத்தை நோக்கிப் பறந்து செல். நானோ, பொந்துக்குத் திரும்பிவிடுவேன்” என்ற ஆந்தை தொடர்ந்து சொன்னது

“வானத்தைச் சென்றடைந்த மகிழ்ச்சியில் பூச்சிகளைத் தின்று பசியாறியவுடன் அமைதியாக இருந்துவிடாதே. அதில் சில பூச்சிகளை எனக்காகக் கீழே தள்ளிவிடு. நானும் எனது குடும்பமும், ஆகாயப் பூச்சிகளைச் சாப்பிட்டுப் பசியாற உதவி செய்” என்றது.

“சரி, அப்படியே ஆகட்டும்.” என்ற பல்லிக்குத் துணையாக, ஆந்தை கொஞ்சத் தூரம் பறந்துவிட்டுத் திரும்பியது. ஆகாயத்தில் இறகசைக்கக் கற்றுக்கொண்ட லிச்சா, ஆந்தைக்கு நன்றி சொன்னபடி வானத்தை நோக்கிப் பறந்துபோனது.

ஆகாயத்தைச் சென்றடைந்த பல்லி, நட்சத்திரங்களுக்கு அப்பால் இருந்தபடி பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட்டது. வயிறு நிறையப் பூச்சிகளைச் சாப்பிட்டதால், ஸ்கைனோசரஸ் பல்லியின் உடல் டைனோசரஸ் அளவுக்குப் பெரிதானது. கடைசியில், பூமிக்குத் திரும்ப வழியில்லாமல் ஆகாயத்திலேயே தங்கிப்போனது.

பாவம் ஆந்தை! ஸ்கைனோசரஸ் பல்லி ஆகாயப் பூச்சிகளைக் கீழே தள்ளிவிடுமென்ற ஆசையில் காத்திருக்கிறது. ஆந்தைக்குத் துணையாக அதன் குடும்ப உறுப்பினர்களும் நம்பிக்கை தளராமல் இரவு முழுவதும் கண் விழித்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x