Last Updated : 24 Aug, 2016 11:23 AM

 

Published : 24 Aug 2016 11:23 AM
Last Updated : 24 Aug 2016 11:23 AM

சித்திரக் கதை: பாண்டிக்குக் கிடைத்த பரிசு!

பாண்டி, தன் புத்தகப் பையிலிருந்து இங்க் பேனாவை வெளியே எடுத்தான். அது, தங்க நிற மூடியுடன் பளபளவென கண்ணைப் பறித்தது. அந்த பேனாவைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவனுக்கு நேற்று நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

நேற்று மாலை சதீஷ் வீட்டுக்குப் போயிருந்தான் பாண்டி. “இங்க பார்த்தியா… வெளிநாட்டு பேனா!” எனப் பெருமையாக ஒரு பேனாவை எடுத்துக் காண்பித்தான் சதீஷ்.

“உன்னோடதா?” என ஆச்சர்யத்துடன் கேட்டான் பாண்டி.

“எங்க அப்பாவோடது. என்னோட சித்தப்பா வெளிநாட்டுலேயிருந்து வாங்கிட்டு வந்தார்!” எனப் பெருமையாகக் கூறினான் சதீஷ். பாண்டி, அந்த பேனாவை வாங்கிப் பார்த்தான். மிக அழகாக, பளபளப்பாக இருந்தது.

‘இந்த மாதிரிப் பேனா நம்மிடம் இருந்தால் எப்படி இருக்கும்?!’ என நினைத்துப் பெருமூச்சு விட்டபடி சதீஷிடம் பேனாவைத் திருப்பிக் கொடுத்தான் பாண்டி. சதீஷ் அதை டேபிளிலிருந்த பெட்டியில் வைத்து மூடினான். அப்போது, அவனுடைய அப்பா அழைக்கும் குரல் கேட்கவே, அறையை நோக்கி ஓடினான்.

அப்போது பாண்டி சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. சட்டென்று பேனாவை எடுத்துத் தன் டவுசர் பையில் போட்டுக்கொண்டே, “சதீஷ்… நான் வர்றேன்!” என்றான். சதீஷூம் உள்ளிருந்தபடியே “சரிடா!” எனச் சொன்னான்.

அந்த பேனாவைத்தான் இப்போது திருப்பி அழகு பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி.

‘இந்த பேனாவில் எழுதிப் பார்க்கலாம்!’ என நினைத்தபடி ஒரு பேப்பரை எடுத்தான். எழுத ஆரம்பித்தான். ஆனால், பேனா எழுதவில்லை. பேனாவில் மை தீர்ந்துவிட்டது என்று நினைத்தான்.

மை நிரப்புவதற்காகப் பேனாவின் அடிப்பாகத்தைக் கழற்ற முயற்சித்தான் பாண்டி. அட! பேனா வளர ஆரம்பித்தது. திடீரென அவன் உயரத்துக்கு வளர்ந்துவிட்டது. பயத்தில் பதறி எழுந்துவிட்டான். பேனாவின் பக்கத்தில் செல்ல பாண்டி பயந்தான். பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பக்கத்தில் சென்று தொட்டுப்பார்த்தான். ஒன்றும் ஆகவில்லை. அப்புறம்தான் பயம் விலகியது.

‘ஐயோ, இவ்ளோ பெரிய பேனாவுல எப்படி மை நிரப்பறது?! மை பத்தாதே!’ என நினைத்தபடி மை பாட்டில் அருகில் சென்றான். அதன் மூடியைத் திறந்தான்.

என்ன ஆச்சர்யம்! மை பாட்டிலும் பெரிதாக வளர ஆரம்பித்தது. அவனைவிட இரண்டு மடங்கு பெரிதானது. ‘இதுவும் வளர்ந்துடுச்சே! பேனாவுல எப்படி மை ஊத்தறது?’ என நினைத்தபடி அருகில் கிடந்த கயிற்றால் பேனாவைத் தன் முதுகில் கட்டினான்.

சுவர் ஓரமாகக் கிடந்த ஏணியை மை பாட்டில் மேல் சாய்த்து அதில் ஏறினான். பாட்டிலின் வாய் விளிம்பில் நின்றுகொண்டு முதுகில் கட்டியிருந்த பேனாவை எடுத்தான்.

‘பாட்டில்ல இருக்கற மையை நிரப்புனதுக்கப்புறம், இவ்ளோ பெரிய பேனாவைத் தூக்கிப் பிடிச்சு எப்படி எழுதறது? பேனாவும், மை பாட்டிலும் வளர்ந்த மாதிரி நானும் பெரிசாயிடுவேனா…’ என யோசித்துக்கொண்டே தன் உடம்பைப் பார்த்தான். அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

தன்னைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பேனாவை நழுவ விட்டான் பாண்டி. அது, நேராகப் பாட்டிலுக்குள்ளிருந்த மையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் அறையெங்கும் மை தெறித்தது. பாண்டியின் சட்டையிலும் டவுசரிலும் மை தெறித்துக் கறையானது. பாண்டியின் முகத்திலும் மை தெறித்தது.

அப்போது பாண்டிக்குத் தூக்கம் கலைந்தது. ‘படக்’கென எழுந்து உட்கார்ந்து சுற்றிலும் விழித்துப் பார்த்தான்.

‘அப்பாடி… எவ்வளவு பயங்கரக் கனவு! எல்லாத்துக்கும் காரணம் இந்த பேனாதான். இதை சதீஷ்கிட்ட கொடுத்துடணும்’என முடிவெடுத்து மீண்டும் படுத்துக்கொண்டான்.

காலை விடிந்ததும் அந்தப் பேனாவை எடுத்துக்கொண்டு சதீஷ் வீட்டுக்குப் போனான். சதீஷூக்கு ஆச்சர்யம்.

“என்னடா காலையிலேயே…?” எனக் கேட்டபடி அருகில் வந்தான்.

“என்னை மன்னிச்சுடுடா! நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்” என்றான் பாண்டி. சதீஷூக்கு ஒன்றும் புரியவில்லை.

பாண்டி, தன் டவுசர் பையிலிருந்து பேனாவை வெளியே எடுத்துச் சதீஷிடம் கொடுத்தான். “பேனா அழகா இருந்துச்சுன்னு உனக்குத் தெரியாம எடுத்துட்டுப் போயிட்டேன். என்னை மன்னிச்சுக்கடா!” என்றான்.

“இந்தப் பேனாவைத்தான் அப்பா தேடிட்டு இருந்தாரு. நீதான் எடுத்துட்டுப் போனியா!” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சதீஷின் அப்பா அறைக்குள் நுழைந்தார்.

பாண்டியும் சதீஷும் பயந்துவிட்டார்கள். ‘சதீஷின் அப்பா, தன்னைத் திருடன் என்று நினைத்து விடுவாரோ’எனத் திகைத்து நின்றான் பாண்டி. நல்லவேளை, சதீஷ் அப்பாவின் முகத்தில் கோபம் தெரியவில்லை.

“நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததைக் கேட்டுட்டுத்தான் இருந்தேன். பாண்டி… நீ யாருக்கும் தெரியாம சதீஷையும் ஏமாத்திட்டுப் பேனாவை எடுத்துட்டுப் போனது தப்புதான். ஆனா, தான் செய்தது தப்புன்னு எப்ப நீ உணர்ந்தியோ அப்பவே நீ சுத்தமானவனாயிட்ட. அதுவும் சதீஷ்கிட்ட மன்னிப்பு கேட்ட பாரு, அப்போ நீ உயர்ந்தவனாயிட்ட! அதுக்குப் பரிசா நான் உனக்கொண்ணு தரப் போறேன்!” என்றார் சதீஷ் அப்பா.

பாண்டியும் சதீஷும் அந்தப் பரிசு என்னவாயிருக்கும் என யோசித்தனர். சதீஷ் கையிலிருந்த பேனாவை வாங்கி பாண்டியிடம் கொடுத்து, ‘இதுதான் அந்தப் பரிசு!” என்றார் அவர்.

பாண்டிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. முகம் சிரிப்பால் மலர்ந்தது. “இதை நீயே வச்சுக்க. என் தம்பி மூணு பேனா வாங்கிட்டு வந்தான். ஒண்ணு எனக்கு, இன்னொண்ணு சதீஷுக்கு, மற்றொன்று உனக்கு!” என்றார் சதீஷ் அப்பா. பாண்டி நன்றி கூறி, பேனாவுடன் வீட்டுக்குச் சென்றான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x