Last Updated : 23 Oct, 2014 01:09 PM

 

Published : 23 Oct 2014 01:09 PM
Last Updated : 23 Oct 2014 01:09 PM

சத்தங்களின் சுறுசுறு பின்னணி

என்ன குட்டீஸ், தீபாவளியை ஜாலியா கொண்டாடிக்கிட்டு இருக்கீங்களா? புதுச் சட்டை போட்டுட்டு, இனிப்புகள் சாப்பிட்டுட்டு, மத்தாப்பு கொளுத்திட்டு இன்னைக்கு முழுவதும் உற்சாகமாக இருப்பீங்க. கொஞ்சம் பெரிய பசங்க அணுகுண்டு, சரம்னு அதிக சத்தம் எழுப்புற பட்டாசுகளை வெடிச்சிட்டு இருப்பாங்க.

உங்கள மாதிரி குட்டிப் பசங்க கலர் மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, பென்சில், சாட்டை, பாம்பு மாத்திரைன்னு சின்ன மத்தாப்புகள கொளுத்திட்டு இருப்பீங்க. இந்த மத்தாப்புகள் எப்படிப் பல வண்ணங்களில் ஒளிருதுன்னு உங்களுக்குத் தெரியுமா? பட்டாசை யாரு கண்டுபிடிச்சாங்கன்னு தெரியுமா?

பட்டாசு கண்டுபிடிப்பு

பட்டாசுகள இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியதே நமது பக்கத்து நாடான சீனாதான். கி.பி 960-1279-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில அங்கு ஆட்சி செஞ்ச லிங் வம்சத்தினர் பட்டாசுகளக் கண்டுபிடிச்சாங்க. காகிதக் குப்பையில் வெடிமருந்தைத் திணிச்சி வெடிக்கிற பழக்கத்தை அவுங்கதான் கண்டுபிடிச்சாங்க. பட்டாசுகளை உருவாக்குற தொழில்நுட்பத்துக்கு ‘பைரோ டெக்னிக்ஸ்’ன்னு பேரு. இந்தத் தொழில்நுட்பத்தை வைச்சுதான் எல்லாப் பட்டாசுகளையும் செய்யுறாங்க.

டபாஸு...பட்டாசு...

பட்டாசு, பட்டாசுன்னு சொல்றப்ப, அதுக்கு அந்தப் பேரு எப்படி வந்துச்சுன்னு ஒரு சந்தேகம் உங்களுக்கு வருது இல்லையா? பட்டாசுன்னு பேரு வந்தது சமஸ்கிருத மொழியில இருந்துதான். பட்டாசைச் சில வயதானவங்க ‘டபாஸ்’ன்னு சொல்றதைக் கேட்டுருக்கீங்களா? சமஸ்கிருதத்தில ‘டபாஸ்’ன்னா ‘உரத்த ஒலி’ன்னு அர்த்தம். இந்த ‘டபாஸ்’ என்ற பேருதான் மருவி ‘பட்டாசு’ன்னு ஆயிருச்சி.

மத்தாப்பு பேரு

தீபாவளிப் பண்டிகையில உங்கள் மாதிரி குட்டிப் பசங்க கொளுத்தி மகிழ்ற பட்டாசுகள்ல மத்தாப்புக்குத் தானே முதலிடம். இந்த மத்தாப்புன்ற பேரு உருது சொல்லில் இருந்துதான் வந்துச்சு. ‘மஹதாப்’ என்ற உருது சொல்லுக்குப் ‘பிரகாசமான ஒளி’ன்னு ஒரு அர்த்தம் இருக்கு. இந்தச் சொல்லில் இருந்துதான் ‘மத்தாப்பு’ன்ற பேரு வந்ததா சொல்லுறாங்க.

கலருக்குக் காரணம்

இந்த மத்தாப்புகள் எப்படிப் பல வண்ணங்கள்ல ஒளிருதுன்னு தெரியுமா? அதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. மத்தாப்புகள்ல உலோகப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள கலக்குறதைப் பொறுத்து வண்ணங்கள் ஏற்படுது. அலுமினியம், மக்னீசியம், மக்னாலியம் போன்ற பொருட்கள் வெள்ளை நிறப் பொறிகளை உருவாக்குது. இவை குண்டு பல்பு எரியுமில்லையா அந்த வண்ணத்துல எரியும். பொதுவாகக் கம்பி மத்தாப்புகள்ல இந்தப் பொருட்கள அதிகம் பயன்படுத்துவாங்க.

தீப்பெட்டி மத்தாப்புகள் பச்சை, சிவப்பு, மஞ்சள்ன்னு பல வண்ணங்கள்ல எரியும் இல்லையா? அதுக்குன்னு சில பொருட்கள் இருக்கு. மத்தாப்புகள்ல பேரியம் கலந்தா பச்சை நிறமா எரியும். ஸ்டான்சியம் கலந்தா சிவப்பு நிறமா எரியும். சோடியம் கலந்தா மஞ்சள் நிறமா எரியும்.

பொறியின் பின்னணி

அதேமாதிரி சில மத்தாப்புகள்ல தீப்பொறிகள் கொட்டுற மாதிரி வரும். அதுக்கும் மத்தாப்புகள்ல கலக்குற சில உலோக மற்றும் ரசாயனப் பொருட்கள்தான் காரணம். எவ்வளவுக்கு எவ்வளவு இந்தப் பொருட்கள கலக்குறாங்களோ அந்த அளவுக்குத் தீப்பொறிகளின் தோற்றம் மாறும். மத்தாப்புகள்ல இரும்பு கலந்தா செம்மஞ்சள் பொறிகள் உருவாகும். டைட்டானியம் கலந்தா பிரகாசமான வெண்ணிறப் பொறிகள் வரும்.

பெரோடைட்டானியம் கலந்தா பொன்னிறப் பொறிகள் வரும். இதுபோன்ற கலவைள கலந்துதான் கம்பி மத்தாப்பு, கலர் மத்தாப்புகள், பென்சில், சாட்டை. சங்கு சக்கரம், புஸ்வாணம் போன்ற மத்தாப்பு வகைகளத் தயாரிக்கிறாங்க.

டம், டமால் எப்படி?

அப்புறம் பொட்டாசியம் நைட்ரேட், பேரியம் நைட்ரேட், ஸ்டான்சியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரைட் போன்ற கலவைகளை வெடிக்கக்கூடிய பட்டாசுகள்ல பயன்படுத்துவாங்க. இந்தக் கலவையில் இருந்துதான் அணுகுண்டு, சரம், லட்சுமி வெடி, குருவி வெடி, ராக்கெட்ன்னு வெடிக்கிற பட்டாசுகளத் தயாரிக்கிறாங்க. அதுமட்டுமில்லாமல் கந்தகம், மரத்தூள் போன்ற பொருட்கள் குறைந்த சத்தத்தை எழுப்புற பட்டாசுகள்ல கலப்பாங்க.

என்ன குட்டீஸ், மத்தாப்புகள் எப்படிப் பல வண்ணங்கள்ல ஒளிருதுன்னு தெரிஞ்சுக் கிட்டீங்களா? இன்னைக்கு மத்தாப்பு கொளுத்துறப்ப இதுவும் உங்க ஞாபகத்துக்கு வரும் இல்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x