Last Updated : 24 Aug, 2016 10:50 AM

 

Published : 24 Aug 2016 10:50 AM
Last Updated : 24 Aug 2016 10:50 AM

கோள் பதவியை இழந்த கடைக்குட்டி

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை 8 என்று பாடப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள். ஆனால், உங்கள் அம்மா, அப்பாவிடம் கேட்டால் 9 கோள்கள் என்று சொல்வார்கள். ஏனென்றால், அப்போதெல்லாம் பாடப் புத்தகத்தில் அப்படித்தான் இருந்தது. சூரிய மண்டலத்தில் கடைசிக் கோளாக இருந்த புளூட்டோ 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (2006, ஆகஸ்ட் 24) புளுட்டோ ஒரு கோள் அல்ல என்று தகுதி இறக்கம் செய்யப்பட்டது.

நாம் வாழும் இந்த பூமியையும் சேர்த்து பல்வேறு கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த வரிசையில் சூரியனுக்குப் பக்கத்தில் சுற்றி வரும் முதல் கோள் புதன். 3-வதாக நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. இதேபோல 8-வது கோளாக சுற்றி வரும் நெப்டியூனுக்கு அடுத்ததாக புதிய கோள் ஒன்று 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க வானியல் அறிஞரான கிளைட் டோம்பா இதைக் கண்டுபிடித்தார்.

இது குறித்த தகவல் வெளியானதும், புதிய கோளுக்கு பலரும் பெயர் சூட்ட முன்வந்தார்கள். இங்கிலாந்தை சேர்ந்த வெனிடியா என்ற 11 வயது சிறுமி, கிரேக்க பாதாள உலக கடவுளின் ரோமானிய பெயரான ‘புளூட்டோ’என்ற பெயரை தனது தாத்தா மூலமாக பரிந்துரை செய்தாள். அப்படித்தான் 9-வது கோளுக்கு ‘புளூட்டோ’என்ற பெயர் வந்தது.

சூரியக் குடும்பத்தின் கடைக்குட்டியாக இருந்த புளூட்டோ பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் நிறைய உள்ளன. சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. அப்பால் புளூட்டோ உள்ளது. அந்தக் கோள் முழுவதும் பாறை மற்றும் பனிக்கட்டியாகத்தான் உள்ளது. புளூட்டோவின் சராசரி வெப்பநிலை -230 டிகிரி செல்சியஸ். பூமியைவிட அங்கு ஈர்ப்பு விசை குறைவு என்பதால், எடையும் குறைவாகவே இருக்கும். அதாவது பூமியில் உங்களது எடை 30 கிலோ என்றால், புளூட்டோவில் 2 கிலோ மட்டுமே இருக்கும். புளூட்டோ ஒருமுறை சூரியனை சுற்றிவர 248 வருடங்கள் ஆகும்.

புளூட்டோ பற்றிய சுவாரசியங்களை போலவே, அது தொடர்பான ஆராய்ச்சியில் சர்ச்சைகளும் அதிகம் இருந்தன. சில விஞ்ஞானிகள் புளூட்டோ கோள் இல்லை என்று சொன்னார்கள். சூரிய மண்டலத்தில் இருக்கும் மற்ற கோள்களை போல இல்லாமல், புளுட்டோவின் சுற்றுவட்டப்பாதை சில சமயம் சூரியனிலிருந்து ரொம்ப தொலைவாகவும், சில சமயம் பக்கத்திலுமாக அமைந்திருந்தது. அதோடு நெப்டியூனின் சுற்று வட்டப்பாதையில் புளுட்டோவின் பாதை குறுக்கிடுவதையும் கண்டுபிடித்தார்கள். இதன் காரணமாக பூமியின் நிலவான சந்திரனைவிட அளவில் சிறிய புளூட்டோ, கோள் அந்தஸ்தை இழந்தது.

2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று கூடிய வானியல் அறிஞர்கள், சூரிய மண்டலத்தின் 9-வது கோளாக இருந்த புளூட்டோவை ‘குறுங்கோள்’ அல்லது ’குள்ளக்கோள்’(Dwarf Planet) என்று சொல்லி தகுதி இறக்கம் செய்துவிட்டார்கள். ஆனால், தொடர்ந்து புளூட்டோவையும் சேர்த்து சூரிய மண்டலத்தில் உள்ள பிற குள்ள கோள்கள் ‘புளூட்டோய்ட்ஸ்’ என்ற அறிவிக்கப்பட்டு தொடர்ந்து ஆராயப்பட்டுவருகின்றன.

தற்போது ஆகஸ்ட் 24-ம் தேதியை ‘புளூட்டோ பதவியிறக்க நாளாக‘விஞ்ஞானிகள் அனுசரிக் கிறார்கள். இந்த வேளையில் புளூட்டோ மட்டுமன்றி சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய பால்வீதியை ஆராயவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலகம் முழுவதும் இன்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x