Published : 17 Dec 2014 11:24 AM
Last Updated : 17 Dec 2014 11:24 AM

குழந்தைகள் சொன்ன கதைகள்

அழகுத் தமிழில் கதைச் சொல்லும் போட்டியில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் கதைகளை கடந்த இரு வாரங்களாகப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த வாரம் இரண்டு கதைகளைப் பார்ப்போமா?

கார் டிரைவரான ஐன்ஸ்டீன்

புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றிக் கொண்டுவந்தார். அன்று அவருக்கு மிகவும் அலுப்பாக இருந்தது. ஆனால், அன்றைய தினமும் சொற்பொழிவாற்றச் செல்ல வேண்டும். என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

“சார், கிளம்பலாமா?” என்று கேட்டுக்கொண்டே கார் டிரைவர் அங்கே வந்தார்.

அப்போது ஐன்ஸ்டீனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

“இன்னிக்குப் போற இடத்தில என்னை இதுவரை யாரும் பார்த்ததில்லை. அதனால நீதான் இன்னைக்கு ஐன்ஸ்டீன். நான் கார் டிரைவர்” என்று சொன்னார்.

டிரைவருக்கு ஒன்றுமே புரியவில்லை. “சார், நான் எப்படி நீங்களாக முடியும்? உங்கள் அறிவு எங்கே, என் அறிவு எங்கே?” என்றார்.

“ஒன்றும் பிரச்சினை இல்ல. நானும் அங்கேதான் இருப்பேன். சமாளித்துக்கொள்ளலாம்” என்றார் ஐன்ஸ்டீன்.

அரங்கத்துக்குள் இருவரும் நுழைந்தார்கள். டிரைவர் மேடையில் அமர்ந்தார். ஐன்ஸ்டீன் கூட்டத்துக்குள் அமர்ந்திருந்தார்.

ஐன்ஸ்டீன் கோட்பாடுகளைப் பற்றிப் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில் ஐன்ஸ்டைனாக அமர்ந்திருந்த டிரைவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

உடனே டிரைவர் எழுந்து, “இந்தச் சாதாரணக் கேள்விக்கு என் டிரைவர் பதில் அளிப்பார்” என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

கூட்டத்தில் டிரைவராக அமர்ந்திருந்த ஐன்ஸ்டீன், விளக்கம் அளித்தார். பிறகு உண்மையைச் சொன்னார்.

“எனக்குக் கிடைத்தது போல ஒரு வாய்ப்பு என் டிரைவருக்குக் கிடைத்திருந்தால் அவரும் ஒரு விஞ்ஞானி ஆகியிருப்பார். கொஞ்சம் கூடப் பதற்றம் இல்லாமல், எவ்வளவு அழகாக என் டிரைவர் பதிலளித்துள்ளார். அவர் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார்!” என்று பாராட்டினார்.



மாத்தி யோசி

அன்றைய தினம் மல்லிகை உணவகத்துக்குச் சாப்பிட வந்தான் ரவி. முதல் தோசையைச் சாப்பிட்டு முடித்தான். இரண்டாவது தோசை வைத்தவுடன், சர்க்கரையை கொடு என்று கேட்டான்.

உடனே முதலாளி ஓடி வந்தார். “தம்பி, இன்று முதல் தோசைக்குச் சர்க்கரை கிடையாதுன்னு எழுதிப் போட்டிருக்கோமே… அதைப் பார்க்கலையா?” என்றார்.

“பார்த்ததனால்தான் கேட்கிறேன். இன்று முதல் தோசைக்குத்தானே சர்க்கரை இல்லை. நான் ரெண்டாவது தோசைக்குத்தானே சர்க்கரைக் கேட்கிறேன்” என்றான் ரவி.

“ஐயோ… இதற்கு இப்படியும் அர்த்தம் இருக்கோ? நாளை மாற்றிவிடுகிறேன்’ என்று கூறிவிட்டு, சர்க்கரையைக் கொடுத்தார் முதலாளி.

மறுநாளும் சாப்பிட வந்தான் ரவி. இன்று முதலிலேயே இரண்டு தோசைகளை வாங்கிக்கொண்டான். முதலாளியை அழைத்து, சர்க்கரை கேட்டான்.

‘தம்பி மாத்தி எழுதியாச்சு. இனிமேல் தோசைக்குச் சர்க்கரை இல்லைன்னு போட்டிருக்கே… பார்க்கலையா?’ என்றார் பெருமிதத்தோடு.

‘மேல் தோசைக்குத்தானே சர்க்கரை இல்லை. நான் அடி தோசைக்குத்தான் சர்க்கரை கேட்கிறேன்’ என்று தோசையைக் காட்டினான் ரவி.

‘ஐயோ…’ என்று தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார் முதலாளி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x