Published : 04 Mar 2015 12:41 PM
Last Updated : 04 Mar 2015 12:41 PM

எண்ணெயை வரவழைக்கும் காற்று

அம்மா, அப்பாவோட கடைக்குப் போகும்போது அந்தக் காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பெரிய எண்ணெய் டின்களில் இருந்து கடைக்காரர்கள் எண்ணெய்யை ஊற்றுவார்கள்.

அப்படி எண்ணெய் ஊற்றுவதில்கூட அறிவியல் இருக்கிறது. அது என்ன அறிவியல் என்பதை ஒரு எளிய சோதனை மூலம் தெரிந்துகொள்வாமா?

தேவையான பொருள்கள்

பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் புனல், பிளாஸ்டிக் களிமண், தண்ணீர்.

சோதனை

1. ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் வாய்ப் பகுதியைச் சுற்றி பிளாஸ்டிக் களிமண்ணை அழுத்தி வையுங்கள்.

2. அந்தக் களிமண் மீது பிளாஸ்டிக் புனலைக் காற்றுப் புகாதவாறு இறுக்கமாகப் பொருத்துங்கள்.

3. புனலினுள் மெதுவாக நீரை ஊற்றுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்.

தண்ணீர் நேரடியாக இறங்காமல் ‘களக்..களக்..’ என்ற ஒலியுடன் விட்டுவிட்டு உள்ளே செல்வதைப் பார்க்கலாம்.

நடப்பது என்ன?

நீரைப் புனலினுள் ஊற்றியவுடன் உள்ளே செல்லாமல் விட்டு விட்டுச் செல்வதற்கான காரணம் என்ன?

நீர் ஊற்றுவதற்கு முன் பாட்டில் முழுவதும் காற்று நிறைந்திருக்கிறது. பாட்டிலின் வாய்ப் பகுதி காற்று வெளியேற முடியாதவாறு களிமண்ணால் அடைக்கப்பட்ட பிறகு, காற்று வெளியே வருவதற்கான ஒரே வழி புனல் குழாயில் உள்ளே துளை மட்டும்தான்.

நீர் ஊற்றும்போது துளையை நீர் அடைத்துக்கொள்ளும். ஆனால், புனலில் ஊற்றப்பட்டுள்ள நீர் அந்த வழியையும் அடைத்துக்கொள்கிறது.

புவியீர்ப்பு விசையின் காரணமாக நீர், புனல் வழியே பாட்டிலுக்குள் விழும்போது, அங்குள்ள காற்று இடம்பெயர்ந்து, நீர் வரும் அதே துளை வழியே வெளியேற முயல்கிறது. அப்போது நீர் பாட்டிலுக்குள் இறங்குவதாலும் காற்று வெளியேறுவதாலும் ‘களக்...களக்..’ என்ற ஓசை வருகிறது.

இதிலிருந்து பாட்டிலுக்குள் காற்று இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். காற்று ஓர் இடத்தை அடைத்துக்கொள்கிறது என்பதுதான் இந்தச் சோதனையின் முடிவு.

பயன்பாடு

எண்ணெய் டின்னில் இருந்து எண்ணெய்யை ஊற்றுவது எப்படி என்று பார்ப்போம். வாய் அகன்ற ப்ளாஸ்டிக் டப்பாவின் மூடியில் சற்றுத் தள்ளி இரு துளைகள் போட்டுக் கொள்ளுங்கள். அதில் முக்கால் பாகம் தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள்.

ஒரு துளையை ஒரு விரலால் மூடிக்கொண்டு கவிழ்த்தால் தண்ணீர் கொட்டுவதில்லை. மூடிய துளையிலிருந்து விரலை எடுத்துவிட்டால் காற்று அத்துளை வழியே சென்று அழுத்தத்தை ஏற்படுத்துவதால் தண்ணீர் அடுத்த துளை வழியே கொட்டிவிடும்.

எண்ணெய் டின்னில் ஒரே ஒரு சிறிய துளை இருந்தால் அதிலிருந்து எண்ணெயை ஊற்ற முடியாது. எண்ணெய் டின்னைத் தலைகீழாகக் கவிழ்த்தால்கூட ஊற்ற முடியாது. டின்னில் இருக்கும் துளைக்குச் சற்று அருகில் மற்றொரு துளையைப் போட்டால், காற்று அந்தத் துளை வழியே சென்று எண்ணெய் மீது காற்றழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் டின்னிலிருந்து எண்ணெயை எளிதாக ஊற்றிவிடலாம்.

அதனால்தான் எண்ணெய் டின்களிலும், பேரல்களிலும் இரு துளைகள் இருக்கின்றன.

பட உதவி: அ.சுப்பையா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x