Last Updated : 24 May, 2017 11:19 AM

 

Published : 24 May 2017 11:19 AM
Last Updated : 24 May 2017 11:19 AM

அம்மாவின் சேட்டைகள் 02: மயில் பின்னால அலைஞ்சி திரிஞ்ச கதை

அம்மாவின் கதைகளைத் திரும்பத் திரும்பக் கேக்குறது எனக்குப் புடிக்கும். அம்மா அவுங்களைப் பத்தி கதை சொல்ல ஆரம்பிக்கும்போது கதையை நேரா சொல்லமாட்டாங்க. எதோ ஒண்ணுல ஆரம்பிப்பாங்க. அப்படியே கதைக்கு வருவாங்க. “உங்களுக்கெல்லாம் அதை அனுபவிக்கக் குடுத்து வைக்கலை. எவ்வளவு அழகான ஊரு எங்க ஊரு. பச்சை, கரும்பச்சை, தண்ணி, பாறைன்னு கெடக்கும்.

ஊரு, குளம், கோயில் காடு, வயக்காடு, காடு, பொட்டல் காடுன்னு அடுக்கி வச்ச மாதிரி இருக்கும். இந்தக் காட்டத் தாண்டி அந்தக் காட்டுக்குப் போகணும்”ன்னு அம்மா சொல்லிச் சொல்லி எனக்கு எல்லாம் சினிமா மாதிரி மனசுக்குள்ள இருக்கு.

அந்தக் காட்டுக்குள்ள சுத்தி வர்றதுதான் அம்மாவோட வேலை. அதுக்கு அடி வேற உண்டு. எல்லார் வீட்டுலயும் அடிக்க மாட்டாங்க. அம்மா வீடு படிச்ச வீடு அதுனாலதான். அம்மாவுக்கு மயில்கூடவே இருக்கணும்னு ஆசை. அது பின்னாடியே காட்டுக்குள்ள ஓடுறது, மயில் முட்டையைப் பாக்கப் போறது, மயில் குஞ்சுகளைப் பாக்குறது, மயில் றெக்கை பொறுக்குறதுன்னு மயிலைச் சுத்திச் சுத்தி வருவாங்களாம்.

மயிலுக்காகவும் மயில் றெக்கைக்காகவும் காட்டுக்குள்ள தனியாவும் போவாங்க, சேர்ந்தும் போவாங்க. பையனுங்க பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து போறதுதான் நல்லாருக்கும். ஏன்னா அடர்ந்த காட்டுக்குள்ள போலாம். மயில் றெக்கைகளைச் சேர்ந்து பொறுக்கலாம்.

மயில் றெக்கை பலவிதம். கத்தி, கண்ணு, கவட்டை, வாள், குஞ்சு றெக்கை இப்படி ஒவ்வொரு றெக்கைக்கும் பேர் வேற உண்டு. அது எல்லாத்தையும் நான் பார்த்திருக்கிறேன். அதன் கலர் அழகோ அழகு. அதைத் தடவும்போது மெத்து மெத்துன்னு வெல்வெட் மாதிரி இருக்கும்.

அம்மாவுக்கு மயில் மேல ஏறிப் பறக்கணும். முருகன் மாதிரி அதை கட்டிப் புடிச்சிக்கணும்னு இருக்குமாம். சின்ன சத்தம் கேட்டாக்கூட க்ரீரீரீச்சுன்னு கத்துமாம். அதுக்காகத் தனியா காட்டுக்குள்ள போவாங்களாம்.சின்ன உடம்புக்கு இவ்வளவு பெரிய றெக்கை, அவ்வளவு நீளக் கழுத்து. எங்கெங்க மயில் உக்காந்திருக்கும்னு அம்மாவுக்குத் தெரியும். அங்கெல்லாம் போவாங்களாம். ரெண்டு மூணு முறை லாவகமா றெக்கையைக் கட்டிப் புடிச்சிட்டாங்க. அது பறந்தப்ப அடிச்ச காத்துல அம்மா ஆடிப்போய் கீழ உழுந்துட்டாங்களாம். அது கத்திக்கிட்டே வானத்து உச்சிக்கு பறந்து போயிடுச்சாம். எங்க போச்சுன்னே தெரியலையாம்.

அம்மா உடம்பு நடுங்குனது, அந்தக் காத்தோட வேகம், அது உயர பறந்து கத்துன கத்து, இதெல்லாம் அம்மாவால மறக்கவே முடியாததா மாறிடுச்சி. அம்மா இத சொல்லும்போது, “என்னைத் தொட்டுப்பாரு, இப்பதான் நடந்த மாதிரி இருக்கு. அன்னக்கி மயிலுக்கும் எனக்கும் நடந்ததை யார்கிட்டயும் சொல்லவே முடியலை. கத்தையா மயில் றெக்கையைக் கட்டிப் புடிச்சது நல்லா இருந்துச்சி”.

இந்த மாதிரி கதையெல்லாம் சொல்லும்போது அம்மாவால அதுக்குமேல தொடர முடியாம, “போ, போ, போதும் போ. போய் படி இல்லன்னா வேலையைப் பாரு”ன்னு அனுப்பிடுவாங்க. ஒரு தடவ வீட்டுக்குள்ள காயப் போட்டிருந்த நெல்லை மயிலுங்க தின்னுக்கிட்டு இருந்துச்சாம்.

அது தாயம்மா வீடு. ரெண்டு பேரும் மயிலை விரட்ட ஓடுனாங்க. நெல்லு காஞ்ச அந்த வீட்டுக்கு ஒரே வழிதான். இவுங்க வெரட்டும்போது அது உள்ளே ஓடிடுச்சி. அப்படியே கதவைச் சாத்திட்டாங்களாம். சாத்துன வீட்டுக்குள்ள இருந்த மயிலைப் புடிச்சி இழுத்தா றெக்கை கையில வந்துடுச்சி. அவுங்க கவனம் றெக்கை மேல போயிடுச்சி. றெக்கையைப் புடிச்சி இழுத்தா அது வலி தாங்க முடியாம பறக்கும். பறந்து அந்த மூலையில நிக்கும். அங்க போயி புடிச்சாங்களாம். ஒவ்வொருமுறை புடிக்கும்போதும் கையில ரெண்டு இல்லன்னா மூணு றெக்கை வருமாம். அடுத்தடுத்து அதையே செஞ்சாங்களாம்.

வேணுங்குற அளவு பறிச்சிட்டு உட்டுட்டாங்க. வெளிய வந்த மயில் கொஞ்ச நேரம் நின்னுச்சாம். பிறகு அமைதியா பறந்துடுச்சாம். மயில் றெக்கைய என்ன பண்றது? பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுபோய் ஆளுக்கு ஒரு றெக்கை தரலாம். ஊருக்குப் போறப்ப பெரிம்மா வீட்டுக்கு எடுத்துட்டுப் போகலாம். மயில் றெக்கை சிம்மாசனம், விசிறி செய்யலாம். அமைதியா அதைப் பார்த்துக்கிட்டே உக்காந்து இருந்தாங்களாம். சோகமா ஆயிடுச்சாம். அது மட்டுமில்லை... பெரிய பிரச்சினையாவும் ஆயிடுச்சாம்.

பெரியவங்க யாராவது பாக்கறதுக்குள்ள ஏதாவது செஞ்சாகணும். அம்மா கடைசியா ஒரு முடிவுக்கு வந்தாங்க. அவ்வளவு றெக்கையையும் அணைச்ச மாதிரி தூக்கிக்கிட்டு கம்மாய் பக்கம் நடந்தாங்க. யார் கண்ணுலயும் படாத இடமா போட்டாங்க. நின்னு பார்த்தாங்களாம். மயில் கத்துனது, அதுக்கு வலிச்சது எல்லாம் அம்மாவுக்கும் நடக்குற மாதிரி இருந்துச்சாம். மயிலுக்கு வலிச்ச வலி அம்மா மனசுக்குள்ளே இப்பயும் பத்திரமா இருக்கு.

(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
ஓவியம்: வி.எஸ். செல்வன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x