Published : 20 Jun 2018 10:53 AM
Last Updated : 20 Jun 2018 10:53 AM

டிங்குவிடம் கேளுங்கள்: புயல் கூண்டு எண்கள் என்ன சொல்கின்றன?

கடலில் அலை ஏன் உருவாகிறது, டிங்கு?

–மா. பாலகுரு, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.

கடல் நீரின் மீது காற்று செலுத்தும் ஆதிக்கம்தான் கடல் அலை. காற்று அதிவேகமாகத் தண்ணீரைக் கீழ் நோக்கி அழுத்துகிறது. மேல் நோக்கி இழுக்கிறது. இப்படிக் கீழ் நோக்கு விசையும் மேல் நோக்கும் இழுவிசையும் சேர்ந்து கடல் அலையை உருவாக்கிவிடுகின்றன, பாலகுரு. அலைகள் ஒரே இடத்தில் மேலும் கீழும் அலையும். அலைகளுக்கு இடையே ஏற்படும் உராய்வு, அடுத்தடுத்து ஏற்படும் அலைகளால் ஏற்படும் முறிவு போன்றவற்றால்தான் அலைகள் நகர்கின்றன. இப்படி ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் நகர்ந்து, நிலப் பகுதியை வந்து மோதுகின்றன.
 

10dingu_17-11-17.jpgஉட்கார்ந்து படிப்பது, நடந்துகொண்டே படிப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, இதில் எது நல்லது டிங்கு?

–எஸ். ராஜா, கோவில்பட்டி.

படுத்துக்கொண்டே படித்தால் விரைவில் தூக்கம் வந்துவிடலாம். கழுத்தும் கைகளும்கூட வலிக்கலாம். நடந்துகொண்டே படிக்கும்போது புத்தகம் அசைவதால் கண்கள் தேடித் தேடிப் படிக்க வேண்டியிருக்கும். இதனால் கண்கள் சோர்வடைந்து விடலாம். என்னைப் பொறுத்தவரை சரியான வெளிச்சத்தில் உட்கார்ந்துகொண்டு படித்தால் கண்களுக்கும் கழுத்துக்கும் நல்லது என்பேன், ராஜா.

1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாகச் சமீபத்தில் படித்தேன். அப்படி என்றால் என்ன, எத்தனை எண்கள்வரை கூண்டுகள் உள்ளன, டிங்கு?

ந. சீனிவாசன், 10-ம் வகுப்பு, புனித மரியன்னை மேலைநிலைப் பள்ளி, திண்டுக்கல்.

ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இதனால் பலத்த காற்று வீசலாம், பாதிப்பு ஏதும் ஏற்படாது. இரண்டாம் எண் என்றால் புயல் உருவாகியிருக்கிறது. துறைமுகத்தை விட்டுக் கப்பல் வெளியேற வேண்டும். மூன்றாம் எண் என்றால், பலத்த காற்றோடு மழையும் பொழியும். 4-ம் எண் ஏற்றப்பட்டால் துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்று பொருள். 3, 4-ம் எண்கள் ஏற்றப்பட்டால் மோசமான வானிலை. 5-ம் எண் ஏற்றப்பட்டால் புயல் உருவாகிவிட்டது என்றும் இடது பக்கமாகக் கரையைக் கடக்கும் என்றும் அர்த்தம். 6-ம் எண் ஏற்றப்பட்டால் புயல் வலது பக்கம் கரையக் கடக்கும்.

7-ம் எண் ஏற்றப்பட்டால் துறைமுகம் வழியாகவோ, அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம். 5,6,7 எண்கள் துறைமுகத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் குறிக்கின்றன. 8-ம் எண் ஏற்றப்பட்டால் மிகப் பெரிய ஆபத்து. தீவிரப் புயல் அல்லது அதிதீவிரப் புயல் ஏற்பட்டு, துறைமுகத்தின் இடது பக்கமாகக் கரையைக் கடக்கும். 9-ம் எண் அதிதீவிரப் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடக்கும் என்பதைக் குறிக்கிறது. 10-ம் எண் அதிதீவிரப் புயலால் பெரிய அளவுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. 11-ம் எண் ஏற்றப்பட்டால் அதிகப்பட்ச புயல் எச்சரிக்கை, வானிலை மையத்துடனான தகவல் துண்டிக்கப்படுகிறது என்று அர்த்தம், சீனிவாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x