Last Updated : 11 Apr, 2018 10:48 AM

 

Published : 11 Apr 2018 10:48 AM
Last Updated : 11 Apr 2018 10:48 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: என் கரடி நண்பன்

 

“அ

ச்சச்சோ அம்மா, வண்டியை நிறுத்துங்க” என்று மேரி அலறியதும் தூக்கிவாரிப்போட்டது அம்மாவுக்கு. என்ன ஆச்சு இவளுக்கு? இப்போதுதான் வீட்டைவிட்டுக் கிளம்பி காரில் ஏறி உட்கார்ந்து, வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன். தெருமுனையைக் கடப்பதற்குள் என்ன அப்படி ஓர் அலறல்?

படாரென்று காரை நிறுத்தினார் அம்மா. இரண்டு கண்களையும் அகல விரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த மேரியின் தலையைத் தடவிக்கொடுத்தார். ‘‘என்ன ஆச்சு மேரி? உடம்பு சரியில்லையா?”. ‘‘அதெல்லாம் இல்லை, முதலில் கார் கதவைத் திறங்க” என்று படபடத்தாள் மேரி. கார் கதவைத் திறந்துவிட்டார் அம்மா. மேரி அவசரமாக இறங்கினாள். சில விநாடிகள் கழித்து மீண்டும் ஏறி உட்கார்ந்துகொண்டாள். இப்போது மேரியின் முகத்தில் புன்சிரிப்பு. ‘‘பூச்சுவை மறந்துவிட்டேன். பாவம், அழுதுகொண்டிருந்தாள். அதான் அழைத்துவந்தேன்.’’ அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. வீட்டில் யாரையும் விட்டு வரவும் இல்லை. வண்டியில் யாரும் ஏறியதுபோலவும் இல்லை. யார் இந்தப் பூச்சு?

அதே அமெரிக்காவில்தான் ஜெனிபரும் வசிக்கிறாள். அவள் வயது ஆறு. உனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும் என்று பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருமுறை கேட்டபோது ஜெனிபர் சொன்ன பதில் இது. ‘‘எனக்குக் கூக்கூ என்றால் உயிர். கூக்கூ நான் சொல்வதை எல்லாம் கேட்பான். நான் பாடச் சொன்னால் பாடுவாள். என்னோடு தினமும் பள்ளிக்கு வருவான். மாலை நானும் அவளும் விளையாடுவோம்.’’ ஆசிரியருக்கு ஒரே குழப்பம். இதென்ன? முதலில் அவன் என்கிறாள். பிறகு அவள் என்கிறாள். உண்மையில் கூக்கூ அவனா, அவளா? ‘‘சில நேரம் அவன். சில நேரம் அவள். நான் கூக்கூவை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்வேன்.’’

இந்தா சாப்பிடு என்று பீட்டரிடம் ஐஸ்க்ரீம் கொடுத்தால், ‘‘எனக்கு மட்டும்தானா ஜிம்முக்குக் கிடையாதா?’’ என்று கேட்பான். அது யார் ஜிம் என்றால், ‘‘இதோ என் பக்கத்தில்தானே அப்பா நிற்கிறான், உங்களுக்குத் தெரியவில்லையா?’’ என்று சலித்துக்கொள்வான். நானும் கரடியும் நேற்று டிவி பார்த்தோம் என்பாள் கேத்தரீன். கரடிதான் எனக்குத் தினமும் பல் தேய்த்துவிடும் என்பாள். கரடியைக் கட்டிப்பிடித்துதான் தூங்குவேன் என்றும் சொல்வாள். எங்கே அந்தக் கரடியைக் கூப்பிடு என்றால் படுக்கையில் இருந்து ஒரு பூனை பொம்மையை எடுத்துக் காட்டுவாள்.

இந்தக் குழந்தைகளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்கிறார்கள் பெற்றோர்கள். சில நேரம் அவர்களைப் பார்க்கக் கொஞ்சம் பயமாகக்கூட இருக்கிறது. எதற்காகக் கற்பனை நண்பர்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள்? வீட்டில் உள்ளவர்களோடு பழகினால் போதாதா? பள்ளிக்கூடத்தில்தான் அத்தனை குழந்தைகள் இருக்கிறார்களே. அவர்களுடன் அரட்டையடித்தால் போதாதா? எதற்காக இல்லாத உருவங்களைக் கஷ்டப்பட்டு கற்பனை செய்து உருவாக்கவேண்டும்? நிஜ மனிதர்களைப் போலவே பூச்சு, கூக்கூ என்றெல்லாம் எப்படி இவர்களுடன் பழக முடிகிறது? எப்படி அவர்களோடு பேசி, சிரித்து, விளையாடி, சண்டைபோட்டு பொழுதைப் போக்கமுடிகிறது?

அது குழந்தைகளின் உலகம். நம் விதிகள் அங்கே பொருந்தாது. அங்கே நிஜத்துக்கும் கற்பனைக்கும் வேறுபாடு இல்லை. மனிதனுக்கும் பொருளுக்கும் வித்தியாசம் கிடையாது. அம்மாவோடு பேசுவதைப் போலவே ஒரு பூனைக்குட்டியோடும் ஒரு குழந்தையால் சிரித்துப் பேச முடியும், சண்டை போட முடியும். பக்கத்து வீட்டுத் தோழியைப் போலவே கற்பனைத் தோழியோடும் கையைப் பிடித்து நடக்கமுடியும். ஆம், பென்சிலுக்குப் பேச வரும். அதெப்படி என்று கேட்டால், எழுத மட்டும் எப்படி அதற்குத் தெரிகிறதாம் என்று பதில் கேள்வி வரும்.

சாதுவான பூனை ஆளுயரக் கரடியாக மாறும். சிங்க பொம்மைக்குத் திடீரென்று நான் பொம்மையல்ல நிஜ சிங்கம் என்பது தெரிந்துவிடுகிறது. இல்லை, நீ பொம்மைதான் என்று சொன்னால் அது ஹாஹா என்று சத்தம் போட்டுச் சிரிக்கிறது. நான் என்ன செய்யட்டும் அம்மா என்கிறாள் கேத்தரீன். இத்தனை பெரிய காரில் என் பூச்சுவுக்கு இடமில்லையா என்கிறாள் மேரி. இன்று வெள்ளை, நாளை பச்சை என்று ஆடையைத் தினமும் மாற்றுகிறோம் அல்லவா? அதேபோல் கூக்கூ இன்று ஆண், நாளை பெண். போன வாரம் இதே கூக்கூ ஒரு ரோபாவாக மாறிவிட்டான் தெரியுமா என்கிறாள் ஜெனிபர். என்னைப் பார்த்துப் பார்த்து நான் சாப்பிடுவதை எல்லாம் ஜிம்மும் சாப்பிடுகிறது அப்பா என்கிறான் பீட்டர்.

கேத்தரீனிடம் ஒரு பெரிய ரகசியம் இருக்கிறது. உன் அம்மா நினைப்பதுபோல் நான் பூனை பொம்மையல்ல. நிலாவுக்குப் போய்கொண்டிருக்கும்போது வழி தவறி இங்கு வந்துவிட்டேன். என்னை அழைத்துப் போக என் அப்பா விரைவில் வருவார். அதுவரை இங்கே ஒளிந்திருக்கிறேன். யாரிடமும் சொல்லிவிடாதே! இப்போதுவரை கேத்தரீன் இதை வெளியில் சொல்லவில்லை. கரடிக்கோ வேறு பிரச்சினை. கேத்தரீனை அதற்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. என் அப்பா வந்தால் உன்னை விட்டுப் பிரியவேண்டுமே என்று ஒரே வருத்தம்.

ஓர் அறையில் இருந்து இன்னோர் அறைக்குப் போகிறோம் இல்லையா? அதேபோல், நிஜ உலகிலிருந்து கற்பனை உலகுக்கு மிகச் சுலபமாகக் குழந்தைகளால் நகர்ந்து செல்ல முடிகிறது. குழந்தைகளின் உலகில் பல வீடுகள். ஒவ்வொன்றிலும் பல அறைகள். ஒவ்வோர் அறையிலும் பல ஆச்சரியங்கள், பல ரகசியங்கள். கரடியும் பூச்சுவும் கூக்கூவும் இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான நண்பர்களும் அங்கேதான் தங்கியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும்கூட இப்படிப் பல ரகசிய நண்பர்கள் இருக்கிறார்கள். உங்கள் ரகசிய நண்பர் யார்?

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x