Last Updated : 24 Jan, 2018 11:09 AM

 

Published : 24 Jan 2018 11:09 AM
Last Updated : 24 Jan 2018 11:09 AM

உடல் எனும் இயந்திரம் 7: சத்துகளை அள்ளித் தரும் வள்ளல்!

 

டலின் மிகப் பெரிய சுரப்பி (Gland) கல்லீரல். வயிற்றின் மேற்புறத்தில், வலது பக்கத்தில், இலைபோல் விரிந்திருக்கும் உதரவிதானத்துக்குக் கீழே, கால் இல்லாத காளான் வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது, கல்லீரல்.

ஒன்றரை கிலோ எடையுள்ள கல்லீரல் மார்புக் கூட்டுக்குப் பின்புறம் பாதுகாப்பாகப் பதுங்கியிருக்கிறது. இதன் அடிப்பகுதியில் சிறிய வெள்ளரிப் பிஞ்சு அளவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது, பித்தப்பை (Gall badder).

கல்லீரல் ஒரு ‘முக்கோண’த் தசைப் பெட்டி. பஞ்சு மாதிரி அத்தனை மிருது! பார்ப்பதற்கு ஒரே உறுப்பாகத் தெரிந்தாலும் அமைப்பில் வலப்பக்கம் ஒன்றும் இடப்பக்கம் ஒன்றுமாக இரண்டு பகுதிகளைக் கொண்டது.

சில விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கல்லீரலின் இந்தப் பகுதிகள் வேறுபடுகின்றன. மேலும், அசைவ உண்ணிகளில் இது அதிக எடை உள்ளதாகவும், அனைத்துண்ணிகளில் அதைவிட எடை குறைந்ததாகவும், சைவ உண்ணிகளில் மிகக் குறைந்த எடை உள்ளதாகவும் இருக்கிறது. புழுக்களுக்குக் கல்லீரல் இல்லை.

குடையை விரித்தால், அதன் மத்தியிலிருந்து கைப்பிடிக் கம்பி வெளிவருகிறதல்லவா? அதுபோலத்தான் கல்லீரலின் மத்தியப் பிரதேசத்திலிருந்து (Porta Hepatis) நான்கு அங்குல நீளத்தில் ‘பித்த நாளம்’ (Bile duct) கிளம்புகிறது. இது கீழ்நோக்கி இறங்கி, பித்தப்பையோடும், முன்சிறுகுடலோடும் (Duodenum) கல்லீரலை இணைக்கிறது.

தேன் கூட்டில் உள்ளதுபோல் பல்லாயிரக் கணக்கான ‘பல்லாங்குழிகள்’ கல்லீரலுக்குள் காணப்படுகின்றன. அவற்றுள் உள்ள கோடிக்கணக்கான ‘ஹெப்பாடிக் செல்கள்’ பித்தநீரைச் (Bile) சுரக்கின்றன. இந்தப் பித்தநீர், பித்த நாளம் வழியாகப் பித்தப்பைக்கு வந்து கொஞ்ச காலம் தங்கிவிட்டு, செரிமானத்துக்கு உதவ முன்சிறுகுடலுக்குச் செல்கிறது. உடலின் தேவைக்கேற்ப தினமும் அரை லிட்டர்வரை பித்தநீரைச் சுரக்கிறது, கல்லீரல்.

உலகில் உள்ள நிபுணர்கள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாத ஓர் ஆச்சரியமான ‘கெமிக்கல் ஃபேக்டரி’ இது; அனுதினமும் ஐநூறுக்கும் மேற்பட்ட செயல்களைச் செய்கிறது. உதாரணத்துக்குச் சில…

அரிசிச் சோற்றில் கார்போஹைட்ரேட், பருப்பில் புரதம், இறைச்சியில் கொழுப்பு போன்றவை உள்ளன. அவற்றை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தில் கலப்பதற்குக் குடல் பிரதேசத்தில் ஏற்பாடு செய்கிறது கல்லீரல். அதேவேளை சாப்பிட்ட உணவு முழுவதும் குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்துவிட்டாலும் ஆபத்து. அதைத் தவிர்க்க, தேவையான அளவுக்கு ரத்தத்துக்கு குளுக்கோஸைக் கொடுத்துவிட்டு, மீதியை கிளைக்கோஜனாக மாற்றி, தன்னிடம் சேமித்துக்கொள்கிறது. காய் கனிகளில் காணப்படும் வைட்டமின்களைக் குடலில் கிரகித்து ஊட்டச் சத்தாக மாற்றுவதும் இதே கல்லீரல்தான்.

சரி, இத்தனை சத்துகளையும் வைத்துக்கொண்டு என்னதான் செய்கிறது கல்லீரல்?

இரண்டு சக்கர வாகனத்தில் கார்ப்புரேட்டர் செய்யும் பணியைத்தான் உடலில் கல்லீரல் செய்கிறது. பெட்ரோலை எரிசக்தியாக மாற்றி, ஓட்டும் சக்தியாகக் கொடுப்பது கார்ப்புரேட்டரின் பணி. அதைப் போலவே உணவில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து, உடலுக்கு உதவும் சக்தியாக மாற்றித் தருகிறது கல்லீரல்.

உடலின் அவசரத்துக்கும் ஆபத்துக்கும் அயராமல் சத்துகளை அள்ளித் தரும் வள்ளல், கல்லீரல்! வறுமை, பஞ்சம், உண்ணாவிரதம் போன்ற காலங்களில் பலர் மாதக்கணக்கில்கூட சாப்பிடாமல் இருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படுவது உண்டு. அப்போது அவர்களுக்கு நாட்கணக்கில் சக்தியைத் தருமளவுக்கு கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துகள் கிடைக்காது. இதுபோன்ற நேரத்தில் உடலில் படிந்திருக்கும் கொழுப்பிலிருந்து சத்தை எடுத்து குளுக்கோஸாக மாற்றி உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க வழிசெய்து, உயிர் காக்கும் போராளியாக உருமாறுகிறது கல்லீரல்.

Liver -1

சாப்பிட்ட உணவு மட்டுமல்ல, விழுங்கிய மாத்திரை, சுவாசித்த புகை, தலைக்குத் தேய்த்த தைலம், குடித்த மது... இப்படி எல்லாமே கல்லீரலுக்குத்தான் செல்கிறது.

ரசாயனங்களைத் தனித்தனியாகப் பிரித்து நல்லது எது, கெட்டது எது எனத் தெரிந்து, மாத்திரை, மருந்து போன்ற நல்லதைச் செயல்பட வைக்கிறது. புகை, மது போன்ற கெட்டதைச் செயலிழக்கச் செய்கிறது.

உடலில் எங்காவது வெட்டுக்காயம் ஏற்பட்டால் ஒன்றிரண்டு நிமிடங்களில் ரத்தம் வருவது நின்று விடுகிறதல்லவா? இதற்குக் கல்லீரல் தயாரிக்கும் ‘புரோத்திராம்பின்’ என்ற ரசாயனம்தான் காரணம்.

ரத்த அணுக்களின் ஆயுட்காலம் முடியும்போது, அவை மண்ணீரலுக்கு (Spleen) வந்து அழிகின்றன. அப்போது ‘பிலிருபின்’ என்ற நச்சுப்பொருள் வெளிவருகிறது. இது ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருந்தால் காமாலை ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தாகிவிடும். எனவே, அதைப் பக்குவப்படுத்தி, பித்த உப்புகளாக மாற்றிச் சிறுநீரிலும் மலத்திலும் ‘பத்திரமாக’ அனுப்பிவைக்கிறது கல்லீரல். இதன் பலனால் ரத்தம் சுத்தமாகிறது.

இவை மட்டுமா? கல்லீரலுக்கே உரித்தான தனி குணம் எது தெரியுமா? தனக்கு எந்தப் பாதிப்பு வந்தாலும் ஆரம்பத்தில் அதை வெளிக்காட்டாது. தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, முடிந்தவரை செயல்படுகிற அளவற்ற ஆற்றல் நம் உடலில் கல்லீரலுக்கு மட்டுமே உண்டு.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x