Last Updated : 11 Oct, 2017 10:40 AM

 

Published : 11 Oct 2017 10:40 AM
Last Updated : 11 Oct 2017 10:40 AM

வியப்பூட்டும் இந்தியா: ராணியின் படிக்கிணறு

 

கு

ஜராத் மாநிலத்தில் மழைப் பொழிவு குறைவாக இருப்பதால் அங்கே தண்ணீர்ப் பிரச்சினை எப்போதும் இருந்திருக்கிறது. தண்ணீர்ப் பிரச்சினையைச் சமாளிக்க படிக்கிணறுகள் அமைக்கும் வழக்கம் கி.பி 4-ம் நூற்றாண்டிலிருந்து 18-ம் நூற்றாண்டுவரை இருந்திருக்கிறது.

அகமதாபாத்திலிருந்து 110 கி.மீ தூரத்தில் இருக்கிறது பதான் நகரம். பசுமையான புல்வெளிக்கு நடுவே ’ராணி கி வாவ்’ எனப்படும் மிகப் பிரம்மாண்டமான படிக்கிணறு அமைந்துள்ளது. படிக்கிணறுகளின் ராணி என்றே இதை அழைக்கலாம். உலகப் பாரம்பரியச் சின்னங்களில் இதுவும் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, யுனெஸ்கோ மூலம் பராமரிக்கப்பட்டுவருகிறது.

சோலாங்கி வம்சத்தைச் சேர்ந்த முதலாம் பீம்தேவ் மன்னரின் நினைவாக அவருடைய மனைவி ராணி உதயமதியால் இந்தப் படிக்கிணறு ஆரம்பிக்கப்பட்டது. இவர்களுடைய மகன் முதலாம் கர்ணதேவ் மூலம் கட்டி முடிக்கப்பட்டது.

64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த படிக்கிணறு, 7 அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே 30 கி.மீ நீளமுள்ள சுரங்கப் பாதை சித்பூருக்குச் செல்கிறது. போர்க் காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பிச் செல்வதற்காகக் கட்டப்பட்டிருக்கிறது.

கி.பி 1063 முதல் 1068 வரை இந்தக் கிணற்றைக் கட்டியிருக்கிறார்கள். காலப் போக்கில் இந்தப் படிக்கட்டு கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால் நீண்ட காலம் மக்களுக்கு இந்தப் படிக்கிணறு பற்றித் தெரியாமலே போய்விட்டது. 1960-ம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டது.

விஷ்ணுவின் தசாவதாரங்கள், புத்தர், முனிவர்கள், நாகக் கன்னிகைகள், கண்ணாடியைப் பார்த்து பொட்டு வைக்கும் பெண், யானைகள் போன்று 800க்கும் மேலான சிற்பங்கள் பக்கவாட்டுச் சுவர்களில் கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களிலும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. கிணற்றுக்குச் செல்லும் படிக்கட்டுகள் நேராக இல்லாமல் பக்கவாட்டில் ஏறவும், இறங்கவும் வசதியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

மழை நீரைச் சேமிக்கும் இடமாகவும் இந்தப் படிக்கிணறுகள் இருந்திருக்கின்றன. 700 கிணறுகள் வரை இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதுவரை 120 படிக்கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

11CHSUJ_STEPWELL6

குஜராத் தலைநகர் காந்தி நகரிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அடாலஜ் நகரில் உள்ள படிக்கிணறும் புகழ்பெற்றது. இது 5 அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து அகலமான படிகளில் இறங்கிய பிறகு தூண்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. தூண்களிலும், சுவர்களிலும் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

5 மண்டபங்களுக்குக் கீழே நீச்சல் குளம் அளவுக்குக் கிணறு வெட்டப்பட்டுள்ளது. கிணறு செவ்வக வடிவில் இருந்தாலும் மேல்கூரை முக்கோண வடிவில் உள்ளது. மேலே முழுவதுமாக மூடப்படாமல், சூரிய வெளிச்சமும் காற்றும் வரும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் படிக்கிணறு குளிர்ச்சியாகவே இருக்கிறது.

தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தில் நம் முன்னோர்களின் மதிநுட்பத்தையும் கட்டிடக்கலையின் சிறப்பையும் இந்தப் படிக்கிணறுகள் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன!

தொடர்புக்கு: mangai.teach@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x