Published : 23 Aug 2017 10:34 AM
Last Updated : 23 Aug 2017 10:34 AM

டிங்குவிடம் கேளுங்கள்! - நிறத்தை மாற்ற முடியுமா?

என் தங்கை வெள்ளையாக இருக்கிறாள். நான் கறுப்பாக இருப்பதால் என்னைப் பலரும் கிண்டல் செய்கிறார்கள். சிவப்பழகு க்ரீமைப் பயன்படுத்திப் பார்த்தேன். நிறம் மாறவில்லை. நான் வெள்ளையாக மாறுவதற்கு ஒரு யோசனை சொல்ல முடியுமா டிங்கு?

– ஆர்த்தி, மேட்டூர் அணை.

எந்த க்ரீமைப் பயன்படுத்தினாலும் தோலின் நிறம் மாறாது. இதை நீங்கள் அனுபவப்பூர்வமாகவே அறிந்துகொண்டீர்கள். வெள்ளை உயர்வானது, கறுப்பு தாழ்வானது என்ற எண்ணத்தைத்தான் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். நிலநடுக்கோட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் சூரிய ஒளி அதிகமாகவும், மற்ற பகுதிகளில் குறைவாகவும் விழுகிறது. சூரிய ஒளியில் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் இருக்கின்றன.

இவை ஓசோன் மண்டலத்தால் வடிகட்டப்படுகின்றன. அப்படியும் மீறி வரும் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கும் சக்தி நம் தோலிலுள்ள நிறமிகளுக்கு உண்டு. மெலனின் நிறமி அதிகம் சுரந்தால் கறுப்பாகவும் குறைவாகச் சுரந்தால் வெள்ளையாகவும் தோல் மாறுகிறது. இப்போது சொல்லுங்கள், ஆபத்து உண்டாக்கும் கதிர்களைத் தடுத்து, உடலுக்கு நோய் வராமல் பாதுகாக்கும் கறுப்புத் தோல் தாழ்வானதா ஆர்த்தி? உங்களுக்கு ஒன்று தெரியுமா, இந்தியர்கள் எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நாம் ‘கறுப்பர்கள்’ தான்.

அவர்களைப் பொறுத்தவரை, அவர்களைத் தவிர மற்றவர்கள் கறுப்பர்களே. அதாவது உங்களையும் உங்கள் தங்கையையும் அவர்கள் ஒரே நிறமாகத்தான் பார்ப்பார்கள். நாம் என்பது நம் நிறமல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இயற்கையாக அமைந்த உருவத்தையும் நிறத்தையும் குறித்துப் பெருமைப்படுவதற்கோ வருத்தப்படுவதற்கோ எதுவுமே இல்லை.

எல்லாமே விசிறிதானே, அது ஏன் எக்ஸாஸ்ட் ஃபேன், ஃபேன் என்று தனித்தனியாக அழைக்கிறோம் டிங்கு?

– லெ. குமுதா, அருப்புக்கோட்டை.

இரண்டும் விசிறிகள்தான், ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு பணிகளைச் செய்கின்றன குமுதா. சாதாரண ஃபேன் அறையில் குளிர்ந்த காற்றோட்டத்தை உருவாக்க உதவுகிறது. எக்ஸாஸ்ட் ஃபேன் உள்ளே நிலவும் சூடான காற்றை வெளியே அனுப்ப உதவுகிறது. சாதாரண ஃபேனிலிருந்து காற்று வரும், எக்ஸாஸ்ட் ஃபேன் காற்றை வெளியேற்றும்.

 

உன் அப்பா, அம்மா யார், அவர்கள் பெயர் என்ன என்று கேட்டு நீண்ட நாள் ஆகிவிட்டது. ஏன் என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை டிங்கு?

– சி.எஸ். பிரவீன், 7-ம் வகுப்பு, க்ரீன் பார்க் சர்வதேசப் பள்ளி, நாமக்கல்.

உங்களைப்போல் நிறையப் பேர் கேள்விகளை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சுவாரசியமான, பயனுள்ள கேள்விகளுக்கே நான் பதிலளிக்க விரும்புகிறேன். அதனால் வேறு கேள்விகள் கேளுங்கள், நிச்சயம் பதில் அளிக்கிறேன் பிரவீன்.

 

மயிலிறகு உயிரற்ற பொருள். அது எப்படிக் குட்டி போடும் என்று காலம் காலமாகச் சொல்லிவருகிறார்கள் டிங்கு?

– எஸ். நந்தினி, 8-ம் வகுப்பு, அரசினர் நடுநிலைப் பள்ளி, ஆத்தூர்.

எளிதில் கிடைக்காத, அழகான மயிலிறகைப் பத்திரமாக வைத்துக்கொள்வதற்காக, யாராவது இப்படிச் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன் நந்தினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x