Last Updated : 23 Aug, 2017 10:33 AM

 

Published : 23 Aug 2017 10:33 AM
Last Updated : 23 Aug 2017 10:33 AM

அம்மாவின் சேட்டைகள் 15: இருட்டா வெளிச்சமா?

எனக்கு வெளிச்சம் வேண்டும். அம்மாவுக்கு இருட்டு பிடிக்கும். இந்த வித்தியாசத்தால் வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கும். அம்மாவிடம் சண்டை போடுவதற்காகவே வெளிச்சம் சம்பந்தமா நிறைய தகவல் சேகரிப்பேன். ஆனால், அம்மாவின் இருட்டு என்னைத் துரத்தும். “உனக்கு இருட்டு பழகியிருந்தால் அது பிடித்தும் இருக்கும்” என்று சொல்வார் அம்மா. “இருளைப் போக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்பேன் நான். “அறிவு ஒளி வீசுவதற்காக உன் மண்டையின் இருளை நீக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது அது” என்பார் அம்மா.

“ஒளி படைத்த கண்ணினாய் வாவாவா!” என்று நான் பாடுவேன். “உன் கண்ணொளி பற்றியது அது. ஒளி இருக்கும் பட்சத்தில் இருட்டு பிடிக்கும். தப்பாகப் புரிந்துகொள்ளாதே. என் பாரதி, இருளென்பது குறைந்த ஒளி என்றும் குறிப்பிட்டுள்ளார்” என்று அம்மா வாதிடுவார்.

அம்மா இரவை விரும்ப நிறைய காரணங்கள் உண்டு. சின்னதா இருக்கும்பொழுது ராத்திரியில அவுங்க அப்பாயி பாட்டிகிட்ட கதை கேட்ட காரணம்கூட இருக்கலாம். அதைப் பத்திச் சொல்லும்பொழுதுதான் எப்படா ராத்திரி வரும்னு காத்துக்கிட்டு இருப்பேன்னு சொல்லுவாங்க. பவுர்ணமி நாட்கள்ல இரவு 12 மணி வரை விளையாடுறதைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சா முடிக்க முடியாம சொல்லிக்கிட்டே இருப்பாங்க. பவுர்ணமியன்று குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விளையாடுவார்களாம். பெரியவுங்க விளையாடத் தெரியாம விளையாடுறதைப் பார்க்க ஜாலியா இருக்குமாம்.

திருவிழா நாட்களில் கும்மியடிக்கிறது அது இதுன்னு ராத்திரியிலதான் ஏகப்பட்டது இருக்குமாம். அது மட்டுமல்ல, ராத்திரியில முயல் புடிக்க போறவுங்க, மீன் பிடிக்கப் போறவுங்க, வயலுக்குத் தண்ணி பாய்ச்சப் போறவுங்ககிட்ட கதை கேட்டுப் பழக்கம். இதெல்லாம்தான் அம்மாவுக்கு ராத்திரி பிடிக்கக் காரணமா இருக்கும்னு நினைச்சி, அதை அம்மாவிடம் கேட்பேன்.

“அது மட்டுமா? சாயங்காலம் ஆறு மணிக்குப் பிறகு காலைல ஆறு மணி வரை இருள் இருக்கும். இரவில் என்னென்ன நடக்கும்னு தெரியுமா?அதெல்லாம் எப்படி நடக்குதுன்னே தெரியாது. காட்டுச் செடிகள் பூத்துக் குலுங்கும். பழ மரங்கள் பழுத்துத் தொங்கும். பழுத்த பழங்கள் சிதறிக் கிடக்கும். யாரும் பார்க்காததால எல்லாம் நடக்கிறதோன்னு இருக்கும். இருள் முழுவதும் விலகாமல் இருக்கும் அதிகாலை புது உலகைக் காட்டும்.

நாம் தூங்கும்பொழுதுதான் நாய்களும் பேய்களும் உலாவருகின்றன. இரவே இல்லையென்றால் தேள், பூரான்களை எப்படிப் பார்க்க முடியும்? ராக்கோழி என்ற குட்டி வண்டின் அலறல் சத்தத்திற்கும்கூட இரவு வேண்டும். பூச்சிகளும் பாம்புகளும் பயமற்றுத் திரிகின்றன. எங்கள் அப்பாயி பாட்டியின் கதைகளில் வரும் முனிவர் கடல் மேல் நடந்து செல்வது போன்ற காட்சிகள் நம் அருகில் நடப்பது போலவே இருக்கும். கதை கேக்குற இடத்தில் கதையே கனவாகி தூங்கிடுவேன். நடுராத்திரியில எழுந்து வீட்டுக்கு ஓடுவேன்.

என் அம்மா எல்லா அசைவுகளுக்கும் முழிப்பார்கள். நடுராத்திரியில என் பக்கத்துல நட்டுவாக்காலி வந்து படுத்திருந்துச்சி, என்னைக் கடிக்காமல். அதை அடிச்சி தூக்கிப்போட்டதுகூட எனக்குத் தெரியாது. எங்கம்மாவின் கண்ணும் காதும் இருட்டுல நல்லா முழிச்சிருக்கும். எதைப் பத்தியும் கவலைப்படாம இருக்க நமக்கு இருட்டு வேண்டும். எங்க ஊர் காட்டுக்குள்ள கழுதைப்புலி வந்ததை ரெண்டு மூணு பேர் பார்த்ததும் இருட்டுற நேரத்துலதான். அதுக்கப்புறம் ஒரு மாசம் வரைக்கும் எல்லார் கண்ணுலயும் கழுதைப்புலி தெரிஞ்சிகிட்டே இருந்துச்சி.

மழை இருட்டு, கும்மிருட்டு. அடுத்த அடி எடுத்து வைக்கிறதுகூட கஷ்டம். கும்மிருட்டைக்கூட கொஞ்சம் அதிகப்படுத்தும் தவளையோட பாட்டு. அமாவாசை இருட்டில் நிலாவே இல்லாவிட்டாலும் எதிரில் உள்ளதைப் பார்க்க முடியும். டார்ச்லைட்டின் ஒளியில் எத்தனை விளையாட்டுகளை விளையாடலாம்! அத்தனையும் விளையாண்டிருக்கிறோம். பவுர்ணமி இருட்டு, வெளிச்சத்தோடது. இரவு நேரம் நாம் எதிர்பார்த்தபடி இருப்பதில்லை.

குளிர்காற்றைக் கொண்டு வந்து நம்மை எழுப்பும். நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கும் வானத்தில் அடுத்தநாள் ஒற்றை முழுநிலா உட்கார்ந்திருக்கும். நட்சத்திரங்கள் எங்கே தொலைஞ்சி போச்சின்னு தேடணும். அடுத்த பவுர்னமியில நட்சத்திரங்கள் சூழ நிலா அமர்ந்திருக்கும். பவுர்ணமிக்கு மூன்று நாட்கள் முன்பிருந்தே எங்கள் வீட்டுச் சாப்பாடு நிலாச்சோறாக மாறும்.

இரவு கறுப்பானதா இல்லை சாம்பல் நிறமா எனக் கண்டுபிடிக்க முடியாதபடிதான் இருக்கும். அம்மா வருவதை அப்பாயி என்று வைத்துக்கொள்ளலாம். எதுவும் செய்தே தீரவேண்டும் எனக் கட்டாயமில்லை. மலை மரமாகும் அதிசயங்களைப் புரிந்துகொள்ள இரவில்லையென்றால் முடியாது” என்று இரவு பற்றி அம்மா அடுக்கிக்கொண்டே போவார்.

நான் வளர்ந்த பிறகு வெளிச்சம் பற்றி இப்படித்தான் பேசப்போகிறேன் என்பேன். “மின்னொளி இருந்ததால் சுலபமாகப் படித்து இப்படியொரு வேலைக்கு வந்தேன். பொய் கற்பனைக்குள்ளும் வீணான கதைகளுக்குள்ளும் பயணிக்காமல் இரவில் வண்ணங்களை உள்ளது உள்ளபடி பார்த்தேன்” என்று பேசுவேன், என்பேன். அம்மாவுக்கு முகம் மாறும். அவர்கள் சொல்லும் இருட்டின் மகத்துவம் எனக்குப் புரியவில்லையே என்று இருக்கும். வேறு வழியில்லாமல், “அவரவர் ஞானம் அவரவர்க்கு, வாதமும் பிடிவாதமும்” என முணுமுணுப்பார்கள். இரவில் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டே அடுத்த அடி எடுத்துவைத்த குழந்தை அனுபவம் புதிர் நிறைந்ததா? பயம் நிறைந்ததா என்ற குழப்பம் மறையாமலே இன்னும் நான் இருக்கிறேன்.

தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x