Published : 09 Aug 2017 11:08 AM
Last Updated : 09 Aug 2017 11:08 AM

டிங்குவிடம் கேளுங்கள்: மிகச் சிறந்த நண்பர்கள் யார்?

நண்பர்கள் தினம் கொண்டாடினாயா? உன்னைப் பொறுத்தவரை மிகச் சிறந்த நண்பர்கள் யார்? உன்னுடைய நண்பர் யார்?

– எம். ஜோசப், பரமக்குடி.

நண்பர்கள் தினம், அன்னையர் தினம் போன்ற எந்தத் தினங்களையும் நான் கொண்டாடுவதில்லை. எல்லா நாட்களும் எல்லா உறவுகளையும் மதித்து, அன்பாக நடந்துகொண்டாலே தினம் தினம் கொண்டாட்டம்தானே!

நான் பலரின் நட்பைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவற்றில் மிகவும் உயர்வாக நினைப்பது பொதுவுடைமையின் தந்தை கார்ல் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் இருவரின் நட்புதான். மார்க்ஸியம் என்ற சித்தாந்தம் மார்க்ஸ் பெயரில் இருந்தாலும், அதில் ஏங்கெல்ஸின் பங்கும் இருக்கிறது! மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் படைப்புகளையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது! இந்த அபூர்வமான, ஆக்கப்பூர்வமான நட்பு 40 ஆண்டு காலம் நீடித்து, உலகின் தலைசிறந்த நட்பாக நிலைபெற்றுவிட்டது.

என்னுடைய நண்பர் என்று தனியாக ஒருவரைச் சொல்ல முடியாது. நீங்கள் உட்பட எல்லோரும் என்னுடைய நண்பர்கள்தான் ஜோசப்.

நம்மைப் போல மல்லாந்து தூங்கும் விலங்குகள் ஏதாவது இருக்கிறதா டிங்கு?

–ஆர். தனுஸ்ரீ, சின்னத் திருப்பதி, சேலம்.

முதுகுத்தண்டு தரையில் படும்படி தூங்கும் ஒரே உயிரினம் மனிதன்தான் தனுஸ்ரீ.

Archerfish என்று ஏன் பெயர் வந்தது? ஒருவேளை அதுக்கு வில்வித்தை தெரியுமா டிங்கு?

–பி. ரம்யா, அரசினர் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.

ஆமாம் ரம்யா. இந்த மீனுக்குச் சிறிய பூச்சிகளும் சிறிய உயிரினங்களும்தான் உணவு. அவற்றை நீருக்கு வெளியில் வேட்டையாடி உண்கிறது. மரங்கள், செடிகள் இருக்கும் பகுதிக்கு வந்து உணவுக்காகக் காத்திருக்கும். ஏதாவது பூச்சியோ விலங்கோ செடிகளில் இருப்பதைக் கவனித்துவிட்டால், வாய் நிறையத் தண்ணீரை நிரப்பி, இரையின் மீது துல்லியமாகப் பீய்ச்சியடிக்கும்.

எதிர்பாராத தாக்குதலில் இரை கீழே விழும். வேகமாகச் சென்று தன்னுடைய பெரிய வாயால் இரையைப் பிடித்துவிடும். வில்லிலிருந்து அம்பு சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்குவதுபோல, இந்த மீனின் வாயிலிருந்து நீர் இரையின் மீது பட்டு, வீழ்வதால் வில்வித்தை மீன் என்ற பெயரே வந்துவிட்டது. 5 மீட்டர் உயரத்துக்குக்கூட இவற்றால் தண்ணீரைப் பீய்ச்சியடிக்க முடியும். ஆனால் 2 மீட்டர் உயரத்திலேயே இரை கிடைத்துவிடுவதால், எளிதில் வேட்டையாடி விடுகின்றன. ஒருமுறை தண்ணீரைப் பீய்ச்சும்போது இரை விழவில்லை என்றால், அடுத்தடுத்து முயற்சிகளைத் தொடர்ந்து, வீழ்த்திவிடுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x