Published : 01 Jun 2016 11:38 AM
Last Updated : 01 Jun 2016 11:38 AM

ரூபிக் புதிரைக் கண்டுபிடித்தது யார்?

மூளைக்கு வேலை கொடுக்கும் ரூபிக் கியூப் விளையாட்டு உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? இந்த விளையாட்டைக் கண்டுபிடித்தது யார்? இதைத் தெரிந்துகொள்வோமா?

ரூபிக் விளையாட்டுக் கருவியைக் கண்டுபிடித்தவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் யுர்நோ ரூபிக். 1974-ம் ஆண்டில் முப்பரிமாணக் கற்பித்தல் தேவைக்கு ஒரு வடிவமைப்பு தேவைப்பட்டது.

அப்படி வடிவமைக்கப்பட்ட மாதிரிக் காட்சிப் பொருள்தான் இந்த ‘ரூபிக்’ விளையாட்டு கருவி. ஒவ்வொரு பக்கத்திலும் 9 சிறு சதுரங்கள், 6 வித்தியாசமான வண்ணங்களால் இது உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் ‘மேஜிக் கியூப்’ என்றே இதை அழைத்தார்கள். ஆனால், 1980-ம் ஆண்டிலிருந்து ‘ரூபிக்ஸ் கியூப்’ எனப் பெயர் மாற்றப்பட்டது.

ஹங்கேரியில் 1982-ம் ஆண்டு முதன்முதலாக ரூபிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த மின்ஹதாய் என்பவர் 22.95 நொடியில் ரூபிக் கியூபுக்குத் தீர்வு கண்டு சாதனை படைத்தார்.

2003-ம் ஆண்டிலிருந்து ஹங்கேரியில் தொடர்ச்சியாக உலக ரூபிக் சாம்பியன் போட்டிகளை ரூபிக் நிறுவனம் நடத்தி வருகிறது. 2007-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திபாட் ஜாக்னாட் என்பவர் ரூபி புதிரைச் சரி செய்து புதிய உலகச் சாதனை செய்தார். 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் (9.86 நொடிகள்) இந்தச் சாதனையைப் படைத்தார்.

இதுவரை உலகம் முழுவதும் சுமார் 40 கோடிக்கும் அதிகமாக ரூபிக் கட்டைகள் விற்கப்பட்டுள்ளன. இன்று ரூபிக் புதிர், கம்ப்யூட்டர் கேமாகவும் வந்துவிட்டது.

தகவல் திரட்டியவர்: எம். ஜெய்கணேஷ்,
10-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி,
பச்சைமலை, கரூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x