Published : 19 Mar 2014 12:00 AM
Last Updated : 19 Mar 2014 12:00 AM

மறதியால் கிடைத்த மருந்து

அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர். மனிதனைத் தாக்கும் நோய்களுக்கு எதிரான மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் வல்லவர். தன்னுடைய ஆராய்ச்சியின்போது சின்னச் சின்ன விஷயங்களை மறந்துவிடுவார்.

ஒருமுறை தன் வேதியியல் கூடத்தில் ஆராய்ச்சியில் இருந்தார். ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் குடுவைகளைச் சுத்தம் செய்யாமல் அப்படியே வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.

நீண்ட விடுமுறை முடிந்து மீண்டும் ஆய்வுக் கூடத்துக்கு வந்தார். சுத்தம் செய்யப்படாத ஆய்வுக்கூடம் அவரை வரவேற்றது. குடுவை களிலும் கிண்ணங்களிலும் இருந்த பொருட்கள் கெட்டுப்போயிருந்தன. அவற்றை எல்லாம் குப்பையில் போட்டுக் கொண்டிருந்தார்.

குடுவைகளைச் சுத்தம் செய்யும்போது தான் ஃப்ளெமிங்கின் நண்பர் ஒருவர் அவரு டைய ஆராய்ச்சியைப் பார்க்க வருவதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருக்கும் கிண்ணங்களில் அதிகம் கெடாமல் இருக்கிற பொருளைத் தேடினார்.

அப்போது ஒரு கிண்ணத்தில் இருந்த பொருளைச் சுற்றிப் பூஞ்சைகள் வளர்ந் திருந்தன. ஆனால் அந்தப் பூஞ்சைகள் பரவியிருந்த இடத்தில் மட்டும் பாக்டீரியா வின் தாக்குதல் இல்லை. உடனே ஃப்ளெ மிங்குக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

அந்தப் பூஞ்சை இருந்த கிண்ணத்தை எடுத்து சாறு வடித்தல் முறையில் பூஞ்சைகளைப் பிரித்தெடுத்தார். அந்தப் பூஞ்சைகள் பெனிசிலியம் நொடேடம் வகையைச் சார்ந்தவை என்பது புரிந்தது. தொடர்ச்சியான ஆராய்ச்சியில் அந்தப் பூஞ்சையில் இருந்து பாக்டீரியத் தாக்குதலுக்கு எதிரான ஆண்டிபயாட்டிக் மருந்தைக் கண்டுபிடித்தார். பெனிசிலியம் பூஞ்சையில் இருந்து பெறப்பட்ட அந்த மருந்துக்கு ‘பெனிசிலின்’ என்று பெயர் வைத்தார்.

சில நேரங்களில் தவறுகள்கூட கண்டுபிடிப்புக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x