Published : 03 Feb 2016 11:04 AM
Last Updated : 03 Feb 2016 11:04 AM

படித்தால் மட்டும் போதுமா?

ஏட்டுக் கல்வி மட்டுமே ஏணியில் ஏற்றிவிடும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், வாழ்க்கைக் கல்வியின் மகத்துவத்தைப் பள்ளி மாணவர்களுக்கு அனுபவத்தில் புரியவைத்துக் கொண்டிருக்கிறார் ஒரு பள்ளித் தலைமையாசிரியர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ளது சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி. அரசு உதவி பெறும் இப்பள்ளியின் மாணவர்கள் அனைவருமே வறுமைக்கோட்டுவாசிகள். படிப்பில் ஜொலிக்கும் இவர்களுக்கு தனி ஆளாகச் சென்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் எழுதிக் கொடுக்கவும், சாதி, வருமானச் சான்றுகளுக்காக தாசில்தாருக்கு மனு கொடுக்கவும் தெரியும், ஒரு அஞ்சலகத்தில் நடக்கும் அத்தனை பணிகளும் இவர்களுக்கு அத்துபடி. எந்த வங்கியிலும் எத்தகைய பரிவர்த்தனையையும் எளிதில் முடித்துவிடுவார்கள். இப்படி இவர்களின் திறன்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கு இப்பள்ளியின் தலைமையாசிரியர் எல்.சொக்கலிங்கமும் ஒரு காரணம். மாணவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியைப் போதிக்கும் விதத்தை விவரிக்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்.

- எல்.சொக்கலிங்கம்

“புத்தகப் படிப்பு மட்டுமில்லாமல் உடல், அறிவு, மனம், வாழ்க்கை ஆகியவை இணைந்த ’ஸ்கொயர்’ கல்வியை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம். எட்டாம் வகுப்புப் படிக்கும் சௌமியா சந்தை ஓரத்தில் ஆடைகள் கிழிந்த நிலையில் கிடந்த அநாதைப் பெண்ணுக்குத் தனது வீட்டிலிருந்து உடுத்தத் துணியும் உணவும் கொண்டுவந்து கொடுக்கிறாள். காயத்ரி என்ற மாணவி பக்கத்து வீட்டில் வசிக்கும் கற்றலில் குறைபாடுள்ள குழந்தைக்குப் புரியும் மொழியில் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். மாணவி பரமேஸ்வரி தனது வீட்டுக்குப் பக்கத்திலுள்ள முதியவர் வைத்த மரக் கன்றுகளைத் தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறாள். இதுதான் எங்களிடம் அவர்கள் கற்ற வாழ்க்கைக் கல்வி.

ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு உள்ளிட்ட பல அதிகாரிகள் எங்கள் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம் மாணவர்கள் தைரியமாகக் கேள்வி கேட்கிறார்கள். எதையுமே நாங்கள் ஏட்டில் எழுதிச் சொல்லிக் கொடுப்பதில்லை. முடிந்தவரை சம்பந்தப்பட்ட இடத்துக்கே மாணவர்களை அழைத்துச் சென்று அனுபவக் கல்வியாகவே போதிக்கிறோம்” - பெருமிதம் கொள்கிறார் சொக்கலிங்கம்

தொடர்ந்து பேசிய அவர், “பருவ வயதைத் தொடும் மாணவிகளுக்காகக் குறிப்பிட்ட இடைவெளியில் பெண் மருத்துவர் ஒருவரை அழைத்து வந்து, மாணவிகள் மற்றும் பெற்றோரின் அனைத்துச் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்து, தேவையற்ற பயத்தைப் போக்குகிறோம். தமிழக அரசால் நடத்தப்படும் தேசிய திறனறிதல் தேர்வுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏழு மாணவர்கள் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெற்று வருகிறார்கள். அண்மையில் திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் நடத்திய மாநில அளவிலான கணிதத் திறன் போட்டியிலும் எங்கள் பள்ளியின் மாணவ - மாணவியர் கலந்துகொண்டு ஜமாய்த்திருக்கிறார்கள்” என்று அடுக்குகிறார் சொக்கலிங்கம்.

இப்பள்ளி மாணவர்களின் தனித் திறமைகளை வளர்ப்பதற்காக ஒவ்வொரு மாதமும் பேச்சுத் திருவிழா, எழுத்துத் திருவிழா, கவிதைத் திருவிழா, ஓவியத் திருவிழா என நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் முதல் இரண்டு மாணவர்களுக்குப் பரிசுகளும் தரப்படுகின்றன. இதனால், மாவட்டத்தில் எங்கு போட்டி நடந்தாலும் இப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.

படிப்பைத் தாண்டி இதெல்லாம் எதற்கு என்று கேட்டால், “பள்ளியைவிட்டுச் செல்லும் ஒவ்வொரு மாணவரும் தன்னம்பிக்கையுடன் செல்லவேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு,” என்று இப்பள்ளி ஆசிரியர்களிடமிருந்து சட்டென பதில் வருகிறது.

இந்த இலக்கு அவசியம்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x