Last Updated : 09 Nov, 2016 01:04 PM

 

Published : 09 Nov 2016 01:04 PM
Last Updated : 09 Nov 2016 01:04 PM

சித்திரக் கதை: ரோஜாப்பூவின் ஒரு நாள்!

வீட்டு வாசலில் இருக்கும் ரோஜாச் செடி முதன் முதலாகப் பூக்கிறது.

ரோஜாப்பூ மெதுவாகக் கண் திறந்து பார்த்தது. கண் இமைகளில் பற்றிக்கொண்டிருக்கும் பனித் துளிகளை அகற்றுவதற்காக அது முகத்தைச் சற்றுக் குலுக்கியது. ரோஜாப்பூவுக்கு உதவி செய்வதற்காகவே ஒரு மெல்லிய குளிர் காற்று தவழ்ந்து வந்தது. “டப், டப்” என்று மூன்று நான்கு பனித் துளிகள் தரையில் விழுந்தன.

“ரோஜா தங்கச்சி, நீ அழுகிறாயா?” நேற்று மலர்ந்த ஒரு செம்பருத்திப்பூ கேட்டது.

புன்னகையால் சிவந்த முகத்துடன் ரோஜாப்பூ பதில் சொன்னது: “இவ்வளவு அழகான உலகத்தில் யாரேனும் அழுவார்களா? அதோ பார், செம்பருத்தி அக்கா, கிழக்கில் சூரியன் உதிக்கிறது. அதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது, எவ்வளவு அழகு!”

“உம், பார்க்கலாம். கொஞ்சம் நேரம் போகட்டும். சூரியன் உன்னை வாட்டி வதைக்கும்”.

“எவ்வளவு சுகமான காற்று!” என்றது ரோஜாப்பூ.

செம்பருத்திப்பூ கேலியாகச் சிரித்தது.

அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு சிறுமி வந்தாள்.

“அய்! புதுசா ரோஜாப்பூ பூத்திருக்கே!” சிறுமி செடியின் பக்கத்தில் வந்து பூப்பறிக்கக் கை நீட்டினாள். ரோஜாப்பூ பயந்து நடுங்கியது. அது முடிந்தவரை தலையை உயர்த்திக்கொண்டு அசையாமல் நின்றது. செம்பருத்தி சிரித்தது.

“அடடா, பூ எட்டலையே” சிறுமி சொன்னாள்.

ஒரு இளம் காற்று வீசியது. அப்போது செடியின் கிளை தலை குனிய நேர்ந்தது. அப்போது அதனுடன் ரோஜாப்பூவும் குனிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. சிறுமியின் கை, ரோஜாப்பூவின் காம்பில் பட்டது. ஒரு நொடி! எல்லாம் முடிந்துவிட்டது என்று ரோஜாப்பூ அஞ்சியது. செம்பருத்திப்பூகூட மூச்சைப் பிடித்துக்கொண்டு பார்த்தது.

ஆனால், ரோஜாப்பூவின் சகோதரனான முள், ரோஜாப் பூவைக் காப்பாற்றியது. சிறுமியின் கையில் முள் குத்தி ரத்தம் வந்தது. அவள் அழுதுகொண்டு உள்ளே ஓடினாள்.

“நீ இப்போதும் ஏன் நடுங்குகிறாய்? இனி கொஞ்சம் நேரத்துக்கு பயப்பட வேண்டியதில்லை”- முள் சொன்னது.

“என் கதை முடிஞ்சதுன்னு நினைச்சேன்!” ரோஜாப்பூ சொன்னது.

“நீ நினைச்சதுபோல உலகம் அழகானதில்ல. இப்போது புரிஞ்சதா?” செம்பருத்தி கேட்டது.

வெயிலின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. ரோஜாவுக்குத் தாகமாகவும் களைப்பாகவும் இருந்தது. செம்பருத்திப்பூ வாடித் துவண்டு, ஒரு காற்று வீசினால்கூட விழுந்துவிடும் நிலையில் இருந்தது.

அந்த நேரத்தில் ஒரு இளம் பெண், வீட்டுக்குள்ளிருந்து வந்தாள். புதிதாகப் பூத்திருக்கும் ரோஜாப்பூவை அவளும் பார்த்து ரசித்தாள்.

அவள் பூப்பறிக்கக் கை நீட்டினாள். ‘இதோ, வாழ்க்கை முடியப்போகிறது!’ என்று ரோஜாப்பூ நினைத்தது. அது அழுதுகொண்டு செம்பருத்திப்பூவிடம், “நான் போறேன், செம்பருத்தியக்கா” என்றது. செம்பருத்திப்பூ துயரத்துடன் தலையாட்டி, அப்படியே உதிர்ந்துவிட்டது. கூர்மையான கல்லின் மீது கிடந்த செம்பருத்திப் பூவைப் பார்த்த ரோஜாப்பூ, தன் வேதனைகளை மறந்தது.

அப்போது வீட்டுக்குள்ளிருந்து யாரோ அந்தப் பெண்ணை அழைத்தார்கள். அவள் பூப்பறிக்காமல் அவசரமாகப் போனாள்.

“இந்த முறையும் தப்பிச்சேன்!” ரோஜாப்பூ மகிழ்ந்தது.

செம்பருத்திப்பூ பதில் சொல்லவில்லை. அது இறந்துவிட்டிருந்தது.

உச்சி வெயிலில் வாடித் தளர்ந்து நின்றபோது, ரோஜாப்பூ செம்பருத்திப்பூவை நினைத்துப் பார்த்தது.

வெயில் தணிந்தவுடன் வீட்டுக்குள்ளிருந்து ஒரு பாட்டி வந்தார். “இந்தப் பூவை இதற்கு முன்னால நான் பார்த்ததில்லையே. இது பூஜைக்கு ஏற்ற பூவாக இருக்கே!” இப்படிச் சொல்லியபடி அந்தப் பாட்டி ரோஜாப்பூவைப் பறித்தார்!

திடீரென்று ஏற்பட்ட ஆபத்தை நினைத்து ரோஜாப்பூ மனம் உருகி அழுதது.

“என்னால் உன்னைப் பாதுகாக்க முடியலையே, என்ன செய்வேன்!” என்று முள் வேதனைப்பட்டது.

“சின்னஞ்சிறு ரோஜாவே, என் செல்ல மகளே, என்னை விட்டுப் போகிறாயே!” என்று செடி கதறியது.

‘அம்மா, அம்மா’ என்று அழுதபடியே ரோஜாப்பூ, நிராதரவாகப் பாட்டியின் கைக்குள் கிடந்தது.

பாட்டி, ரோஜாப்பூவுடன் வீட்டுக்குள் சென்றார். வீட்டுக்குள் சூரிய வெளிச்சமும் இல்லை, காற்றும் இல்லை. அதனால் ரோஜாப்பூவுக்கு மூச்சுத் திணறியது.

வாடிச் சோர்ந்து கிடக்கும் நிறைய பூக்களின் நடுவில்தான் ரோஜாப்பூவும் சென்று விழுந்தது. துவண்டு சாய்ந்து கிடந்த ஒரு தாமரைப்பூ சொன்னது: “இங்கிருக்கிற விளக்குகளோட வெப்பத்தை எங்களால் தாங்க முடியலை. ஊதுபத்திப் புகையால் மூச்சுமுட்டுது. இப்படித்தான் நாங்கள் இந்த இருட்டறையில் காலையிலேர்ந்து கிடக்கிறோம்!” அங்கு கிடந்த மந்தாரப்பூவும் துளசிப்பூவும் தெச்சிப்பூவும் சோர்ந்த குரலில், “ஆமாம், ஆமாம்!” என்றன.

‘இவர்களைவிட நான் அதிர்ஷ்டசாலிதான். இவ்வளவு நேரமாவது என்னால வாழ முடிஞ்சதே!’ என்று ரோஜாப்பூ, தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டது.

சற்று நேரத்துக்குப் பிறகு அந்த இளம் பெண் அங்கே வந்தாள். ரோஜாப்பூவைத் தேர்ந்தெடுத்துத் தன் சடையில் சூடிக்கொண்டாள். எண்ணெய் பளபளப்புடைய ரோமங்கள் தன் முகத்தில் பட்டதும் ரோஜாவுக்குக் குமட்டலெடுத்தது. “என்ன செய்வது? சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்” என்று அது புலம்பியது.

இளம் பெண் அழகாக உடையணிந்து வாசலுக்கு வந்தாள். அந்த நேரத்தில் தன் கூட்டுக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு வண்டு, ரோஜாப்பூவைப் பார்த்துவிட்டது.

“நீ இதுவரை எங்கிருந்தாய்? நான் உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?” ரோஜாப்பூவை மென்மையாக முகர்ந்துகொண்டு வண்டு கேட்டது.

ரோஜாப்பூ பதில் சொல்லாமல் அழுதது.

“ச்சூ! வண்டு!” இளம் பெண் தன் சடையிலிருந்து வண்டைத் துரத்தினாள்.

இளம் பெண்ணின் சடையில் அமர்ந்தபடியே ரோஜாப்பூ சவாரி செய்தது. அது பல காட்சிகளைப் பார்த்தது. பெரிய பெரிய வண்டிகள் ஓடும், மக்கள் கூட்டம் நிறைந்த தெருக்கள் வழியே இளம் பெண் போனாள். ரோஜாப்பூ வியப்பால் கண்கள் மலரச் சுற்றிலும் பார்த்தது.

“வேதனை நிறைந்ததுதான் என்றாலும் இந்த உலகம் எவ்வளவு அற்புதமானது!” என்று ரோஜாப்பூ சிந்தித்தது.

இளம் பெண், ஒரு பெரிய பேருந்தின் இடுக்கின் உள்ளே நுழைந்தாள். அப்போது திடீரென்று ரோஜாப்பூ சடையிலிருந்து கீழே விழுந்துவிட்டது! அது அதிர்ச்சியால் அப்படியே உறைந்துவிட்டது. அந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பே, குண்டான கால்களோ அதை மிதித்து நசுக்கிவிட்டன.

அஸ்தமித்துக்கொண்டிருந்த சூரியன் ஒரு நொடி நின்று, அந்த நசுங்கிய பூவைப் பார்த்து முணுமுணுத்தது: “பாவம் இந்த ரோஜாப்பூ!”

அவசரமாகத் தன் கூட்டுக்குப் பறந்து சென்றுகொண்டிருந்த பச்சைக் கிளியும் சொன்னது: “பாவம்!”

மலையாளத்திலிருந்து தமிழில்: யூமா வாசுகி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x