Last Updated : 26 Aug, 2015 12:00 PM

 

Published : 26 Aug 2015 12:00 PM
Last Updated : 26 Aug 2015 12:00 PM

சித்திரக் கதை: டாம் மச்சான்... டூம் மச்சான்...

பஞ்சுப் பொதி மாதிரி அழகாய் இருந்தது அந்தக் குட்டி முயல். பளிச்சென்ற வெள்ளை நிறம். புசுபுசுன்னு குண்டாக இருந்தது. ஒரு இடத்தில் சும்மா இருக்காது. தாவித் தாவி ஓடும். சிறுசிறு புற்களை மேயும். பழங்களைச் சாப்பிடும். அந்தக் குட்டி முயல் இருக்கும் வளை எங்கேயிருக்கிறது என்று யாருக்குமே தெரியாது.

அந்தப் பகுதியில் குட்டிகுட்டி மலைகள் இருந்தன. அங்கே பெரிய மலைப்பாம்பு ஒன்றும் இருந்தது. நல்ல நீளமான பாம்பு. ஒரு ஆளு உயரமிருக்கும். உடம்பெல்லாம் சின்னச் சின்ன கட்டங்கள் இருக்கும். எப்போதும் கண்களை மூடி யோசிப்பது போலிருக்கும். எந்தச் சலனமும் காட்டாமல் மெதுவாய் ஊர்ந்து சென்று, இரையைப் பிடித்துவிடும்.

ஒரு நாள்...

மலைமேல் படுத்திருந்த பாம்பின் பார்வையில் பட்டது அந்தக் குட்டி முயல். ‘ஆஹா!, என்ன கொழுகொழுன்னு இருக்கு. நல்ல வேட்டைதான் நமக்கு!’என்று மனசுக்குள் சந்தோசமாய் நினைத்துக் கொண்டது மலைப்பாம்பு.

தினமும் மலைமீது படுத்தபடி, குட்டி முயலையே நோட்டமிட்டது மலைப்பாம்பு. குட்டி முயலோ அங்குமிங்குமாய் தாவித்தாவி ஓடியது. ஓரிடத்திலும் சோர்ந்து நிற்கவில்லை. பொழுது சாய்ந்ததும் எங்கே போகிறது என்றே தெரியாமல் ஓடி மறைந்தது.

மலைப்பாம்புக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. எப்படியாவது இந்த முயலைப் பிடித்துச் சாப்பிட வேண்டுமே!

மலையை விட்டுக் கீழிறங்கி வந்தது பாம்பு. குட்டி முயல் போகிற இடமாகப் பார்த்து அப்படியே பதுங்கிக் கிடந்தது.

தன்னைப் பிடித்துச் சாப்பிட ஒரு மலைப்பாம்பு இந்தப் பக்கமாக அலைந்துகொண்டிருக்கிறது என்கிற விஷயம் எப்படியோ குட்டி முயலுக்குத் தெரிந்துவிட்டது.

குட்டி முயல் என்றாலும் சுட்டி முயல் அல்லவா! நாலுகால் பாய்ச்சலில் ஒரே தாவில் தாண்டித் தாண்டி ஓடியது.

‘நல்லா ஓடு. உன்னை எப்படிப் பிடிக்கிறேன் பாரு!’ என்று காத்துக் கிடந்தது மலைப்பாம்பு.

இன்னொரு நாள்...

அங்கிருந்த பெரிய ஆலமரத்து விழுதினைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது குட்டி முயல். இதுதான் சரியான சமயமென்று நினைத்தது மலைப்பாம்பு.

உடனே, ஆலமரத்தின் கிளையில் வாலை மட்டும் சுருட்டிக்கொண்டு, தலையை மட்டும் அப்படியே தொங்கவிட்டபடி விழுதுபோல் தொங்கியது மலைப்பாம்பு.

ஆல விழுதினைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த குட்டி முயலுக்குச் சந்தேகம் வந்தது. ‘இதென்ன ஒரு ஆல விழுது மட்டும் கட்டம்கட்டமா இருக்கே’.

குட்டி முயல் நினைத்த அடுத்த நொடியே, “டாம் மச்சான், டூம் மச்சான்… அழகிய விழுதே, அப்படியே மேலே போ, நானும் உன்னோடு விளையாட மேலே வர்றேன்!” என்றது.

நாம் மேலே போனால், குட்டி முயலும் மேலே வரும். அதை அப்படியே ஒரே கவ்வாகக் கவ்வி கொள்ளலாம் என்ற ஆசையில் அப்படியே மேலேறிப்போனது மலைப்பாம்பு.

‘ஆஹா… இது விழுதல்ல, மலைப்பாம்பு’ என்று குட்டி முயலுக்குத் தெரிந்துவிட்டது. ‘விட்டேன் பார் ஓட்டம்!’ என்றபடி மின்னல் வேகத்தில் தாவி ஓடிவிட்டது குட்டி முயல்.

ஏமாந்துபோன மலைப்பாம்பு ராத்திரியெல்லாம் தூங்காமல் குட்டி முயலைத் தேடியலைந்தது. காடு மேடெல்லாம் சுற்றி அலைந்ததில் குட்டி முயலின் வளையைக் கண்டிபிடித்துவிட்டது மலைப்பாம்பு.

முயல் இல்லாத நேரமாய்ப் பார்த்து, முயலின் வளைக்குள்போய் பதுங்கிக்கொண்டது மலைப்பாம்பு. வெளியே போயிருந்த குட்டி முயல் தன் வளைக்குத் திரும்பியது. வரும் வழியில் பாம்பு போன சுவடு தெரிந்தது. அந்தச் சுவடு தன் வளைக்குள் சென்றிருப்பதைப் பார்த்தது.

‘ஓகோ…என் இடத்திற்கே நீ வந்துட்டீயா…?” என்று தனக்குள் எண்ணிக்கொண்ட குட்டி முயல் சொன்னது; “நான் அழைக்காமலே ஊரிலிருந்து என் வீட்டிற்கு விருந்துக்கு வந்திருக்கும் டாம் மச்சானே, டூம் மச்சானே. உன்னோட வாலை மட்டும் நீட்டு, நான் உள்ளே வருகிறேன்”.

உடனே, மலைப்பாம்பு யோசித்தது. ‘தான் வந்திருப்பதை யாரோ உறவினர் வந்திருப்பதாகக் குட்டி முயல் நினைக்கிறது. இன்னிக்கு மாட்டுச்சு, நமக்கு நல்ல விருந்துதான்!’ என்றெண்ணி, தன் வாலை மட்டும் வெளியே நீட்டியது.

‘அய்யய்யோ, நம்ம உயிருக்கே உலை வந்திருச்சே!’ என்று பயந்தாலும், வெளியே காட்டிக்கொள்ளாத குட்டி முயல், “டாம் மச்சான், டூம் மச்சானுக்கு முதலில் எண்ணெய் தேய்த்து விடுகிறேன். பிறகு விருந்து கொடுக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, மலைப்பாம்பின் வாலில் எண்ணெயை ஊற்றியது.

பிறகு, ஒரு தீக்குச்சியை எடுத்துப் பாம்பின் வாலில் நெருப்பைப் பற்ற வைத்தது.

“டாம் மச்சான், டூம் மச்சானுக்கு இன்னிக்கு நல்ல விருந்துதான்…!” என்று சொல்லிக்கொண்டே ஓட்டமெடுத்தது குட்டி முயல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x