Last Updated : 11 Jun, 2014 12:57 PM

 

Published : 11 Jun 2014 12:57 PM
Last Updated : 11 Jun 2014 12:57 PM

சித்திரக் கதை: சூரியனை சிறை பிடியுங்கள்

மண்டியா தேசத்தை ஒரு ராஜா ஆண்டு வந்தார். அவரிடம் ஒரு மந்திரி வேலை பார்த்தார். ராஜா என்றால் சும்மாவா? ரத கஜ துரபதிகளுடன் எல்லா ராஜாக்களையும் போல அரண்மனை அரச சபையில் இருந்துகொண்டே,

“மந்திரியாரே... நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறதா?” என்று கேட்பார். உடனே மந்திரியும், “அப்படியே மன்னா...” என்று கூவுவார்.

ஆனால் இருவருமே அரண்மனையை விட்டு வெளியே போனதில்லை. வெளியே வெயிலடிக்கிறதா, மழை பெய்கிறதா என்றுகூடத் தெரியாது. ஏனெனில் ராஜா ஏற்கெனவே ஒரு உத்தரவு போட்டிருந்தார். மந்திரி எப்போதும் அவரைத் தனியே விட்டுவிட்டுப் போகக் கூடாது. ராஜா தூங்கப் போகும்போது மட்டும்தான் அவர் போகலாம். மறுநாள் காலையில் ராஜா எழுந்திரிக்கும் போதே, அவர் கண் முன்னால் மந்திரி இருக்க வேண்டும்.

அதனால் அவர்கள் இருவருக்குமே அரண்மனைக்கு வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாது. சூரியன், சந்திரன், தெரியாது. நட்சத்திரங்கள் தெரியாது. புல், பூண்டு தெரியாது. செடி, கொடி தெரியாது. பறவைகள், விலங்குகள் தெரியாது. அரண்மனையில் எழுந்து குளித்து, உடை உடுத்தி சாப்பிட்டு, பின்னர் குளித்து, உடை உடுத்தி, சாப்பிட்டு, பின்னரும் குளித்து, உடை உடுத்தி சாப்பிட்டு இப்படியே இரவு வரை பொழுது போகும். இதில் சலிப்பு ஏற்படும்போது ஆட்டம் பாட்டம் பார்ப்பார்கள். சில சமயம் பல்லாங்குழி, தாயம் விளையாடுவார்கள்.

திடீரென்று ஒரு நாள் ராஜாவின் தோலின் நிறம் பாலைப் போல வெளுத்துப் போயிருந்தது. கண்ணாடியில் அவரைப் பார்த்து அவரே பயந்து போனார். உடனே அரண்மனை வைத்தியர்களும் ஜோசியர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பார்த்த உடனேயே தெரிந்து விட்டது. வைட்டமின் டி சத்துக் குறைபாட்டினால் வந்துள்ள தோல் நோய். அதற்கு ஒரே ஒரு மருந்து தான் இருக்கிறது. சூரிய ஒளியில் குளித்தால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் இதை ராஜாவிடம் சொன்னால் தலை போய்விடும். எனவே எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில்,

“மன்னா, இந்த நோய் கோடியில் ஒருவருக்கு வரக்கூடிய நோய். எங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுங்கள்” என்றார்கள். அதைக்கேட்ட உடனே ராஜாவுக்குப் பெருமை தாங்க முடியவில்லை. கோடியில் ஒருவரல்லவா அவர்.

“ம்ம் சரி..” என்று உறுமினார்.

ஒரு வாரம் கழித்து வந்த வைத்தியர்கள் தேங்காய் எண்ணெய்க்கு நிறமேற்றி கொண்டு வந்து ராஜா முன்னால் வைத்தனர்.

“அரசரே, தினமும் காலையிலும் மாலையிலும் இந்த எண்ணெயை உடலில் தேய்த்துக் கொண்டு மூன்று சுற்றுகள் அரண்மனையைச் சுற்றிவர வேண்டும். இது அரண்மனை தோஷம். எனவே அரண்மனையைச் சுற்றினால்தான் மருந்து வேலை செய்யும்”என்றனர்.

“சரி அப்படியே ஆகட்டும்” என்றார் ராஜா.

மறுநாள் காலை ராஜாவும் மந்திரியும் எழுந்து உடல் முழுவதும் எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அப்போதுதான் சூரியனும் அடிவானிலிருந்து வெளியே வந்தான். சூரிய ஒளி அன்றைக்குத் தான் ராஜாவின் உடலிலும் மந்திரியின் உடலிலும் பட்டது. சூரியனின் வெளிச்சத்தையும் அதன் சூட்டையும் ராஜாவால் பொறுக்க முடியவில்லை. உடனே அவர்,

“மந்திரியாரே, விளக்கை அங்கே மாட்டியது யார்? உடனே அதை அணைக்கச் சொல்லும்” என்று உத்தரவிட்டார். மந்திரியும் காவலாட்களை அழைத்து, “யாரங்கே. உடனே அந்த விளக்கை அணையுங்கள். ராஜாவுக்குச் சூடு தாங்க முடியவில்லை” என்று கத்தினார். உடனே காவலாட்கள் சூரியனை அணைத்துவிடுவதற்காக துணி, போர்வை, பஞ்சு, தண்ணீர் என்று சகல பொருட்களுடன் போனார்கள். பகல் முழுவதும் நடந்தனர். சூரியனும் தூரமாய் போய்க் கொண்டிருந்தான். மாலையானதும் மறையத் தொடங்கினான். தங்களைப் பார்த்து பயந்துதான் சூரிய விளக்கை அணைத்து விட்டார்கள் என்று மகிழ்ச்சியுடன் கத்திக் கொண்டு வந்து ராஜாவிடம் சொன்னார்கள். ராஜாவுக்கும் மகிழ்ச்சி. எல்லோருக்கும் பரிசு கொடுக்கச் சொன்னார். ஆனால் மறுநாள் காலையில் மறுபடியும் சூரியன் வந்து விட்டான். மறுபடியும் விளக்கை அணைக்க எல்லோரும் ஓடினர். மறுபடியும் மாலையானதும் சூரியன் மறைந்துவிட வெறுங்கையுடன் திரும்பி வந்தனர்.

ராஜாவும், மந்திரியும் நாடெங்கும் முரசு முழங்கி செய்தி சொல்லச் சொன்னார்கள்.

“இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் காலையில் தோன்றி மாலையில் தலைமறைவாகிவிடும் சூரியனைத் தேடப்படும் குற்றவாளியாக மண்டியா தேசம் அறிவிக்கிறது. சூரியனைப் பிடித்துக்கொண்டு வருபவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்”

மக்கள் அனைவரும் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு சூரியனைப் பிடிக்க காலையில் புறப்பட்டுப் போவதும் மாலையில் திரும்புவதுமாக இருந்தார்கள். இப்போது ராஜாவுக்கோ, மந்திரிக்கோ, மண்டியா தேச மக்களுக்கோ எந்தத் தோல் நோயும் இல்லை. எல்லாம் குணமாகிவிட்டது. ஆனால் ராஜாவும், மந்திரியும் சர்வதேச நாடுகளுக்கும் சூரியனைப் பிடித்துத் தரச் சொல்லி ஓலை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் நாட்டுக்கும் ஓலை வந்திருக்கிறதா? கேட்டுப்பாருங்கள்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x