Published : 15 Jun 2016 11:46 AM
Last Updated : 15 Jun 2016 11:46 AM

சித்திரக் கதை: சிந்துவும் வண்ணக்குருவியும்!

‘ட்விட்… ட்விட்… ட்விட்..’ மிக மெலிதாக வந்த சத்தத்தில் விழித்துக்கொண்டாள் சிந்து. இதமான அந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறதெனப் படுத்துக்கொண்டே அறையை நோட்டமிட்டாள். மேஜையில் கலர்கலராக ஏதோ அசைவது போலத் தெரிந்தது. சட்டென்று எழுந்துபார்த்தாள்.

‘அய்… குருவி! அழகாக சிட்டு போல இருக்கே! கழுத்திலும் சிறகுகளிலும் பச்சை, வெள்ளை, மஞ்சள் நிறங்கள் மாறிமாறி படர்ந்த அழகான குருவி! தியா வீட்டில்கூட இதே மாதிரிச் குருவிகளைத்தான் கூண்டில் அடைத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு ஏதோ பெயர் சொன்னார்களே’

சிந்து யோசித்தபடியே எழுந்து மெதுவாக அதனருகில் சென்றாள். கைகளைக் குருவியின் பின்பக்கமாகக் கொண்டுசென்று ‘லபக்’கெனப் பிடித்துக்கொண்டாள். குருவி பறக்க முடியாமல் தவித்தது. அதை எடுத்துக்கொண்டு, “அம்மா… அம்மா!” கூப்பிட்டுக் கொண்டே சமையலறைக்குப் போனாள்.

தேநீர் தயாரித்துக்கொண்டிருந்த அம்மா, “எழுந்துட்டியா? டீயைப் போட்டுட்டு உன்னை எழுப்பிவிடலாம்னு நினைச்சேன்” எனக் கூறிக்கொண்டே, சிந்துவின் கையில் சிட்டுக் குருவியைப் பார்த்து, “ஏய்! இத எங்கேயிருந்து பிடிச்சுட்டு வந்தே?” எனக் கேட்டார்.

“ம்மா… நான் தூங்கிட்டு இருந்தேனா… அப்ப ட்விட் ட்விட்னு சத்தம் கேட்டு முழிச்சுட்டேன். டேபிள் மேல இந்தக் குருவி நின்னுக்கிட்டு இருந்துச்சும்மா. நைசா போய்ப் பிடிச்சுட்டேன்!” எனச் சந்தோஷத்தில் குதித்தாள்.

“பார்த்தும்மா… குருவியை நசுக்கிடப் போற. மெதுவா பிடிச்சுக்கோ! ஜன்னல் வழியா பறந்து உள்ளே வந்துருக்கும். பசி மயக்கத்துல கிறங்கிப் போய் நின்னுருக்கும்!”

“அப்ப, இதுக்கும் சேர்த்து டீ போடும்மா!”

“செல்லம், இதுக்கு டீயெல்லாம் பிடிக்காது. தானியங்கள்தான் பிடிக்கும்”.

“அப்ப, அரிசிய தட்டுல போட்டுக்கொடுங்க. சாப்பிடும்போது விக்கல் வந்தா குடிக்கத் தண்ணியும் டம்ளர்ல கொடுங்கம்மா”

“அதுக்கு முன்னால குருவியை இந்த டேபிள்ல விடு”

“போங்கம்மா… பறந்துடும்!” குருவியுடன் கையைப் பின்பக்கமாக மறைத்துக்கொண்டாள் சிந்து.

“போனா போகட்டும்”

“ம்... இதை வளர்க்கப்போறேன். அப்பாகிட்ட கூண்டு வாங்கித்தர சொல்லுங்கம்மா”

“நீ சொன்னா கேட்க மாட்டே. பறவைகளைக் கூண்டுல போட்டு அடைக்கக் கூடாதும்மா. அதுவும் இது தனியா இருக்கு. ஜோடிகூட இல்லை”.

“அப்போ, ஜோடியா இருந்தா கூண்டுல அடைச்சுவைக்கலாமாம்மா?”

“கூடாதும்மா. வானத்துல ஜோடியா பறக்கத்தான் அதுங்களுக்குப் பிடிக்கும்”

“தியா வீட்டுல மட்டும் கூண்டுல நிறையக் குருவிங்களை அடைச்சுவச்சு வளர்க்கறாங்களே”.

“காலையிலேயே அம்மாவுக்கும் மகளுக்கும் சண்டை தொடங்கிடுச்சா?” உடனே அப்பாவிடம் நடந்ததை முதலிலிருந்து சொல்லி, “அப்பா… சின்னதாக் கூண்டு வாங்கிக்கொடுங்கப்பா!” கெஞ்சினாள் சிந்து.

அப்பாவின் மனம் இளகியது. “வாங்கிக் கொடுக்கறேண்டா செல்லம்!” அப்பாவின் பதிலைக் கேட்டு முறைத்தபடி வேலையில் மூழ்கினார் அம்மா.

அன்றைய தினமே கூண்டு வாங்கிக்கொடுத்தார் அப்பா. அதில் அந்த வண்ணக் குருவியை அடைத்துத் தினமும் உணவும் தண்ணீரும் கொடுத்தாள் சிந்து. பிரின்ஸி எனப் பெயரும் வைத்துவிட்டாள்.

ஒரு வாரம் கழிந்தது.

‘மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து அடை மழை இருக்கிறது’ என வானிலை அறிக்கை எச்சரிக்கை செய்தது. சொன்னது போலவே அடைமழை பெய்தது. பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.

சிந்துவால் பள்ளிக்குப் போக முடியவில்லை. வெளியே சென்று விளையாடவும் முடியவில்லை. மின்சாரம் இல்லாததால் டி.வி.யும் பார்க்க முடியவில்லை. கம்ப்யூட்டரில் வீடியோ கேம் ஆட முடியவில்லை. சிந்துவுக்குக் கட்டிப்போட்டது போல் ஆகி விட்டது.

“போர் அடிக்குதும்மா! எவ்வளவு நேரத்துக்குத்தான் இந்த ரூமுக்குள்ளேயே கிடக்கறது!” எனச் சலித்துக் கொண்டாள்.

“ஒரு நாளுக்கே சலிச்சுக்கிறியே… இங்கே இன்னொருத்தர் ஒரு வாரமா அடைஞ்சுகிடக்கறாரு. அவரப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா?”

“யாரும்மா அது?”

“வேற யாரு… உன்னோட செல்லக் குருவிதான்!”

அந்தக் குருவி எங்கும் போக முடியாமல் தன்னைப் போல் போரடித்துச் சோகமாக உட்கார்ந்திருப்பதாகத் தோன்றியது சிந்துவுக்கு.

“உனக்குத் துணையா பக்கத்துல நாங்க இருக்கோம். பாவம் அந்தக் குருவி, தனியா அனாதையா நிக்குது. உன்னை மாதிரிதானே அந்தக் குருவியும் தவிக்கும்… வெளியே போய் விளையாடணும்னு நீ நினைக்கிற மாதிரிதானே அதுவும் நினைக்கும்!” அம்மா மிக இயல்பாகக் குருவியின் சூழ்நிலையை விளக்கினார்.

சிந்து பதில் பேசாமல் மவுனமாக இருந்தாள். தன் நிலையோடு குருவியின் நிலையை ஒப்பிட்டுப்பார்த்தாள். அவளுக்குக் குருவியின் மேல் இரக்கம் வந்தது.

நேராகக் கூண்டருகில் சென்று, “சாரி பிரின்ஸி! நீ இந்தக் கூண்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்க வேண்டாம். நீ சுதந்திரமா பறந்து போ!” என்றபடி கூண்டை எடுத்துக்கொண்டு ஜன்னலருகில் போனாள்.

“இப்போ வேண்டாம். மழை விட்டதுக்கப்புறம் திறந்து விடலாம்” எனத் தடுத்து நிறுத்தினார் அம்மா.

மறுநாள் மழை ஓய்ந்தது. சிந்து ஜன்னலருகில் கூண்டைக் கொண்டுவந்து திறந்து விட்டாள். குருவி தவ்வித் தவ்வி வெளியே வந்தது. சிறகுகளைப் படபடவென அடித்து ஒரு சுற்று சுற்றியது. சுதந்திரமாக, ஜிவ்வெனப் பறந்து சென்று வானில் மறைந்தது. இதைப் பார்த்த அம்மா மகிழ்ச்சியுடன் சிந்துவை முத்தமிட்டார்.

மறுநாள் வழக்கம் போல் படுக்கையில் படுத்திருந்த சிந்து, “ட்விட்… ட்விட்…” எனச் சத்தம் கேட்டு விருட்டென எழுந்தாள். டேபிளில் அதே வண்ணக் குருவி, இன்னொரு குருவியுடன் வந்திருந்தது. இரண்டும் அங்குமிங்கும் அலைந்தன.

அப்போது அங்கே வந்த சிந்துவின் அம்மா, “பார்த்தியா செல்லம்… உன்னைப் பார்த்துட்டுப் போக அந்தக் குருவி ஜோடியா வந்திருக்கு. வந்த விருந்தாளிகளுக்குச் சாப்பாடு கொடுக்கணுமில்லே செல்லம்?” என்றார்.

“ஆமாம்மா!” சிந்து தானியங்களும் தண்ணீரும் கொண்டு வந்து வைத்தாள். இரண்டு குருவிகளும் சந்தோஷமாகச் சாப்பிட்டுத் தண்ணீர் குடித்துவிட்டுச் சிட்டாகப் பறந்தன! சிந்துவுக்கு ஒரே மகிழ்ச்சி.

தினமும் அந்த ஜோடிக் குருவிகள் சிந்துவைப் பார்த்து, சாப்பிட்டு நலம் விசாரித்துச் செல்கின்றன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x