Last Updated : 08 Oct, 2014 02:34 PM

 

Published : 08 Oct 2014 02:34 PM
Last Updated : 08 Oct 2014 02:34 PM

சித்திரக் கதை: கிச்சுகிச்சு தண்டனை

ஒரு காட்டில் வால்தனம் செய்து தண்டனை பெற்ற குட்டி விலங்குகள், சிரித்துக்கொண்டே அதை அனுபவித்தன. அது எப்படி முடியும்?

‘ஹி... ஹி... விட்டுடுப்பா... விட்டுடுப்பா...’ என்று கெஞ்சிக்கொண்டே அப்பா சிங்கத்திடம் பிடிபடாமல் விலகி ஓடி, வேடிக்கை காட்டியது குட்டிச் சிங்கம்.

‘இன்னிக்கு உன்னை விட மாட்டேன்... பிடிச்சு பனிஷ் பண்ணினால்தான் நீ சரிப் படுவே...’ குட்டிச் சிங்கத்தைப் பிடிப்பதுபோல் நடித்துக் கொண்டிருந்தது அப்பா சிங்கம்.

‘ஹா... ஹா... வேணாம்பா... இனிமே தப்பு பண்ண மாட்டேன்...’ - சுற்றிச்சுற்றி ஓடி வந்தது குட்டி. அப்பா சிங்கமோ விடுவதாயில்லை. தன் முன்னங்கால்களால் குட்டியை எட்டிப் பிடித்தது. தன் தாடியை வைத்துக் குட்டிச் சிங்கத்தின் முகத்தில் தேய்த்தது.

‘ஹா... ஹா... ஹா... ஹோ.... ஹோ... கூசுதே... விட்டுடுப்பா... இனிமே அம்மாவுக்குத் தெரியாமல் குளத்துக்குப் போகமாட்டேன்... ஹா... ஹா...’, அப்பா சிங்கம் தன் தாடியால் கிச்சுகிச்சு மூட்டுவதைத் தாங்க முடிவில்லை குட்டியால். கூச்சத்தில் நெளிந்துகொண்டே வயிறு வலிக்கச் சிரித்தது.

‘எத்தனை முறை சொல்லியிருக்கேன்? பெரியவங்க துணை இல்லாமல் குளத்துக்குப் போகக்கூடாதுன்னு. குளத்தில் இருக்கும் முதலைகிட்டே மாட்டிக்கிட்டால்...? உன்னை அது தின்னுடுமே... அது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எவ்வளவு கஷ்டம்... உன்னைப் பிரிஞ்சு எங்களால வாழ முடியுமா? இனிமே குளத்துக்குப் போவியா..? போவியா..?’ – அப்பா சிங்கம் மறுபடியும் தன் தாடியால் கிச்சுகிச்சு மூட்டியது.

‘அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இது நல்ல விளையாட்டுதான்...’ – மரத்தடியில் உட்கார்ந்திருந்த அம்மா சிங்கம் புன்னகைத்துக் கொண்டது.

குட்டிச் சிங்கம் சரியான அறுந்த வால். அப்பா, அம்மா பேச்சைக் கேட்பதில்லை. அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருக்கும். கரடிக் குட்டியுடன் சேர்ந்துகொண்டு காட்டைச் சுற்றும். ஒருமுறை முள்ளம்பன்றியிடம் வால்தனம் செய்து உடம்பெல்லாம் கீறலுடன் வீட்டுக்கு வந்தது. வால்தனம் செய்யும் போதெல்லாம் அப்பா சிங்கம் பிரம்பை எடுத்து விளாசும். அப்போதெல்லாம் ‘அப்பா... விட்டுடுப்பா... தெரியாமல் செஞ்சுட்டேன்...’ என்று குட்டி கெஞ்சும்.

வாங்கிய பிரம்படியில் குட்டிக்கு உடம்பெல்லாம் வீங்கியிருக்கும். இரவெல்லாம் குட்டி வலியால் அழும். அப்போதெல்லாம் அப்பா சிங்கத்துக்குப் பாவமாய் இருக்கும். எல்லாம் ஒரு நாள்தான். மறுநாள் சிறுத்தையுடன் சேர்ந்து, குட்டி மரத்தில் ஏற முயலும். கீழே விழுந்து அடிபட்டு, அழுதுகொண்டே வந்து நிற்கும். மறுபடியும் அடி விழும்.

ஒருநாள் இரவு. குட்டி அடிவாங்கிக் கொண்டு வலியில் அழுதது. அதற்கு வேடிக்கை காட்டத் தன் தாடியை வைத்து, அதன் முகத்தில் கிச்சுகிச்சு மூட்டியது அப்பா.

உடனே அழுகையை மறந்து, கூச்சத்தில் நெளிந்துகொண்டே குட்டி கெஞ்சியது ‘ஹா... ஹா.... அப்பா விட்டுடு... கூசுது... ஹி... ஹி...’ அப்பா விடவில்லை. இன்னும் தாடியை வைத்து, தேய்த்துவிடத் தொடங்கியது.

‘ஹா.... ஹா... ஹா...’ என்று சிரித்துக்கொண்டே எழுந்து ஓடியது குட்டி. அப்பா விடவில்லை. துரத்திச் சென்று கிச்சுகிச்சு செய்தது.

‘இனித் தப்பு செய்வியா? இனி பேட் ஃபிரெண்ட்ஸ்கூடச் சேருவியா?’

‘ஹா... ஹா.... சேர மாட்டேன்...’

‘இனி அப்பா, அம்மா சொல்றதைக் கேட்பியா?’

‘கேட்கிறேன்... கேட்கிறேன்...’

அந்த நேரத்தில்தான் அப்பாவுக்கு, அந்த யோசனை தோன்றியது. அடித்தால் வலிக்கும். இரவில் குட்டி வலியில் அழும். இனி அடிக்காமல் கிச்சுகிச்சு பண்ணிதான் இந்த வால் பயலைத் தண்டிக்கணும். அன்றிலிருந்து குட்டி செய்யும் வால்தனங்களுக்கு அடி விழுவதில்லை. கிச்சுகிச்சுதான் தண்டனை. அடிகளுக்குக்கூட அஞ்சாத குட்டி, கிச்சுகிச்சுவுக்கு பயந்தது. அன்றிலிருந்து அதன் வால்தனம் குறையத் தொடங்கியது. இது நடந்து சில வாரங்கள் ஓடியிருக்கும்.

ஒருநாள் சிறுத்தை மரம் ஏறுவதற்குக் குட்டிச் சிங்கத்தைக் கூப்பிட்டது. ‘ஐயோ... நான் மாட்டேன்பா... அப்பாவுக்குத் தெரிந்தால் கிச்சுகிச்சு பண்ணு வாரு...’ என்று மறுத்தது குட்டி.

‘கிச்சுகிச்சா... அப்படின்னா...?’ சிறுத்தைக் குட்டி கேட்டது.

‘என் அப்பா தன் தாடியை என் மூஞ்சியிலே வெச்சுத் தேய்ப்பார். அடிகூடப் பரவாயில்லே... கிச்சுகிச்சுதான் தாங்க முடியலே...’ என்றது. சிறுத்தை நேராகத் தன் அப்பாவிடம் போனது.

‘அப்பா... இனிமே நான் தப்பு செய்தால் அடிக்கக் கூடாது. ஒன்லி கிச்சுகிச்சு பனிஷ்மெண்ட்தான். ஓகே..?’ என்றது. அப்பா சிறுத்தை விவரம் புரியாமல் விழித்தது. ‘என்னடா கண்ணா விஷயம்?’ என்று விசாரித்தது. குட்டிச் சிங்கத்தைப் பற்றி சிறுத்தைக்குட்டி சொன்னவுடன், ‘கண்ணா... சிங்கத்துக்குத் தாடி இருக்கு. கிச்சுகிச்சு பண்ணுது. எனக்குத் தாடி இல்லையே ராசா... நான் என்ன பண்றது?’

‘தாடி இல்லேன்னா ஒட்டுத் தாடியாவது வெச்சுக்கோ... ஐ வாண்ட் கிச்சுகிச்சு...’ என்று அடம்பிடித்தது. வேறு வழியில்லாமல், தேங்காய் நாரை வைத்துப் பொய்யாய் ஒரு தாடி தயாரித்துக்கொண்டது அப்பா சிறுத்தை. அன்றிலிருந்து, சிறுத்தை ஏதாவது தவறு செய்தால், அப்பா சிறுத்தை குட்டிச் சிறுத்தைக்குப் பொய் தாடியால் கிச்சுகிச்சு மூட்டும்.

குட்டிச் சிறுத்தை கூச்சம் தாங்காமல் ‘கெக்கெக்கெக்கே...’ என்று ‘இழுத்து இழுத்து’ சிரிக்கும். சமயங்களில் சிரிக்கும்போது, அதன் கண்களில் கண்ணீர்கூட வந்துவிடும்.

இந்தக் கிச்சுகிச்சு தண்டனை அப்பா சிறுத்தைக்கும் பிடித்திருந்தது. அடிகொடுத்தும் அடங்காத குட்டி, கிச்சுகிச்சு என்றவுடன் பயந்து அடங்குகிறதே என்று திருப்தியடைந்தது. கிச்சுகிச்சு தண்டனை பற்றி ஒருநாள் கரடியிடம் சிறுத்தை சொல்ல, கரடியும் ஒட்டுத் தாடி வைத்துக்கொண்டு கிச்சுகிச்சு தண்டனை முறையைப் பின்பற்ற, ‘அட இது நல்லா இருக்கே...’ என்று நினைத்த

மற்ற விலங்குகளும் பொய்த் தாடியை ஒட்டிக்கொண்டு, தங்கள் குட்டிகள் வால்தனம் செய்தால் தண்டிக்கத் தொடங்கின.

வால்தனம் செய்து அடிவாங்கி அழுத காட்டின் குட்டி விலங்குகள் எல்லாம், இப்போது, கிச்சுகிச்சு தண்டனையால் வாய்விட்டு, ‘ஹா... ஹா... ஹா...’ என்று சிரிக்கின்றன. முன்பைவிட தன் அப்பா, அம்மாவின் சொல் பேச்சைக் கேட்டுச் சமர்த்தாக நடந்துகொள்கின்றன. காட்டில் இப்போதெல்லாம் எந்தக் குட்டிகளும் அழுவதில்லை.

கொஞ்சம் இருங்கள். யாரோ அழுகிற சத்தம் கேட்கிறதே... அது யார்?

‘மத்த விலங்குகளுக்குக் கிச்சுகிச்சு தண்டனை சரிப்படும். நமக்குச் சரிப்படாதுன்னு சொன்னேனே கேட்டியா... இப்ப பாரு... நான் கிச்சுகிச்சு செய்ததால் என் உடம்புல இருக்கிற முள் குத்தி, உன் உடம்பெல்லாம் காயமாகிடுச்சே...’ தனது குட்டியின் உடம்பைத் தடவி விட்டபடியே சோகத்துடன் கூறிக் கொண்டிருந்தது முள்ளம்பன்றி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x