Last Updated : 10 Feb, 2016 11:50 AM

 

Published : 10 Feb 2016 11:50 AM
Last Updated : 10 Feb 2016 11:50 AM

சித்திரக்கதை: பறக்குது பார் பச்சோந்தி!

மாஞ்சோலை ஓர் அழகான கிராமம். அந்தக் கிராமத்தின் ஏரிக் கரையோரமாய் ஒரு முருங்கை மரம் இருந்தது. அந்த முருங்கை மரத்தில் பச்சோந்தி ஒன்று வசித்துவந்தது.

நிமிடத்திற்கு ஒருமுறை தனது உடம்பைப் பல வண்ணத்தில் அந்தப் பச்சோந்தி மாற்றிக்கொள்ளும்.

அந்தப் பக்கம் திரும்பினால் பச்சை வண்ணம். இந்தப் பக்கம் திரும்பினால் மஞ்சள் வண்ணம். வானத்தை நோக்கித் தலையை உயர்த்தினால் நீல வண்ணம். நின்ற இடத்திலேயே தலையை மேலும் கீழுமாய் ஆட்டினால், சிவப்பு வண்ணம் என்று பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

அந்தப் பச்சோந்திக்கு நீண்ட காலமாக ஆசை. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி மரத்திலும் தரையிலும் மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பது? தானும் வானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது.

நண்பர்கள் சிலரிடம் தன் ஆசையை அது சொன்னது.

“ம்ம்... ஆசையைப் பாரேன். இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படக் கூடாது...!” என்று கேலி பேசினார்களே தவிர, ஒருவர்கூட உருப்படியாக ஒரு வழியும் சொல்லவில்லை.

ஆனாலும், பச்சோந்திக்குப் பறக்கிற ஆசை மட்டும் இருந்துகொண்டே இருந்தது.

எதிரேயிருந்த ஆல மரத்தில் ஒரு வெண்புறா வசித்துவந்தது. ஆலமரத்தில் இருந்தபடியே முருங்கை மரத்திலிருக்கும் பச்சோந்தியை வெண்புறா பார்க்கும்.

’ச்சே... நம் உடம்பில் மட்டும் ஒரே வண்ணம்…! அடிக்கடி அழகான வண்ணங்களில் மாறும் பச்சோந்தியைப் போல் தன் உடம்பிலும் பல வண்ணங்கள் இருக்கணும்’ என்ற ஆசை வெண்புறாவிற்கு வந்தது.

ஒருநாள் -

பச்சோந்தி இருக்கும் முருங்கை மரத்திற்கு வந்தது வெண்புறா. தன் விருப்பத்தைப் பச்சோந்தியிடம் சொன்னது.

தன் நெடு நாள் ஆசை நிறைவேறுவதற்கு இதுதான் சரியான நேரமென்று நினைத்த பச்சோந்தி, “ நான் என் வண்ணங்களை உனக்குத் தருகிறேன். நீ எனக்கு என்ன தருவாய்...?” என்று கேட்டது.

“உனக்கு என்ன வேண்டுமென்று கேள். என்னால் முடிந்தால் நிச்சயம் தருவேன்…!” என்றது வெண்புறா.

“நான் என்ன பெருசா என்ன கேட்கப் போறேன். கீழே பூமியிலேயே ரொம்ப காலமா இருந்துட்டேன். இன்னும் கொஞ்ச காலத்துக்கு வானத்துல பறக்கணும்னு நினைக்கிறேன். உன்னோட சிறகுகளைத் தா. நான் என்னோட வண்ணத்தைத் தர்றேன்..!” என்றது பச்சோந்தி.

வெண்புறாவால் மறுக்க முடியவில்லை. சரியென்று ஒத்துக்கொண்டது.

உடனே, பச்சோந்தி தன் வண்ணங்களைக் கொடுத்துவிட்டு, வெண்புறாவின் சிறகுகளை வாங்கிக்கொண்டது.

வெண்புறா தன் உடம்பை அப்படியும் இப்படியுமாய் ஆட்டி, பல வண்ணங்களில் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டது.

பச்சோந்திக்கு ஏக கொண்டாட்டமாகி விட்டது.

“ஹையா… நானும் பறக்கப் போறேன்…!” என்று கூச்சலிட்டபடி, படபடவென வேகமாகச் சிறகுகளை அடித்து வானம் நோக்கி மேலே பறக்கத் தொடங்கியது. வேகமாகச் சிறகுகளை அடிக்க அடிக்க, மேலே மேலே போய்க் கொண்டேயிருந்தது. கீழே பூமியே ஒரு புள்ளியைப் போல் சிறிதாகத் தெரிந்தது.

பச்சோந்திக்குப் பூரிப்பு தாங்கவில்லை.

“நீயா பறக்கப்போறே..? உன்னால முடியாதுன்னு சொன்னீங்களே… இப்ப என்ன பண்ணப் போறீங்க..?” என்று சொன்னவர்களைப் பார்த்து கத்த வேண்டும் போலிருந்தது.

மனம்போன போக்கில் பறந்து போய்க் கொண்டேயிருந்தது. ரொம்ப நேரம் வானத்திலேயே பறந்ததில் பச்சோந்திக்கு உடல் வலித்தது. பசியும் எடுத்தது. தரையிறங்க வேண்டுமே, என்ன செய்வது...?

சிறகுகளை அசைத்தால் பறக்க முடியும் என்று மட்டுமே பச்சோந்திக்குத் தெரியும். என்ன செய்தால் தரையிறங்கலாம் என்று தெரியவில்லை. வெண்புறாவிடம் கேட்கவுமில்லை.

வெண்புறாவும் தன் உடம்பைத் திருப்பித் திருப்பிப் பல வண்ணத்தில் பார்த்து ஓய்ந்தது. அதற்கும் அலுப்புத் தட்டியது. முருங்கை மரத்திலிருந்தபடி பறக்க முயன்ற வெண்புறா ‘பொத்’தென்று தரையில் விழுந்தது.

‘அய்யய்யோ… இனி நம்மால பறக்கவே முடியாதா..?’ என்று நினைத்த வெண்புறா பெரும் வருத்தமடைந்தது.

தரையிறங்க முடியாமல் பறந்து கொண்டேயிருந்ததில் பச்சோந்திக்குத் தலைசுற்றுவது போலிருந்தது. மயக்கம் வேறு வந்தது.

‘அய்யய்யோ...இனி நாம பூமிக்கே போக முடியாதோ..! இப்படி வானத்திலேயே பறந்துக்கிட்டே திரிய வேண்டியதுதானோ..!’ என்று ரொம்பவும் கவலைப்பட்டது பச்சோந்தி.

நீண்ட தொலைவு பறந்ததில் சிறகுகளுக்கும் வலித்தன. சிறகடித்துப் பறக்க முடியாமல் சோர்ந்துபோய், அப்படியே சிறகுகளை தன்னோடு சேர்த்து ஒடுக்கிக்கொண்டது.

என்ன அதிசயம்…! ‘சொய்ய்ய்ங்ங்ங்...’ என்று அப்படியே பூமிக்கு வந்தது பச்சோந்தி.

தரையிறங்கியதும்தான் பச்சோந்திக்கு உயிரே வந்தது.

“எப்படியிருந்துச்சு வான் உலா..?” அப்படின்னு வெண்புறா கேட்டது.

“போதும்பா. இந்தா, உன்னோட சிறகை நீயே வச்சிக்க. என்னோட வண்ணத்தைக் கொடு...!”என்று வெண்புறாவிடமே சிறகுகளைத் திருப்பிக் கொடுத்தது பச்சோந்தி.

தனது வண்ணங்களை வாங்கிக்கொண்டு ஒய்யாரமாய் மரத்திலேறியது பச்சோந்தி.

வெண்புறாவும் சந்தோஷத்தோடு பறந்துபோனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x