Last Updated : 15 Mar, 2017 10:07 AM

 

Published : 15 Mar 2017 10:07 AM
Last Updated : 15 Mar 2017 10:07 AM

சித்திரக்கதை: திருடன் பிடித்த திருடன்

கடவூரில் திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். எப்பேர்ப்பட்டவர்களையும் தனது சாதுரியமான பேச்சால் மயக்கிவிடுவதில் கில்லாடி.

அந்த ஊரில் அழகிய குளம் ஒன்று இருந்தது. எப்போதும் நீர் நிரம்பி இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் அந்தக் குளத்துக்கு வெளிநாட்டு பறவைகள் குறிப்பிட்ட மாதங்களில் வந்து தங்கிப்போகும். விதவிதமான தோற்றங்களில், வண்ணவண்ணமாய் அவை குளத்தை நீந்தியும், தன் நீண்ட சிறகை விரித்துப் பறந்தும், தம் இனிய குரல்களால் பாடல்கள் பாடியும் அந்த ஊரை மகிழ்விக்கும்.

அந்த நாட்களில் அப்பறவைகளைப் பார்க்க, பக்கத்து ஊர்கள், வெளி மாவட்டங் களிலிருந்து மக்கள் கூட்டம்கூட்டமாக வந்துபோவார்கள். அதன் காரணமாக ஊர்மக்களும் பறவைகள் வந்து தங்கிப் போகும் நாட்களில், சத்தம்போட்டுக்கூட தொந்தரவு செய்ய மாட்டார்கள். குறிப்பாக எதற்காகவும் பட்டாசு வெடிக்க மாட்டார்கள்.

இப்படிப் பறவைகள் வரவால், ஊர் மக்கள் எந்நேரமும் நடமாடிக் கொண்டிருந்ததால் திருடனுக்குத் தொழில் பாதித்தது. ஊர் உறங்கினால்தானே திருட முடியும்? இந்தப் பறவைகளால்தானே நமக்கு இந்தத் தொல்லை? பறவைகளை விரட்ட ஏதாவது செய்ய வேண்டுமென யோசித்தான் திருடன்.

அப்படியிருக்கும் வேளையில் திடீரெனக் குளத்தில் நீர் குறைந்து கொண்டே வந்தது. அதைப் பார்த்து ஊர் மக்கள் புலம்பத் தொடங்கினர். இது ஏதும் சாமி குற்றமா, மந்திரவாதிகள் எவரேனும் செய்த சதியா? குழம்பினர்.

காரணம் என்னவென அறிய ஊர்ப் பஞ்சா யத்து கூடியது. பஞ்சாயத்து தலைவர் ஒரு சோம்பேறி. “இதுக்கெல்லாம் ஒரு கூட்டமா, சீக்கிரமா காரணத்தைச் சொல்லுங்க. வீட்டுக்குப் போய்த் தூங்கணும்” என்றார்.

ஆளுக்கொரு காரணம் சொன்னார்கள். ஊர்ப் பூசாரி, “கோயிலுக்குத் திருவிழா நடத்தணும்” என்றார்.

குருக்கள், “பெரிய யாகம் ஒண்ணு நடத்தினா, எல்லாம் சரியாயிடும்” என்றார்.

இன்னொருவர், “கரையைப் பலப்படுத்தணும். அப்படியே தூர்வாரிட்டா நல்லது. அந்த வேலையை நானே எடுத்துச் செய்யுறேன்” என்றார்.

இதுதான் சரியான சமயமென்று நினைத்த திருடன் எழுந்து, தலைவரை வணங்கிவிட்டுச் சொன்னான்.

“நம்ம ஊருக்கு வர்ற வெளிநாட்டு பறவைக் கூட்டம் இந்த வருஷம் ரொம்ப அதிகம். அதுங்கதான் குளத்து நீரைப் பூராவும் உறிஞ்சிக் குடிச்சிருச்சுங்க. அதுதான் குளம் பாதியாகிடுச்சு. அத உடனடியா விரட்டியாகணும். அதுதான் இதற்குத் தீர்வு” என்றான். யாரும் அவன் சொன்னதை நம்பவில்லை. ஆனால், ஊர்த் தலைவர் மட்டும் நம்பினார்.

“அவன் சொல்றதுதான்பா சரி. பறவைகளை எப்படியாவது விரட்டியாகணும்” என்றார் ஊர்த் தலைவர்.

“வெடி போட்டால், எல்லாம் பயந்து ஓடிப்போய்விடும்” என்று திருடன் சொன்னான்.

“எடுத்தேன் கவிழ்த்தேன்னு உடனே எதையும் செய்ய முடியாது தலைவரே. இன்னிக்கு நேத்திக்கி இல்லே, பல தலைமுறையா நம்ம ஊருக்கு விருந்தாளியா வர்ற பறவைகளை விரட்டுறது சரியாபடலே. ஒரு ரெண்டு நாள் பொறுங்க. பிறகு நாமக் கூடிப் பேசி முடிவெடுக்கலாம்” எனக் கூட்டத்தை முடித்தார்கள் ஊர் பெரியவர்கள்.

அந்த ஊர்பள்ளிக்கூட ஆசிரியருக்கும், ஊர் சலவைத் தொழிலாளிக்கும் மட்டும் லேசான சந்தேகம் வந்தது.

“இது யாரோ, எதுக்காகவோ திட்டம் போட்டுச் செய்யுற மாதிரித் தெரியுது. நாம சும்மா இருக்கக் கூடாது. எப்படியாவது இதைக் கண்டுபிடிக்கணும்” என்று இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தார்கள்.

வெயிலின் சூட்டில் இவ்வளவு குளத்து நீரும் ஆவியாகாது, மண்ணும் உறிஞ்சி விடாது. வேறு... அடுத்த ஊரிலிருந்து யாரும் லாரியில் தண்ணீர் கடத்துகிறார்களா?

இரவில் தூங்காமல் விழித்திருந்து குளத்தைக் கண்காணிப்பதென்று இருவரும் பேசிக்கொண்டனர்.

இது பற்றியெல்லாம் ஏதும் அறியாத பறவைகள், குளத்தினுள் வளர்ந்திருக்கும் மரங்களில் அமர்ந்தபடி, சந்தோஷத்துடன் இருந்தன.

முதல் நாள் இரவு முழுவதும் முழித்திருந்தும், குளத்தில் நீர் குறைய என்ன காரணம் என்று இருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டாம் நாள் இரவும் விழித்திருந்தார்கள். நள்ளிரவு நேரம் நெருங்கியது.

குளத்தின் மறுகரையில் சலசலவெனச் சத்தமும் கூடவே நிழல் உருவங்களும் தெரிந்தன. ஆசிரியரும், சலவைத் தொழிலாளியும் மறுகரை பக்கமாக ஓடினார்கள். அங்கே முகத்தைத் துண்டால் மறைத்திருந்த ஒருவருடன், நமது திருடன் கட்டிப்பிடித்துப் புரண்டு கொண்டிருந்தான். நமக்குப் போட்டியாக இன்னொரு திருடன் வந்துவிட்டானோ என்ற கவலையில் சண்டையிட்டான்.

அப்போது அங்கு வந்த இருவரும் முகத்தை மூடியிருந்த உருவத்தை அமுக்கிப் பிடித்தனர்.

“அய்யா, இவரு குளத்துல பெரிய டியூப் போட்டு, தண்ணீரைத் திருடப் பார்த்தாரு” - மூச்சு வாங்கியபடியே சொன்னான் திருடன்.

“யாரது... நம்ம ஊர்ல வந்து இவ்வளவு தைரியமா தண்ணீர் திருடுறது?” என்று இருவரும் முகத்தை மூடியிருந்த துண்டை எடுத்தனர்.

தன் கையிலிருந்த டார்ச் விளக்கின் ஒளியால் அந்த நபரின் முகம் பார்த்த ஆசிரியர் அதிர்ந்துபோனார்.

“அடப்பாவி... நீயா..?”.

அவர் மட்டுமல்ல; நீங்களும்கூட நம்ப மாட்டீர்கள். அந்த நபர் யார் தெரியுமா? ஊர்க் கூட்டத்தில் எதுவுமே தெரியாதது போல, எல்லாவற்றையும் விசாரித்துக்கொண்டிருந்த ஊர் தலைவரேதான். நம்ம திருடன் பிடித்துத் தந்த திருடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x