Last Updated : 22 Mar, 2017 09:26 AM

 

Published : 22 Mar 2017 09:26 AM
Last Updated : 22 Mar 2017 09:26 AM

சித்திரக்கதை: சிங்கத்துக்குப் பிடித்த சிறுவன்

அன்றைய பகல் பொழுது மிகவும் பிரகாசமாக இருந்தது. அங்கு வீசிய இதமான காற்றில் நூலக வாசலுக்கு முன்பு ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடி படபடத்து ஆடிக்கொண்டிருந்தது.

ஆண்டி என்றொரு சிறுவன் சிங்கத்தைப் பற்றிய புத்தகத்தைத் தேடியெடுத்துப் படிக்க நூலகத்துக்குச் சென்றான். புத்தகத்தை இரவலாகப் பெற்றுக்கொண்டவுடன் அவன் வீடு திரும்பினான். ஆண்டி புத்தகத்தைப் பல தடவை வாசித்தான். திரும்பத் திரும்பப் புத்தகத்தைப் படித்துப்பார்த்த அவனுக்குச் சிங்கத்தின் கதை பிடித்திருந்தது.

இரவு உணவு சாப்பிடும்போதுகூட அவன் புத்தகத்தைக் கையில் வைத்திருந்தான். படுக்கைக்குச் சென்ற ஒரு சில நிமிடங்களுக்கு முன்புவரை சிங்கத்தைப் பற்றிய புத்தகத்தை வாசித்தான்.

ஆப்பிரிக்கக் காடுகளில் வேட்டையாடப்படும் சிங்கங்களைப் பற்றிய கதைகளைத் தாத்தா அவனுக்குச் சொல்லியிருந்தார். அவர் சொன்ன ஒவ்வொரு கதையும், “கடைசியில் துப்பாக்கியால் சிங்கத்தைக் குறிவைத்து டுமீல்…டுமீல்….டுமீல் என்று சுட்டேன்” என்றே முடிந்தது.

அன்று இரவு முழுக்க அவன் ஆப்பிரிக்கக் காடுகளில் சிங்கத்தை வேட்டையாடுவதாகவே கனவு கண்டான். மறுநாள் காலையில் விடிந்ததும் எழுந்தான். அவன் வீட்டு நாய்க்குட்டி படுக்கை விரிப்பைக் கடித்து இழுத்து அவனை எழுப்பிவிட்டது. அன்றிரவு கனவில் அவனுடன் தங்கியிருந்த சிங்கங்கள் வெளியே சென்றிருந்தன.

இருந்தாலும் எல்லாச் சிங்கங்களும் வீட்டுக்குப் பின்பக்கமுள்ள கூடத்தில் காத்திருப்பதாக நினைத்தான். அப்போது அங்கு வந்த அப்பா, அவனை முகத்தைக் கழுவச் சொல்லி ஞாபகப்படுத்தினார். காலைச் சிற்றுண்டி சாப்பிட்ட பிறகும்கூட அவன் அதே நினைவுகளுடன் இருந்தான். பள்ளிக்கூடம் செல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு கடைசியாக அம்மா தலை வாரி விட்டபோதுகூட அவற்றை நினைத்தான். பிறகு பள்ளிக்குக் கிளம்பிச் சென்றான்.

ஆண்டி, கையில் வைத்திருந்த புத்தகத்தை ஆட்டியபடியும் விசிலடித்தபடியும் பாதையில் நடந்துசென்றான். திடீரென்று நடைபாதை திருப்பத்திலிருந்த பாறையின் பின்பக்க வளைவில் ஏதோ ஒன்று நீண்டுகொண்டிருப்பதைப் பார்த்தான். அது, பார்ப்பதற்கு விநோதமாகத் தெரிந்தது.

ஆண்டியும் அவனுடன் வந்த நாயும் அது என்னவென்று கண்டுபிடிப்பதற்காகப் பதுங்கிப் பதுங்கி நடந்தார்கள். அது சற்று நகர்ந்து வந்தது. திடீரென்று மிகப் பெரும் கர்ஜனை சத்தம் கேட்டது. ஆமாம்! அது ஒரு சிங்கம்.

அதைப் பார்த்தவுடனே அவன் பாறை மறைவில் ஓடிச்சென்று ஒளிந்துகொள்ள நினைத்தான். சிங்கமும் அது மாதிரியே நினைத்தது. இருவரும் பாறையைச் சுற்றிச் சுற்றி ஓடினார்கள். ஆண்டி எந்தப் பக்கம் ஓடினாலும் எதிரில் சிங்கம் வந்து நின்றது. சிங்கம் எந்தப் பக்கம் ஓடினாலும் எதிரில் ஆண்டி வந்து நின்றான். மூச்சிரைக்க ஓடிய சிங்கமும் ஆண்டியும் கடைசியில் ஒரு இடத்தில் நின்றார்கள்.

சிங்கம் தனது முன்னங்கால் பாதத்தைத் தூக்கிக் காண்பித்தது. அதன் பாதத்தில் ஒரு பெரிய முள் குத்தியிருந்தது. அதைப் பார்த்த சிறுவனுக்கு ஒரு யோசனை வந்தது. அவன், சிங்கத்திடம் வலியைச் சற்றுப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். எப்போதும் அவன் தனது சீருடையில், அதாவது பின்பக்கப் பையில் ஒரு ஊசி வைத்திருப்பான். அதிர்ஷ்டவசமாக அன்றும் அவன் அதை வைத்திருந்தான். அதைப் பையிலிருந்து எடுத்தான்.

தனது காலைத் தூக்கி சிங்கத்தின் பாதத்தில் வைத்து முட்டுக்கொடுத்து நின்றான். உடல் பலத்தை ஒன்று திரட்டிச் சிங்கத்தின் பாதத்தில் தைத்திருந்த முள்ளைப் பிடுங்கி எடுத்தான்.

அவனுக்கு நன்றி தெரிவிக்க எண்ணிய சிங்கம், தனது நாக்கால் ஆண்டியின் முகத்தை நக்கிக்கொடுத்தது. பிறகு அவர்கள் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்தது. எனவே அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கையசைத்து விடைபெற்றார்கள். ஆண்டி பள்ளிக்குப் போனான். சிங்கமும் அங்கிருந்து புறப்பட்டுப் போனது.

சில நாட்களுக்குப் பிறகு அங்கு வசந்த காலம் ஆரம்பித்தது. ஆண்டி வசிக்கும் ஊரில் சர்க்கஸ் கூடம் அமைத்திருந்தார்கள். ஒரு நாள் ஆண்டியும் சர்க்கஸ் காட்சியைப் பார்க்கப் போனான். சிங்கத்தின் சாகசங்களைப் பார்க்க ஆர்வமாக இருந்தான்.

வித்தைக் காட்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு பெரிய சிங்கம் உயரமான இரும்புக் கூண்டுக்கு வெளியே தாவிக் குதித்தது. பயங்கரமாகக் கர்ஜித்தபடி பார்வையாளர்களுக்கு மத்தியில் பாய்ந்தோடியது. மக்கள் அனைவரும் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். அவர்களுக்கு நடுவில் ஆண்டியும் தாவியேறித் தப்பிக்க முயற்சித்தான். ஆனால், அவன் சிங்கத்துக்குப் பக்கத்தில் விழுந்தான். சிங்கம் தன்னைக் கொன்றுவிடுமென பயந்தான். ஒட்டுமொத்தக் கூட்டமும் அந்தச் சிறுவன் அவளோதான் என நினைத்தது.

ஆனால், பயந்தபடி அங்கு எதுவும் நடக்கவில்லை. அந்தச் சிங்கம் ஏற்கெனவே அவனுக்குப் பழக்கமான சிங்கம். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொண்டார்கள். ஆனந்த நடனம் ஆடி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.

சிங்கத்தைப் பிடிக்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த மக்கள் கூட்டம் திரும்பி வந்தது. அப்போது ஆண்டி சிங்கத்துக்கு முன்னால் வந்து நின்றான். மக்கள் மத்தில் நின்றுகொண்டு கோபத்துடன் கூச்சலிட்டான்.

“இந்தச் சிங்கத்தை யாரும் எதுவும் செய்யக் கூடாது. இது எனது நண்பன்” என்றான். அதற்கு அடுத்த நாள் அவன் சிங்கத்தை வீதி வழியாக அழைத்துச் சென்றான். அந்த நகர மக்களும் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். ஆண்டியின் வீரதீரச் செயலைப் பாராட்டி அந்த ஊரின் தலைவர் அவனுக்கு ஒரு பதக்கம் அணிவித்துப் பாராட்டினார். உடனிருந்த சிங்கம் பெரும் மகிழ்ச்சி அடைந்தது.

மறுநாள், ஆண்டி சிங்கத்தைப் பற்றிய கதைப் புத்தகத்தை நூலகத்தில் திருப்பித்தரக் கொண்டுசென்றான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x