Last Updated : 20 Jan, 2016 10:59 AM

 

Published : 20 Jan 2016 10:59 AM
Last Updated : 20 Jan 2016 10:59 AM

சித்திரக்கதை: குள்ளநரியும் சிங்க ராஜாவும்

காட்டில் குள்ளநரி ஒன்று வசித்து வந்தது. அது எப்போதும் மூக்கால் மண்ணை மோப்பம் பிடித்துக் கொண்டே போகும். எங்கேனும் வளையில் எலியோ நண்டோ இருந்தால், அதன் வாசனையைக் குள்ளநரி கண்டுபிடித்துவிடும்.

வளையினுள் எலி இருந்தால், குள்ளநரி தன் கால் விரல் நகங்களால் மண்ணைத் தோண்டி எலியைப் பிடித்து சாப்பிடும். வளைக்குள் நண்டு இருந்தால், குள்ளநரி வளைக்குள் தன் ரோமம் அடர்ந்த வாலைத் திணித்து வைத்துக்கொண்டு, காத்திருக்கும். நண்டு குள்ளநரியின் வாலைப் பிடித்துக் கொள்ளும்போது, சட்டென்று வாலை வளையிலிருந்து வெளியே இழுத்து, நண்டைப் பிடித்து சாப்பிடும்.

இப்படியே குள்ளநரி தன் பசியைத் தீர்த்துக்கொண்டது.

ஒருநாள், ஒரு குறுகிய பாதை வழியே அந்தப் புத்திசாலி குள்ளநரி போய்க்கொண்டிருந்தது. பாதையின் இரு பக்கமும் செங்குத்தான உயரமான பாறைகள் இருந்தன.

உற்சாகமாக ஓடிக்கொண்டிருந்த குள்ளநரி திடீரென்று தன் எதிரில் தோன்றிய உருவத்தைப் பார்த்து அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டது. ஆமாம்! குள்ளநரி சற்றும் எதிர்பார்க்காதபடி, அந்த குறுகிய பாதையில் சிங்கம் ஒன்று குள்ளநரியை நோக்கி வந்துகொண்டிருந்தது.

சிங்கத்தைக் கண்டதும் பயத்தால் குள்ளநரியின் உடல் நடுங்கியது. இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. குள்ளநரிக்கு ஏற்கெனவே அந்த சிங்கத்திடம் அறிமுகம் உண்டு. பலமுறை அந்தச் சிங்கத்தை குள்ளநரி தன் தந்திரத்தால் ஏமாற்றியும் இருந்தது.

இந்தமுறை சிங்கத்திடமிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், அது வந்த வழியே திரும்பித்தான் ஓட வேண்டும். ஆனால், சிங்கத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓட முடியாது என்று குள்ளநரிக்குத் தெரிந்தே இருந்தது.

இதுவரை தான் சிங்கத்தை ஏமாற்றியதற்கு, இந்தமுறை நிச்சயம் சிங்கம் தன்னைப் பழிவாங்கிவிடும் என்ற எண்ணம் வந்தது. குள்ளநரிக்கு உதறல் எடுத்தது. இருந்தாலும் அந்தப் புத்திசாலி குள்ளநரி, தன் மனதில் சட்டென்று ஒரு திட்டம் வகுத்துக்கொண்டது.

அது உடனே “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!” என்று அலறியவாறே, சிங்கத்தை நோக்கி ஓடியது. கூடவே அடிக்கடி, இருபுறமும் நெடிதாய் நின்ற பாறைகளையும் அண்ணாந்து பார்த்துக் கொண்டது குள்ளநரி.

குள்ளநரி இவ்வாறு ஓடி வருவதைக் கண்ட சிங்கம் ஆச்சரியம் அடைந்தது.

குள்ளநரி தொடர்ந்து அண்ணாந்து பார்த்தவாறே, “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்தது.

அது சிங்கத்தின் அருகில் வந்ததும், “மன்னா! ஏதேனும் உதவி செய்யுங்கள். சற்றும் தாமதிக்கக் கூடாது. இதோ இருபுறமும் உயர்ந்து நிற்கின்ற பாறைகள் இன்னும் சற்று நேரத்தில் உடைந்து கீழே விழப்போகின்றன. பாறைகள் நம் மீது விழுந்தால், நாம் இருவரும் அடியில் சிக்கி இறந்துபோவோம். பலசாலியான சிங்கராஜாவே! நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற முடியும்!” என்று பயத்தோடு சொல்வதுபோல கூறியது.

கூடவே, அது தன் கால் பாதங்களை உயர்த்தி தன் தலையை மூடிக்கொண்டு, மிகவும் பயப்படுவது போல நடித்தது.

சிங்கம் தன் தலையை உயர்த்தி, இருபுறம் உயர்ந்திருந்த பாறைகளைப் பார்த்தது.

பலசாலி சிங்கராஜாவே என்று குள்ளநரி தன்னை அழைத்ததால், சிங்கத்தின் மனதில் கர்வம் வந்துவிட்டது. கர்வம் கொண்ட சிங்கத்திற்கு அறிவும் மழுங்கிவிட்டது.

‘இந்தக் காட்டில் நான்தான் பலசாலி! என்னால் மட்டுமே மற்ற விலங்குகளைக் காப்பாற்ற முடியும்' என ஆணவத்துடன் பேசியது சிங்கம். உடனே தன் தோள்களைப் பாறைகளின் மீது சாய்த்து, பாறைகளைத் தாங்கிக்கொண்டது.

அதனைக் கண்ட குள்ளநரி, “நன்றி ராஜா! நன்றி! உங்களைப் போன்ற பலசாலியால்தான் இந்தப் பாறையைத் தன் தோள்களால் தாங்கிப் பிடிக்க முடியும். நீங்கள் சற்றுநேரம் அப்படியே பாறைகளைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். நான் ஓடிப்போய் பாறைகளைத் தாங்கிப் பிடிக்க ஏதாவது மரக்கொம்புகளைக் கொண்டு வருகிறேன்!” என்று சொல்லியபடி, அங்கிருந்து ஓடிச் சென்றது.

குள்ளநரி சொன்னதை நம்பி சிங்கமும் வெகுநேரம் அப்படியே பாறைகளைத் தன் தோள்களால் தாங்கியபடி நின்றது. வெகுநேரம் குள்ளநரி வராமல் போகவே, சிங்கம் யோசிக்க ஆரம்பித்தது.

‘ஆஹா! உறுதியாக நிற்கிற பாறைகள் கீழே விழுவதாகத் தந்திரமாடி, குள்ளநரி என்னை மீண்டும் ஏமாற்றிவிட்டதே’ என்று புரிந்துகொண்ட சிங்கம், கோபத்தோடு அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

இப்படியே எத்தனை முறை குள்ளநரி சிங்கத்தை ஏமாற்றியதோ தெரியாது. ஆனால், சிங்கத்திடமிருந்து அது இப்படித்தான் உயிர் தப்பிக்கொண்டு இருக்கிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x