Last Updated : 03 Feb, 2016 10:53 AM

 

Published : 03 Feb 2016 10:53 AM
Last Updated : 03 Feb 2016 10:53 AM

சித்திரக்கதை: ஆகாயத்தில் ஒரு மாளிகை

அதனபுரி என்று ஓர் ஊர் இருந்தது. அந்த ஊருக்கு அடாவடியன் என்பவர் அரசனாக இருந்தார். பெயரைப் பார்த்தீர்களா? கொஞ்சம் நெருடலான பெயர். பெயர் மட்டுமல்ல. அரசனின் குணமும் அப்படித்தான். ஊர் மக்களை ஏதேனும் ஒரு வகையில் கொடுமைப்படுத்திக்கொண்டே இருப்பார். அதுதான் அவரது பொழுதுபோக்கு.

ஒரு நாள் ஊர் மக்களை எல்லாம் அரண்மனைக்கு வரவழைத்தார். மக்களும் கூடினர். அப்போது அரசன், “அன்பார்ந்த நாட்டு மக்களே…. உங்கள் திறமையைச் சோதிக்க இன்று ஒரு போட்டியை வைக்கப்போகிறேன். பங்கேற்பீர்களா?” என்று கேட்டார்.

“ராஜா வைக்கும் எந்தப் போட்டிக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். போட்டியைச் சொல்லுங்கள்” என்று ஊர் மக்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

உடனே அந்த அரசன், “எனக்குப் பூமியில் வாழ்ந்து போரடித்துவிட்டது. வானத்தில் வாழ ஆசைப்படுகிறேன். ஆகவே நீங்கள் எல்லோரும் சேர்ந்து வானத்தில் எனக்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும். பதினைந்து நாள் அவகாசம் தருகிறேன். நன்றாக யோசித்து பதினாறாவது நாள் அந்த மாளிகையைக் கட்டும் திட்டத்துடன் இங்கு வந்து கூட வேண்டும். நல்ல திட்டத்துடன் வந்தால்தான் நீங்கள் இந்த நாட்டில் உயிரோடு வாழ முடியும். தவறினால் உங்கள் அனைவரையும் சிரச்சேதம் செய்துவிடுவேன்” என்று மிரட்டலாக அறிவித்தார்.

அதைக்கேட்ட மக்கள், அதிர்ச்சி அடைந்தார்கள். ‘வானத்தில் எப்படி மாளிகை கட்ட முடியும்?’ என்ற பயத்துடன் வீடு திரும்பினார்கள். அன்று முதல் அந்த ஊர் மக்களை மரண பயம் சூழ்ந்துகொண்டது.

பதினாறாவது நாள் வந்தது. ‘நாம் எல்லோரும் இன்று சாகப் போகிறோம்’என்று அழுதபடி கண்ணீருடன் அரண்மனை வாயிலில் கூடினார்கள் மக்கள்.

அரசன் அடாவடியன் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு அங்கு வந்தார். அவரைச் சுற்றி, கூரிய வாளும் அம்புமாகப் படைவீரர்கள் சூழ்ந்து நின்றார்கள்.

“ம்… நான் சொன்னபடி வானத்தில் மாளிகைக் கட்ட திட்டம் தயாரித்து விட்டீர்களா?” என்று ஜம்பமாகக் கேட்டார்.

மக்கள் அனைவரும் பதில் பேசமுடியாமல் தலைகுனிந்து நின்றார்கள். அப்போது கூட்டத்தில் இருந்து ஓர் இளைஞன் முன்னால் வந்து நின்றார்.

“திட்டம் தயார் அரசே” என்றார் கணீரென்ற குரலில்.

குரலைக் கேட்டதும் மக்கள் நம்ப முடியாத ஆச்சரியத்துடன் தலை நிமிர்ந்தார்கள். அடாவடியன் அரசனும் அதிர்ந்து போய்ப் பார்த்தார். “சரி, கட்டிட வேலையை எப்படி ஆரம்பிப்பாய்?” என்று அதிகாரத் தோரணையுடன் கேட்டார்.

“மதிப்பிற்குரிய ராஜாவே… நீங்கள் வாழப்போகும் மாளிகை மங்களகரமாக அமைய வேண்டும். மாளிகை கட்டுவதற்கு முன் பூமி பூஜை அவசியம் செய்ய வேண்டும். ராஜாவின் மாளிகைக்கு ராஜாவான நீங்கள்தான் அடிக்கல் எடுத்துவைக்க வேண்டும். அப்படி நீங்கள் அடிக்கல் வைத்த உடனேயே, நாங்கள் மாளிகையின் கட்டிட வேலையை ஆரம்பித்து விடுவோம். வானத்தில் எப்போது கல் வைப்பீர்கள் என்பதைத் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அதைக் கேட்ட மக்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

அடாவடி அரசனோ திகைப்பில் தடுமாறினார். “மக்களை எதையாவது சொல்லி வதைக்கலாம் என்று பார்த்தால், அது எனக்கே வினை வைத்துவிட்டதே” என்று நினைத்தபடி கையைப் பிசைந்தார். வேறு வழியில்லாமல் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு தலைகுனிந்தார்.

(ஆப்பிரிக்க கிராமியக் கதையைத் தழுவியது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x