Last Updated : 10 May, 2017 11:09 AM

 

Published : 10 May 2017 11:09 AM
Last Updated : 10 May 2017 11:09 AM

காரணம் ஆயிரம்: பரிசாக மாறும் பூக்கூடை பூச்சி

உங்களுக்குப் பிறந்த நாள் என்றால் என்ன செய்வீர்கள்? நண்பர்களுக்கு சாக்லெட் கொடுப்பீர்கள். நண்பர்களுக்குப் பிறந்த நாள் என்றால், ஏதாவது பரிசு கொடுப்பீர்கள். அம்மா, அப்பா யாருடைய திருமண விழாவுக்காவது சென்றால் பரிசு பொருள் வாங்கிக்கொண்டு போவார்கள். பெரிய மனிதர்களின் வீட்டு விழாக்கள் என்றால் பூங்கொத்து (பொக்கே) வாங்கிக்கொண்டு போவோம். சில சமயம் பூக்களால் செய்யப்பட்ட பூக்கூடையைக்கூடக் கொடுப்போம். ஆனால், யாராவது பூச்சியைப் பிடித்துக்கொண்டுபோய்த் திருமணப் பரிசு கொடுப்பார்களா? ஜப்பானில் ஒரு பூச்சியைத்தான் திருமணப் பரிசாகக் கொண்டுபோய்க் கொடுக்கிறார்கள்.

அது என்ன பூச்சி? வீனஸ் பூக்கூடை (Veenus Basket). இந்தப் பூச்சிதான் ஜப்பானில் எல்லோருக்கும் பிடித்த திருமணப் பரிசு. கண்ணாடி இழைகளைக் கொண்டு கைகளால் பின்னப்பட்டது போலப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஓர் உயிரினம்தான் இந்த வீனஸ் பூக்கூடை. உண்மையில் இது ஒரு கடல் பஞ்சு.

மழைக்கு ஒரு கடவுள், வெயிலுக்கு ஒரு கடவுள், வீரத்துக்கு ஒரு கடவுள் என்று நாம் வழிபடுவது போல ரோம் நாட்டு மக்கள் அன்புக்கு என்று ஒரு பெண் கடவுளை ஆதிகாலத்திலிருந்து வழிபட்டு வருகிறார்கள். அந்தப் பெண் கடவுளின் பெயர்தான் வீனஸ். பார்ப்பதற்கு அன்புக்கான கடவுள் வீனஸ் தேவதை மாதிரியே இந்தக் கடல் பஞ்சு இருப்பதால் இதற்கு வீனஸ் பூக்கூடை என்று பெயர்.

அதெல்லாம் சரி, எதற்காக இந்தக் கடல் பூச்சியை (கடல் பஞ்சை) திருமணப் பரிசாகக் கொடுக்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. அதற்கு முன் இந்தக் கடல் பஞ்சு பற்றி ஒரு சின்ன அறிமுகம்.

20 சென்டி மீட்டர் நீளம் வரை வளரும் கடல் பஞ்சு, மேற்கு பசிபிக் கடலில் ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளின் ஆழமிக்க பகுதிகளில் காணப்படுகிறது. இந்தியப் பெருங்கடலிலும் வீனஸ் பூக்கூடையைப் பார்க்க முடியும். இதன் உயிரியல் பெயர் எப்லெக்டெல்லா ஆஸ்பரிஜிலம் (Eplectella Asperigillum).

அறுகோண வடிவில் (மத்தளத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்) இருக்கும் இந்தக் கடல் பஞ்சு ஓர் இயற்கை அற்புதம். மனிதனால்கூடச் செய்ய முடியாத செயலைச் செய்து தங்கள் உடலைத் தாங்களே எழுப்பிக் கொள்கிறது.

இன்று ஆப்டிகல் ஃபைபர் (கண்ணாடி இழைகள்) பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் தொலைத்தொடர்புத் துறையில் கண்ணாடி இழையின் பங்கு அதிகம். கண்ணாடி இழைகளைத் தயாரிப்பது என்பது மிகச் சிக்கலான காரியம். அதிக வெப்பநிலையில் உலோகம் உருக்கப்பட்டுத் தேவையான கண்ணாடி இழைகள் தயாரிக்கப்படுகின்றன.

விஞ்ஞானிகள் சிரமப்பட்டுத் தயாரிக்கும் இந்தக் கண்ணாடி இழைகளைக் கடல் பஞ்சுகள் போகிற போக்கில் அசால்ட்டாக தயாரித்து விடுகின்றன. உண்மையில் சிலிக்கன் என்கிற தனிமத்திலிருந்துதான் கண்ணாடி இழைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கடல் பஞ்சு கடல் நீரில் இருக்கக்கூடிய சிலிசிக் அமிலத்தை எடுத்துக்கொண்டு அதனைச் சிலிகாவாக மாற்றுகிறது. இந்தச் சிலிகாவிலிருந்து கண்ணாடி இழைகளைத் தயாரித்து, பெரிய வலை பின்னலை உருவாக்கி, அழகிய கூடு போல மாற்றுகிறது.

இவை உருவாக்கும் கண்ணாடி இழைகள் நம் தலைமுடி போல மெலிதாக இருப்பது ஒரு பெரிய ஆச்சரியம். அந்த அளவுக்குத் துல்லியமாக இழைகளை உருவாக்கிக் கூடுகளை நெய்துகொள்கின்றன. ஒவ்வொரு கண்ணாடி இழையின் நீளமும் 5 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் நீளம் வரை இருக்கும்.

இப்படித்தான் உயிருள்ள கண்ணாடி இழைகளை இந்தக் கடல் பஞ்சு உருவாக்குகிறது. இந்த இழைகளில் உள்ள குண்டூசி போன்ற அமைப்பு (படிகச் சிம்பு ஊசிகள்) இந்த இழைகள் வலிமையாக நிற்பதற்கு உதவுகின்றன. இதற்கு ஒளி உமிழும் தன்மை இருக்கிறது. இந்தப் பூக்கூடை பூச்சிகளின் இன்னொரு சிறப்பு இது. கண்ணாடி இழைப் பூச்சிகள் தங்களுடைய ஒளி உமிழும் திறனால் மற்ற சிறிய உயிரினங்களைக் கவர்ந்திழுத்து உணவாக்கிக் கொள்கின்றன.

அதெல்லாம் சரி, இதை எதற்குத் திருமணப் பரிசாகக் கொடுக்கிறார்கள்? பூக்கூடை பூச்சிகள் சிறிய அளவில் இருக்கும்போது இதற்குள் இரை தேடி இறால் மீன் குட்டிகள் உள்ளே வந்து விடுகின்றன. அதுவும் ஆணும், பெண்ணுமாக இரண்டு இறால் மீன் குட்டிகள் பூக்கூடை பூச்சிக்குள் எப்படியும் வந்துவிடும்.

பூக்கூடை பூச்சிகள் அனுப்பும் மீதி உணவுப் பொருட்களையும், கழிவுப் பொருட்களையும் சாப்பிட்டு இந்த இறால் மீன்கள் உயிர் வாழ்கின்றன. பின்னால், வீனஸ் பூக்கூடை தங்கள் கண்ணாடி இழைகளால் இறால்களையும் சேர்த்து மூடி விடுகின்றன. இறால் மீன்களும் பெரிதாக வளர்ந்து விடுவதால் அவைகளால் வெளியே வர முடிவதில்லை. கடைசி வரை இறால்கள் பூக்கூடைக்குள் இணைந்தே வாழ்கின்றன. வீனஸ் பூக்கூடை இறக்கும்போது இறால்களும் இறந்து போய்விடுகின்றன. இறந்து காய்ந்து போன வீனஸ் பூக்கூடைகள்தான் ஜப்பானில் பரிசளிக்கப்படுகின்றன.

திருமணத்தில் இணையும் தம்பதிகள் இறுதிவரை இணைந்தே வாழ வேண்டும் என்பதன் காரணமாக இந்த வீனஸ் பூக்கூடைகளைப் பரிசாக வழங்குகிறார்கள்.

அழகான பரிசுதானே!

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x