Published : 29 Mar 2017 10:00 AM
Last Updated : 29 Mar 2017 10:00 AM

காரணம் ஆயிரம்: எரியும் எரிமலைக்குள் ஒரு புழு

கொஞ்சம் வெயில் அதிகமாகிவிட்டாலே நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். பாவம், புழுக்கள் என்ன செய்யும்? சுருண்டு விழுந்து இறந்துவிடும். மனிதனால் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வரை உள்ள வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், 400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எந்தச் சேதாரமும் இல்லாமல் ஓர் உயிர் வாழ்கிறது. அதுவும் ஒரு புழுதான்!

பூமியின் மையப்பகுதியில் அதன் வெப்பநிலை 5000 டிகிரி செல்சியஸ். இந்த வெப்பக் குழம்பை மூடியிருக்கும் தட்டுகள்தான் நாம் வாழும் பூமி. இந்தத் தட்டுகளை ‘டெக்டானிக் ப்ளேட்ஸ்’ எனப் புவியியல் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த டெக்டானிக் தட்டுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்போது பூமியில் விரிசல் ஏற்பட்டு, நிலநடுக்கம் உருவாகிறது. கடலுக்கடியில் நிலம் பிளவுபட்டு பெரிய பள்ளம் உருவாகிறது.

இந்தப் பெரிய பள்ளத்தில் நிரம்பும் நீர், பூமியின் அதிக வெப்பத்தால் மிகவும் சூடாகிறது. வழக்கமாக 5 அல்லது 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கவேண்டிய கடல் நீர், பூகம்பத்தால் 400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்கிறது. இந்த 400 டிகிரி செல்சியஸ் வெப்பம் என்பது தகிக்கும் வெப்பம். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்தப் புழு தோன்றுகிறது. புழு என்றவுடன், ‘தம்தாத்தூண்டு’இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். உருவான இரண்டே ஆண்டுகளில் 7 அடி வரை வளர்ந்துவிடும். ஆம், அது ராட்சசக் குழாய் அளவுக்கு இருக்கும் புழு (Giant tube worm).

நீங்கள் அதன் அருகில் போய் நின்றால் புழுவை அண்ணாந்துதான் பார்க்க வேண்டியிருக்கும். ‘புழு’தான் உங்களைப் புழு மாதிரிப் பார்க்கும். இதன் உருவம் ராட்சச அளவுக்கு இருக்குமே தவிரப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலே இறகு போன்ற சிவப்பு நிற ஒரு குப்பி, கிரீடம் வைத்தது போல இருக்கும். தூரத்திலிருந்து பார்க்கும் போது பெண்கள் உபயோகப்படுத்தும் லிப்ஸ்டிக் குப்பிகள் மாதிரி இருப்பதால் இதற்கு லிப்ஸ்டிக் புழுக்கள் என்றும் பெயர் உண்டு.

விலங்குகளின் பெருவகைப்பாட்டில் ‘அன்மீலியா’ என்ற பிரிவின் கீழ்வரும் பாலிகீட்டா வகுப்பைச் சேர்ந்தவை இந்தப் புழுக்கள். இந்தப் புழுவின் விலங்கியல் பெயர் ரிப்ஷியா பாட்சிப்டிலா (Riftia pachyptila). பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் மண்டலங்களில்தான் இவை அதிகம் காணப்படுகின்றன. டெக்டானிக் தகடுகள் நகர்ந்து, வெடித்துச் சிதறுவதால் உண்டாகும் கருமையான புகைமண்டலப் பகுதிதான் இவை விரும்பி வசிக்கும் இடம்.

எரிமலைக் குழம்பை எடுத்து யாராவது குடிக்க விரும்புவார்களா? ஆனால், இந்தப் புழு குடிக்கும்! எப்படி? அதாவது, எரிமலை வெப்பத்தைத் தாங்கி உயிர் வாழ்கிறதே எப்படி? என்ன காரணம்?

கடலுக்கு அடியில் மிக ஆழமான இடத்தில் அழுத்தம் மிகவும் அதிகம். இப்படியொரு ஆழத்தில் மிக வலிமையான கற்பாறைகள் கற்கண்டு மாதிரிச் சிதறிவிடும். ஆனால், எலும்பே இல்லாத புழு எப்படி இத்தனை அழுத்தத்தையும் சமாளிக்கிறது. பூகம்பத்திலும், எரிமலைச் சிதைவிலும் நச்சுப்புகையும், நச்சு அமிலமும்தான் ஆழ்கடல் பகுதியில் இருக்கும். இந்த அமிலங்களில் இந்தப் புழு நீச்சலடிக்கிறதே எப்படி? ஒரே ஒரு காரணம்தான். அமிலம், வெப்பம், அழுத்தம் இவற்றையெல்லாம் இந்தப் புழு உணவாக்கிக்கொள்கிறது. அவ்வுளவுதான்.

இந்த புழுக்களின் உடல் பாதியளவு பாக்டீரியாவால் நிரம்பியிருக்கும். இந்த பாக்டீரியா சுற்றுப்புறத்தில் உள்ள வேதிபொருட்களுடன் வினைபுரிந்து புழுவின் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்தை அளிக்கிறது. இந்தப் புழுக்களின் உடல் அமைப்பை ‘வாங்குலர்’ உடலமைப்பு என்று சொல்வார்கள். இதன் உடம்பு நீர்மப் பொருட்களை, உடலின் பல்வேறு பகுதிகளுக்குக் கடத்திச் செல்லும் வகையில் குழாய் போன்ற அமைப்பால் ஆனது.

இந்தப் புழுக்களின் தலைப்பகுதியில் ‘ப்ளும்’ என்ற சிவப்பு நிறக் கொப்பி காணப்படுகிறது. இந்த ‘ப்ளும்’ சுற்றுப்புறத்தில் உள்ள வேதிப் பொருட்களை உடலின் உள்ளே பாக்டீரியாவுக்குக் கடத்துகிறது.

இந்தப் பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் சல்பைடு (உயிர்க்கொல்லி) கார்பன்-டை-ஆக்சைடு (கரியமில வாயு) போன்றவற்றுடன் வேதி வினைகளில் ஈடுபட்டு உயிர்ப் பொருட்களாக மாற்றி புழுக்களுக்குத் தேவையான உயிர்சக்தியை அளிக்கிறது. இந்தப் புழு ஒரு வேதித் தொழிற்சாலை மாதிரிச் செயல்படுவதால் இதற்குச் செரிமான மண்டலம், கழிவு நீக்க மண்டலம் என்றெல்லாம் எதுவும் இல்லை.

மிக அதிகமான வெப்பநிலைகளில் புதிய புதிய வேதி வினைகள் நடக்கின்றன. இந்த வேதி வினைகளின்போது உயிரை அழிக்கக்கூடிய நச்சுப் பொருட்கள் தோன்றுகின்றன. இந்த ராட்சத சுருள் புழு நச்சுப் பொருட்களோடு வேதி வினை புரிந்து நச்சுப் பொருட்களை லிப்ஸ்டிக் மாதிரிப் பூசிக்கொள்கிறது. ஆக, இந்தப் புழு வேதி வினைகளால் உயிர் வாழ்வதால் அதிக வெப்பத்தைத் தாங்கி உயிர் வாழ்கிறது. அதிக அளவில் ஹீமோகுளோபின் இருப்பதால் இதன் மொட்டு போன்ற நுனிப்பகுதி சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

இதன் வாழ்க்கை சுழற்சியில் ஒரு சுவாரசியம் உள்ளது. இதற்கு எதிரிகள் என்று யாருமே இல்லை. எந்த விலங்கும் இதைத் தின்று அழிப்பதில்லை. இயற்கைச் சீற்றத்தால் பெரும் ஆபத்து வருவது போலத் தோன்றினால் அதன் ‘ப்ளும்’என்ற சிவப்பு நிற நுனிப்பகுதி மட்டும் உடைந்து விலகிவிடும். மற்றபடி எதிரிகளே இல்லாத புழு இது.

அது சரி, எரிமலையைவிட வேறு ஒரு எதிரி வேண்டுமா என்ன?

(காரணங்களை அலசுவோம்)
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x