Last Updated : 19 Jul, 2017 10:23 AM

 

Published : 19 Jul 2017 10:23 AM
Last Updated : 19 Jul 2017 10:23 AM

கதை: ஷாலு வாங்கிய அற்புதம்!

நண்பர்களுடன் விளையாடி, களைத்துப் போய் வீட்டுக்குள் நுழைந்தாள் ஷாலு. மேஜையில் ஒரு பரிசுப் பெட்டியைக் கண்டதும் அவள் கண்கள் இன்னும் அகலமாகத் திறந்தன.

“ஹை! இது எனக்கா!” என்ற ஷாலுவின் குரல் கேட்டு வந்தார் அவள் அப்பா.

“உன் பிறந்தநாளுக்கு எங்களோட பரிசு! பிரிச்சுப் பார்.”

வேகமாகப் பிரித்தாள். அவளுக்கு மிகவும் பிடித்த யானை உருவத்தில் அழகான மண் உண்டியல் இருந்தது.

“இது எனக்கே, எனக்குதானா! இனி நானும் அண்ணனைப் போல் பணம் சேர்க்கலாமா?

“உனக்கு ஏழு வயசாயிருச்சு ஷாலு. இனி நாங்க கொடுக்கும் காசை இதில் நீ சேர்க்கலாம். உனக்குத் தேவையான பேனா, பென்சில், ரப்பர், பொம்மை எல்லாம் வாங்கிக்கலாம். நீ பத்திரமாகச் சேமிக்கும் பணத்தை, அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தணும். சரியா ஷாலு?”

“ஓகேப்பா. எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு! தேங்க்ஸ்” என்றவளிடம் அம்மாவும் அப்பாவும் ஆளுக்கு ஐந்து ரூபாய் கொடுத்தனர்.

ஷாலு ஒவ்வொரு முறை உண்டியலில் பணம் போடும்போதும் அம்மாவிடம் கணக்கு வைக்கச் சொல்லிவிடுவாள். இப்போது அவளிடம் 187 ரூபாய்கள் சேர்ந்துவிட்டன.

அன்று இரவு அம்மாவும் அப்பாவும் அவசரப் பணத் தேவை என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

“அப்பா, இந்தப் பணத்தை எடுத்துக்கோங்க” என்று தன் உண்டியலை நீட்டினாள் ஷாலு.

அம்மாவும் அப்பாவும் சிரித்துவிட்டார்கள்.

“தேங்க்ஸ்டா. எங்களுக்கு இது போதாது. நீ பத்திரமா வச்சுக்கோ” என்றார் அம்மா.

ஷாலுவுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் ஏதாவது பொருள் வாங்க வேண்டும், யாருக்காவது பணம் தரவேண்டும் என்று பேசிக்கொண்டாலே, தன் உண்டியலோடு வந்துவிடுவாள்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஷாலுவின் அண்ணனுக்கு உடல்நிலை மோசமானது. மருத்துவர்களிடம் காட்டினார்கள். பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

“இந்த ஒரு மாதத்திலேயே நிறைய செலவாயிருச்சு. கடன் வாங்கித்தான் செலவு செஞ்சிருக்கோம். இப்போ உடனடியா 5 லட்சம் ரூபாய் கட்டச் சொல்றாங்க. நாம எங்கே போறது?” என்று அழுதார் அப்பா.

“ஏதாவது அற்புதம் நடந்தால்தான் ஆபரேசன் செய்ய முடியும்… நமக்கு வேற வழியில்லை…” என்றார் அம்மா.

வாசலில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஷாலுவுக்கும் அழுகையாக வந்தது. மாலை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வரும்போது உண்டியலை எடுத்துக்கொண்டாள்.

மருத்துவமனையில் இருந்த மருந்துக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டம் குறையும்வரை காத்திருந்தாள். பிறகு கடைக்கு முன் நின்றாள்.

“அங்கிள், எனக்கு ஒரு அற்புதம் கொடுங்க…” என்று மெதுவாகக் கேட்ட ஷாலுவின் குரல் மருந்துக்கடைக்காரருக்குக் கேட்கவில்லை.

மீண்டும், “அங்கிள், எனக்கு ஒரு அற்புதம் கொடுங்க” என்ற குரல் கேட்டு, அருகில் நின்றவர் திரும்பிப் பார்த்தார்.

“யாரம்மா நீ? உனக்கு என்ன அற்புதம் வேணும்?” என்று சிரித்தார் அருகில் இருந்தவர்.

“இந்த உண்டியல் நிறையக் காசு இருக்கு. இதை வச்சுக்கிட்டு, ஒரு அற்புதம் மட்டும் கொடுத்தால் போதும் அங்கிள்.”

“சரி, உனக்கு எதுக்கு அற்புதம் வேணும்?”

“என் அண்ணனுக்கு உடம்பு சரியாகணும்னா அற்புதம் நடக்கணுமாம். அதுக்குதான் கேட்கறேன்.”

“சரி, வா. உன் அண்ணனுக்கு என்ன அற்புதம் தேவைன்னு பார்க்கலாம்.”

பெரியவரை அழைத்துக்கொண்டு, அண்ணன் இருக்கும் அறைக்கு வந்தாள் ஷாலு.

அவர் அண்ணனைப் பரிசோதித்தார். பரிசோதனை முடிவுகளைப் படித்தார். பிறகு ஷாலுவைப் பார்த்து, “உன் அண்ணனுக்கு அற்புதம் கிடைச்சாச்சு!” என்று சிரித்தார்.

“டாக்டர், என்ன சொல்றீங்க?” என்று நம்ப முடியாமல் கேட்டார் அப்பா.

“கவலைப்படாதீங்க. உங்க மகனுக்கு நானே ஆபரேஷன் செய்யறேன். எங்க அறக்கட்டளை அந்தச் செலவை ஏத்துக்கும். தைரியமா இருங்க” என்றார் அந்த மருத்துவர்.

ஷாலு உண்டியலை மருத்துவரிடம் நீட்டினாள்.

“ஷாலு, இந்த அற்புதத்துக்கு இவ்வளவு பணமெல்லாம் தேவையில்லை. நீயே வச்சுக்க!” என்று சிரித்தபடியே சென்றுவிட்டார் மருத்துவர்.

“ஒண்ணும் புரியலையே… எப்படி இந்த அற்புதம் நிகழ்ந்தது! ஷாலு, உன்னை எப்படி அவருக்குத் தெரிந்தது?” என்றார் அம்மா வியப்புடன்.

“நீங்க சொன்ன அற்புதத்தை வாங்குவதற்காக, மருந்துக் கடைக்கு உண்டியலோடு போனேன். அங்கேதான் இந்த அங்கிளைப் பார்த்தேன்மா” என்றாள் ஷாலு.

அம்மாவும் அப்பாவும் ஷாலுவை அணைத்துக்கொண்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x