Last Updated : 05 Jul, 2017 12:45 PM

 

Published : 05 Jul 2017 12:45 PM
Last Updated : 05 Jul 2017 12:45 PM

கதை: நிலாவைச் சாப்பிடுவது யார்?

அடர்ந்த காடு. காட்டு விலங்குகளின் தலைவனாக இருந்தது ஓநாய். அன்று மாலை சூரியன் மறைந்தது. வானத்தைப் பார்த்து ஊளையிட்டு, விலங்குகளை அழைத்தது. ஓநாயின் குரலைக் கேட்டுப் பதறிப்போன விலங்குகள், அதன் இருப்பிடம் நோக்கி ஓடிவந்தன.

யானை, முயல், மான், நரி, சிறுத்தை, வரிக்குதிரை, புலி, காட்டெருது, குரங்கு, முள்ளம்பன்றி, ஒட்டகச்சிவிங்கி என்று அனைத்தும் ஒன்று திரண்டிருந்தன.

நீண்ட நாட்களாகவே ஓநாய்க்கு ஒரு சந்தேகம். அதைத் தீர்த்துக்கொள்வதற்கே இந்தக் கூட்டம்.

“நண்பர்களே, வானத்திலிருந்து யாரோ ஒருவர் இரவு நேரத்தில் ஒரு நிலாவை வீசி எறிகிறார். உங்களில் ஒருவர்தான் அதைத் தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்துச் சாப்பிடுகிறீர்கள். அது யார் என்ற உண்மை எனக்குத் தெரிந்தாக வேண்டும்” என்றது ஓநாய்.

எதிரிலிருந்த விலங்குகள் எல்லாம் நானில்லை நீயில்லை என்று வேகமாக மறுத்தன. உண்மையை ஒப்புக்கொள்ள எந்த விலங்கும் தயாராக இல்லை. தனக்குப் பயந்தும், கடுமையான தண்டனைக்கு அஞ்சியும் மற்ற விலங்குகள் வாயைத் திறக்காமல் அமைதி காக்கின்றன என்று நினைத்தது ஓநாய். ஆனாலும் தனது சந்தேகத்துக்கு விடை கிடைக்காமல் விடுவதாக இல்லை.

முதலில் யானையிடம் கேள்வியை ஆரம்பித்தது.

“உன்னிடம் மட்டுமே நீளமான தும்பிக்கை உள்ளது. நீதான் நிலாவைப் பிய்த்திருப்பாய்” என்றது ஓநாய்.

“ஐயோ, தும்பிக்கையைப் பாருங்கள். விளாம்பழ மரத்தின் உச்சிக் கிளையைக்கூட என்னால் தொட முடியாது. நான் எப்படி வானத்திலுள்ள நிலாவைப் பிடிக்க முடியும்?” என்று பதில் சொன்னது யானை.

யானை சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்று நினைத்தது ஓநாய். சட்டென்று கூட்டத்திலிருந்த ஒட்டகச் சிவிங்கியின் பக்கம் பார்வையைத் திருப்பியது.

அதைக் கவனித்துவிட்ட ஒட்டகச் சிவிங்கி, “உண்மையில் நான் இரண்டு நாட்களாகக் கழுத்து வலியோடு இருக்கிறேன். என் நீளமான கழுத்தைக்கொண்டு பனை மரத்தின் பச்சை இலைகளைக்கூடப் பறிக்க முடியாது” என்றது.

ஓநாய்க்கு ஒட்டகச்சிவிங்கியின் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்தது. ஆனாலும் நிலாவைப் பிய்ப்பவர் யாரென்று தெரியாமல் குழம்பியது.

வானில் வட்டமடித்துக்கொண்டிருந்த பருந்தை, கீழிறங்கி வரச்சொல்லி விசாரித்தது ஓநாய்.

“தலைவரே, மேகங்களைக் கிழித்துக்கொண்டு மேல் அடுக்குவரை என்னால் பறக்கவே முடியாது. நீங்கள் என்னைச் சந்தேகிப்பது தவறு. தயவுசெய்து என் மீது வீண்பழி சுமத்த வேண்டாம்” என்ற பருந்து இறக்கைகளை மடித்து ஓநாயைப் பார்த்தது.

யானை, ஒட்டகச்சிவிங்கி, பருந்து இவர்களில் யாரும் நிலாவைப் பிய்த்துச் சாப்பிடுவதில்லை. பிறகு யார் இந்தக் காரியத்தைச் செய்கிறார்கள் என்று யோசனையில் ஆழ்ந்த ஓநாய்க்கு, எதிரில் வந்து நின்றது ஒரு குருவிக் குஞ்சு.

“வாருங்கள், யாரோ ஒருவர் நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டு, நிலாவைக் கண்காணாத இடத்துக்கு இழுத்துச் செல்கிறார். உடனடியாக நாம் நிலாவைப் பின்தொடர்ந்து சென்றால், அது யாரென்று கண்டுபிடித்து விடலாம்” என்று சொன்ன குருவிக் குஞ்சின் கருத்தை ஏற்று, விலங்குகள் எல்லாம் நிலா பயணித்த பாதையில் சென்றன.

ஓநாய் தலைமையில் காட்டு விலங்குகள் அனைத்தும் வெளிச்சம் வந்த வழியில் முன்னேறிச் சென்றன. குருவிக் குஞ்சு யானையின் முதுகில் ஏறிக்கொண்டது. காட்டில், இருள் அதிகரித்தது.

காட்டின் மறுபக்கம் இருந்த ஆற்றங்கரைக்கு அனைத்தும் வந்துசேர்ந்தன. நிலா கீழே இறங்கியதைப் பார்த்தன. நடக்கப்போவது என்ன என்று அறிந்துகொள்ளும் ஆவலுடன் காத்திருந்தன. நிலா ஆற்று நீரில் விழுந்துவிடுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது.

அப்போது ஓர் அதிசயக் காட்சியைக் கண்டன. தண்ணீருக்குள் இருந்தபடி தலையை வெளியே நீட்டி, ஒரு முதலை எட்டிப் பார்த்தது. ஓநாயோடு விலங்குகள் முன்னேறிச் சென்றன.

முதலை சட்டென்று வாயை அகலமாகத் திறந்தபடி வானத்தை நோக்கித் தலையை உயர்த்தியது. சரியான நேரத்தில் வானிலிருந்த நிலா, வாய்க்குள் நழுவி விழுந்தவுடன் முதலை தண்ணீரில் மூழ்கியது.

காட்டு விலங்குகள் ஆத்திரமடைந்தன. ஒவ்வொரு நாளும் வானிலிருந்து விழும் நிலாவை விழுங்குவது முதலைதான் என்பதைக் கண்டுகொண்டன. முதலையுடன் சண்டையிட்டன. தோற்றுப் போயின.

நிலாவை யாரும் பிய்த்துச் சாப்பிட முடியாது என்பதை அறியாத விலங்குகள் இன்றுவரை முதலைகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x