Last Updated : 06 Jul, 2016 12:05 PM

 

Published : 06 Jul 2016 12:05 PM
Last Updated : 06 Jul 2016 12:05 PM

உலக மகா ஒலிம்பிக்: வேடிக்கையும் விநோதமும்

லண்டன் 3

ஒலிம்பிக் போட்டிகளை அதிக முறை நடத்திய நகரம் லண்டன். 1908, 1948, 2012 என 3 முறை ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரபூர்வமாக இங்கு நடந்துள்ளன.

2016 ஒலிம்பிக்கில்… இயற்கை செழிக்கும் ரியோ

பலரும் நினைப்பதுபோல ரியோ, பிரேசிலின் தலைநகரம் இல்லை; பிரேசிலில் அதிக மக்கள் வாழும் இரண்டாவது மிகப் பெரிய நகரம். முழுப் பெயர் ரியோடி ஜெனிரோ. இங்குதான் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்கப் போகிறது.

இயற்கை பாரம்பரியம் செழிக்கும் இந்த நகரம் யுனெஸ்கோவின் உலக மரபு சின்னப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கடலுக்கும் இந்த நகரின் மலைப்பகுதிக்கும் இடைப்பட்ட கரியோகா என்ற இயற்கை நிலக்காட்சிதான் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தவக்காலத்துக்கு முன்னதாக நடக்கும் ரியோ கார்னிவல் உலகப் புகழ்பெற்றது. 1992-ல் ரியோவில் நடைபெற்ற பூமி மாநாடு, உலக அளவில் ரியோ பிரபலமாக முக்கியக் காரணம்.

முதலில் வந்து பதக்கம் இழந்தவர்

1908-ம் ஆண்டு ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் மைதான எல்லைக்குள் முதலில் நுழைந்தவர் இத்தாலிய வீரர் டிராண்டோ பியட்ரி. ஆனால், அவருக்குப் பதக்கம் கிடைக்கவில்லை. அவர் எல்லைக்கோட்டைத் தொடுவதற்கு சில அடிகளே மீதமிருந்தன.

ஆனால், ரொம்ப தூரம் ஓடிவந்ததால் களைப்படைந்த பியட்ரி, தடுமாறி விழுந்தார். எல்லைக் கோட்டைத் தொட, சில ஒலிம்பிக் அலுவலர்கள் அவருக்கு உதவினர். இந்த உதவியின் காரணமாகப் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பதக்கம் பெறும் வாய்ப்பும் அவருக்குக் கைநழுவியது. அவருடைய முயற்சியைப் பாராட்டும் வகையில், ஆறுதல் பரிசு தரப்பட்டது.

ஒலிம்பிக்கில் இப்படி முதலில் உதவிய அலுவலர் யார் தெரியுமா? ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகளை எழுதி புகழ்பெற்ற ஆர்தர் கானன் டாயல்தான்.

பேராசை பெரு நஷ்டம்

ஒலிம்பிக் 100 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை (1956, 1960, 1964) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர் ஆஸ்திரேலிய வீராங்கனை டான் பிரேசர். ஆனால், அவரது விளையாட்டு வாழ்க்கை மிக சோகமயமாக முடிவுக்கு வந்தது. 1964-ல் டோக்கியோவில் 100 மீட்டர் நீச்சலில் ஒரு நிமிடத்துக்குள் 100 மீட்டர் தொலைவைக் கடந்து புதிய சாதனையைப் படைத்தார்.

ஆனால், அத்துடன் அவருடைய ஆசை அடங்கவில்லை. பேரரசர் ஹிரோஹிட்டோவின் ஜப்பானிய அரண்மனையின் முன்பு பறந்துகொண்டிருந்த ஒலிம்பிக் கொடியைத் திருட முயன்றதாக பிரேசர் பிடிபட்டார். பின்னர் ஒரு ஒலிம்பிக் கொடி அவருக்கு நினைவுப்பரிசாகக் தரப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய நீச்சல் அமைப்பு 10 ஆண்டுகள் விளையாட அவருக்குத் தடை விதித்து, பின்னர் 4 ஆண்டு முடிவில் அதை விலக்கிக்கொண்டது.

தங்கம் வெல்லா சாதனை நாயகன்

ஓட்டப்பந்தயத்தில் (800 மீட்டர்) உலக சாதனை படைத்தவர் பிரிட்டனைச் சேர்ந்த செபஸ்டியன் கோ. அதே பிரிவில் கடைசிவரை ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் தங்கப் பதக்கம் வெல்லவே முடியவில்லை.

1980 மாஸ்கோவில் ஸ்டீவ் ஓவெட்டிடம் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சலீஸில் பலம் வாய்ந்த ஜோவாகிம் குரூஸிடம் தங்கத்தை இழந்தார். அந்த இரு முறையும் 1,500 மீட்டர் ஓட்டத்தில் மட்டும் அவர் தங்கம் வென்றார்.

1992 பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெறாத நிலையில், எப்படியாவது அவரைப் பங்கேற்க வைக்க ‘ஒயில்டு கார்டு’ எனப்படும் நேரடித் தகுதி வாய்ப்பை வழங்குவதற்காக விதிமுறைகளில் திருத்தத்தை மேற்கொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் முயற்சித்தார் என்றால், செபஸ்டியன் கோவின் புகழைப் புரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x