Last Updated : 15 Mar, 2018 10:39 AM

 

Published : 15 Mar 2018 10:39 AM
Last Updated : 15 Mar 2018 10:39 AM

சிவா, விஷ்ணு, பிரம்மா; உத்தமர் கோயிலுக்கு வாங்க!

ஒரே தலத்தில், ஒரே கோயிலில், சிவா, விஷ்ணு, பிரம்மா என மூவரையும் தரிசிக்கலாம். அப்பேர்ப்பட்ட திருத்தலம் எது தெரியுமா. இந்தத் தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், நம் வாழ்வில் நல்ல நல்ல திருப்புமுனைகள் அமைவது நிச்சயம் என்கிறார்கள் பக்தர்கள்.

ஒரே வளாகத்திற்குள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் புருஷோத்தமர் என்ற திருநாமத்தோடு திருமாலும், அவருக்கு நேர் பின்புறம் மேற்கு நோக்கி பிட்சாண்டார் என்ற திருநாமத்தில் சிவபெருமானும் அருள்பாலிக்கின்றனர். இவர்களோடு நான்முகனான பிரம்மாவும், தேவி சரஸ்வதியோடு இங்கு அருள்பாலிப்பதால் இது மும்மூர்த்திகள் அருளும் தலம் என்று போற்றப்படுகிறது!

திருச்சியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ள பிட்சாண்டார் கோயில் என்ற உத்தமர் கோயில் திருமாலும், சிவபெருமானும் ஒரே ஆலய வளாகத்தில் எழுந்தருளியிருக்கின்ற அற்புதமான சிவா விஷ்ணு ஆலயமாகும். மகாவிஷ்ணுவும் காட்சி தரும் மும்மூர்த்திகள் குடிகொண்டிருக்கும் க்ஷேத்திரம் என்று பெருமையுடன் விவரிக்கிறது ஸ்தல புராணம்!

ஒவ்வொரு சிவாலயத்திலும் கருவறைக்கு வடகிழக்கே அமைந்துள்ள நவக்கிரக சந்நிதியில் குருபகவான் அருள்பாலிக்கிறார். மேலும், கருவறையில் தென்புற கோஷ்டத்திலுள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் குருவாக வழிபடப்படுகிறார். ஸ்ரீதட்சிணாமூர்த்தி வடிவத்தில் மேதா, ஞான, தாம்பத்ய, வீணா தட்சிணாமூர்த்தி முதலான வடிவங்கள் உள்ளன.

சிவனாருக்கு உரிய திங்கட்கிழமைகளிலும் பெருமாளுக்கு உரிய புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமைகளிலும் மகாலக்ஷ்மிக்கு உரிய வெள்ளிக்கிழமைகளிலும் வழிபடுவது விசேஷம் என்பதால், இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x