Published : 27 Feb 2015 12:09 PM
Last Updated : 27 Feb 2015 12:09 PM

பொது பட்ஜெட் 2015 - எதிர்பார்ப்பு

ஜவுளித் தொழில்,கோவை

பல்லடம் உயர்தொழில்நுட்ப நெசவுப்பூங்கா தலைவர் செந்தில் குமார்:

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை தகுதி யானவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நமது துணிவகைகள் ஏற்றுமதிக்கான சுங்க வரியை குறைக்க வலியுறுத்த வேண்டும்.

சைமா தலைவர் டி.ராஜ்குமார்

பாலியஸ்டர் விஸ்கோஸ் பைபர் இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். பாலியஸ்டர் விஸ்கோஸ் நூலுக்கான 12 சதவீதம் வரியை 6 சதவீதமாக குறைக்க வேண்டும். எப்போதெல்லாம் பருத்தி விலை குறைகிறதோ, அப்போதெல்லாம் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் இருந்து அரசே பருத்தியை வாங்கும். அதற்குப் பதிலாக, தொழிற்சாலைகளே விவசாயிகளிடம் இருந்து வாங்கிக் கொள்ளும் வகையில் பருத்திக்கான நிரந்தர நிதி வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தும் வரை தற்போதுள்ள கலால் வரி விதிப்பு நடைமுறையை மாற்றாகத் தொடர வேண்டும்.

-ம.சரவணன்

***

தோல் ஏற்றுமதி,திண்டுக்கல்

திண்டுக்கல் தோல் வர்த்தக சங்கத் தலைவர் மொகைதீன்:

திண்டுக்கல் தோல் ஏற்றுமதியை அதிகரிக்க ஒரே வாரத்தில் தோலை பதப்படுத்தும் கெமிக்கல் தொழில்நுட்பத்தை மத்திய அரசே அறிமுகப்படுத்தியது. இதனால், நிலத்தடி நீர், மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது உண்மைதான். அதற்கு நாடு முழுவதும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பரவலாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கைமுறை தோல் உற்பத்தியில், பெரிய அளவில் கட்டமைப்பு வசதி தேவையில்லை. உற்பத்திச் செலவும் குறைவு. வெளிநாடுகளிலும் கெமிக்கல் பயன்பாடு இல்லாத தோலைத்தான் அதிகம் விரும்புகின்றனர். அதனால், மத்திய அரசு இயற்கை முறை தோல் உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யாகும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் தோலுக்கு மத்திய அரசு, 15 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்துள்ளது. இந்த வரியை ரத்து செய்ய வேண்டும். அல்லது 2 அல்லது 5 சதவீதமாக்க வேண்டும்.

-ஒய்.ஆண்டனிசெல்வராஜ்

***

வேளாண் வளர்ச்சி,திருச்சி

விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம்:

விவசாயத்துக்கு 4 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. அதுவும் ஓராண்டுக்குள் செலுத்துவோ ருக்கு மட்டுமே, 3 சதவீதம் ஊக்கத் தொகையாக திரும்ப வழங்கப் படுகிறது. இது பயிர்கடனுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

விவசாயம் என்றாலே அதற்கு 4 சதவீத வட்டி மட்டும் என்ற கொள்கையை அரசு எடுத்து, அதன்படி கடனுதவிகளை வழங்க வேண்டும். ஓராண்டுக்குள் கடனை திரும்ப செலுத்தத் தவறியவர்களுக்கு 14 சதவீத வட்டி பெறப்படுகிறது. இதையும் ரத்து செய்ய வேண்டும்.

வேளாண்மை உற்பத்தி மட்டுமே நாட்டின் தற்சார்பு நிலையை அதிகப்படுத்தும். ஆனால் பட்ஜெட்டில் 2 சதவீதம் மட்டுமே வேளாண் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இதை குறைந்தபட்சம் 20 சதவீதமாக உயர்த்தி, அதில் 10 சதவீதம் விவசாயிகளின் நலன்களுக்காகவும், 10 சதவீதம் உற்பத்திக்காகவும் ஒதுக்க வேண்டும்.

-எஸ்.கல்யாணசுந்தரம்

***

விசைத்தறி தொழில் ,சென்னை

அகில இந்திய விசைத்தறி வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் எம்.ராஜேஷ்:

கைத்தறி நெசவாளர்களுக்கு நாங்கள் ஒன்றும் எதிரி இல்லை. அவர்களை முன்னுக்குக் கொண்டு வர அரசுகள் நவீனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

வேட்டி, சேலை, துண்டு, லுங்கி, ஜமுக்காளம் உள்ளிட்ட 11 வகை ஜவுளி ரகங்களை விசைத் தறியில் நெய்யக் கூடாது என 1985-ல் ஜவுளிக்கான 11 ரக சட்டத்தை மத்திய அரசு இயற்றி யது. இப்போது அனைத்துமே நவீனமயமாகிவிட்ட நிலையில் இன்னமும் அந்தச் சட்டத்தை அமல் படுத்தி வருவது தேவையற்றது.

பெரும்பாலான இடங்களில் சாயப்பட்டறை கழிவு நீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் பூமிக்குள் செலுத்துகிறார்கள். இதனால் தான் பல இடங்களில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற முறையான திட்டம் இல்லாததால் தான் இந்த நிலை. குஜராத்தில் சாயப்பட்டறை கழிவு நீரை சுத்திகரித்து கடலில் விடுகிறார்கள். அப்படியொரு திட்டத்தை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டுவர வேண்டும்.

-குள.சண்முகசுந்தரம்

***

தீப்பெட்டி உற்பத்தி,தூத்துக்குடி

தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம்:

பகுதியளவு இயந்திர மயமாக்கப்பட்ட தீப்பெட்டிக்கு முழு கலால் வரி விலக்கு அளிக்க வேண்டும். முழு இயந்திரமயமாக் கப்பட்ட தீப்பெட்டிக்கான கலால் வரியை 12 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்க வேண்டும்.

மரத்தடிகளில் பூச்சிமருந்து அடிக்க கண்டெய்னருக்கு ரூ.2500 கட்டணம் செலுத்தினோம். அதனை தற்போது ரூ. 12,500 ஆக உயர்த்தி யுள்ளனர். இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனாவில் பொட்டாசியம் குளோ ரைடு இறக்குமதி செய்ய ரூ. 90 ஆயிரம் ஆகிறது. பொட்டாசியம் குளோரைடு தொழிற்சாலைகள் இங்கே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஜே. தேவதாஸ்:

வெளிநாடுகளில் இருந்து மரத்தடி களை இறக்குமதி செய்து தீக்குச்சி தயாரிக்கிறோம்.

இதனால் நம் நாட்டில் காடு அழிப்புக்கு வாய்ப் பில்லை. எனவே, வனத்துறை உரிமம் பெற வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்.

-ரெ.ஜாய்சன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x