Published : 23 Jan 2015 10:51 AM
Last Updated : 23 Jan 2015 10:51 AM

நேதாஜி தங்கிய அறையை புனிதமாக போற்றும் தனஞ்ஜெயா: சென்னையில் கம்பீரமாய் நிற்கும் `காந்தி பீக்’ மாளிகை

இன்று (ஜனவரி 23) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 118-வது பிறந்த தினம். அவரது இறப்பு குறித்த சர்ச்சை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்க, 70 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவர் தங்கிய இல்லத்தின் அறையை புனிதமாகப் போற்றி பாதுகாத்து வருகிறார் எஸ்.பி.தனஞ்ஜெயா.

சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள 84 ஆண்டுகள் பழமையான `காந்தி பீக்’ மாளிகை இன்னமும் கம்பீரம் குறையாமல் நிற்கிறது.

சுமார் எட்டாயிரம் சதுரடியில் அமைந்திருக்கும் இந்த மாளிகை சென்னையின் பாரம்பரியமிக்க முக்கிய கட்டிடங்களை கட்டிய பொறியாளர் அய்யாசாமி முதலியாரின் சொந்த வீடு. காந்தியவாதியான அய்யாசாமி முதலியார் வீட்டுக்கு காந்தியோடு முரண்பட்ட நேதாஜி வந்தது எப்படி? அதுகுறித்து நமக்குச் சொல்கிறார் அய்யாசாமி முதலியாரின் பேரன் தனஞ்ஜெயா.

“இந்த மாளிகையை 1926-ல் தொடங்கி 1930-ல் கட்டிமுடித்திருக்கிறார் தாத்தா. 1935-ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் இந்த மாளிகையில் காங்கிரஸ் கட்சியின் பொன்விழா கூட்டம் நடந்திருக்கிறது. அந்தநேரத்தில் காந்திக்கு ஏதாவது சிறப்புச் செய்ய நினைத்த எங்கள் தாத்தா, இந்த மாளிகையில் மூன்றாம் தளத்தில் ஒரு பிரத்யேக அறையை கட்டுவதற்கு ராஜேந்திர பிரசாத் கையால் அடிக்கல் நாட்டினார்.

விரைவாக அந்த அறையை கட்டிமுடித்து அறையின் முகப்பில் காந்தி சிலையை வடிமைத்து இந்த மாளிகைக்கு `காந்தி பீக்’ என்ற பெயரையும் வைத்தார். 28-12-1935-ல் ராஜாஜிதான் இந்த அறையை திறந்து வைத்தார்.

தாத்தா காந்தியவாதியாக இருந்தாலும் மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் மதித்தார். காங்கிரஸில் இருந்து கொண்டே ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஆதரவு திரட்டிய நேதாஜி, சென்னைக்கும் வந்தார். அப்போது சென்னையில் அவர் தங்குவதற்கு யாரும் வீடு கொடுக்கக் கூடாது என்று அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை வெளியிட்டார். இதனால் நேதாஜிக்கு வீடு கொடுக்க அனைவரும் தயங்கினர்.

அந்த நேரத்தில் புலியூர் (இப்போது கோடம்பாக்கம்) ஜமீன்தார் ஜானகிராம் பிள்ளை கேட்டுக் கொண்டதன் பேரில் நேதாஜிக்கு எங்கள் வீட்டில் இடம் கொடுத்திருக்கிறார் தாத்தா. இதில் விநோதம் என்னவென்றால் காந்தியை எதிர்த்து இயக்கம் கண்ட நேதாஜி, காந்திக்கு சிறப்புச் செய்வதற்காக கட்டப்பட்ட எங்கள் வீட்டு பிரத்யேக அறையில் அவர் தங்கியதுதான்.

1939-ல் செப்டம்பர் 3,4,5 ஆகிய மூன்று நாட்கள் எங்கள் வீட்டில் தங்கியிருந்த நேதாஜிக்கு வெள்ளிக்குடை வைத்து வரவேற்பு கொடுத்திருக்கிறார் எங்கள் தாத்தா. மூன்று நாட்களும் அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உணவு சமைக்க 160 ரூபாய் செலவானதாக எங்கள் பாட்டி தனம்மாள் கணக்கு எழுதி வைத்திருக்கிறார். அவர் எங்கள் வீட்டில் தங்கியிருந்த சமயம்தான் இரண்டாம் உலகப் போர் தொடங்கிவிட்ட செய்தி அவருக்கு வந்து சேர்ந்தது.

இரண்டாவது முறையாக 1940-ல் ஜனவரி 10, 11 ஆகிய இரண்டு நாட்களும் நேதாஜி எங்கள் வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். அந்த சமயம் அவருக்கு 40 ரூபாய் செலவு செய்ததாக பாட்டியின் கணக்கு இருக்கு. இரண்டாவது முறை வந்தபோது, முதல் முறை எடுத்த போட்டோக்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார் நேதாஜி.

எங்கள் இல்லத்தில் நேதாஜி தங்கியதை கேள்விப்பட்ட அவரது மகள் அனிதா போஸ், 2005 டிசம்பரில் இங்கு வந்திருந்தார். நேதாஜி தங்கியிருந்த அறையில் அனிதாவும் அவரது குடும்பத்தினரும் நெகிழ்ச்சியோடு இருந்துவிட்டுப் போனார்கள்.

முத்துராமலிங்கத் தேவர் உடல் நலமினின்றி இருந்தபோது இந்த வீட்டில் இரண்டாம் தளத்தில் உள்ள அறையில் இரண்டு மாதம் தங்கி இருந்திருக்கிறார். நேதாஜி தங்கிய அந்த பிரத்யேக அறையில் அவர் சம்பந்தப்பட்ட போட்டோக்களை மட்டும் வைத்திருக்கிறோம். அந்த அறையை எதற்கும் பயன்படுத்தாமல் புனிதமாக போற்றி பாதுகாத்து வருகிறோம். நேதாஜி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட 1997-லிருந்து ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளுக்கு அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவருகிறோம்.

காலத்துக்கும் இந்த மாளிகை நேதாஜியின் பெயர் சொல்ல வேண்டும் என்பதற்காக இதை நேதாஜி நினைவு இல்லமாக மாற்றுவதற்கு நினைத்தோம். ஆனால், அதற்கான சூழல் கைகூடி வராததால் அந்த முயற்சியை கைவிட்டு விட்டோம்’’ என்று சொல்லி முடித்தார் தனஞ்ஜெயா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x