Last Updated : 19 Oct, 2014 12:06 PM

 

Published : 19 Oct 2014 12:06 PM
Last Updated : 19 Oct 2014 12:06 PM

ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை- மழையிலும் வழிநெடுக வரவேற்ற அதிமுகவினர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டார். 21 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு வெளியே வந்த அவருக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி'குன்ஹா தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து 4 பேரும் கடந்த 27-ம்தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீன்் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். கடந்த 7-ம் தேதி அவர்களது மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ரூ.2 கோடி பிணையம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலைப் பெற்ற ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று காலை 11 மணிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் எட்டு பேர் தலா ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து பத்திரத்தை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்வதற்கான ஆணையை நீதிபதி பிறப்பித்தார்.

மழையில் காத்திருந்த அமைச்சர்கள்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் அருகே குவிந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திடீரென பிற்பகலில் கன மழை பெய்தது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் உட்பட அனைத்து முக்கிய நிர்வாகிகளும் மழையில் நனைந்தவாறே மரத்தடியில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்தனர். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் ஆணை பிற்பகல் 2.38 மணிக்கு பரப்பன அக்ரஹாராவுக்கு வந்தடைந்தது.

நீதிபதி குன்ஹா வழங்கிய ஆணையை கர்நாடக நீதித்துறை ஊழியர் வெங்கடேஷ் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெய் சிம்ஹாவிடம் ஒப்படைத்தார். சிறைத்துறையின் அனைத்து நடைமுறைகளும் முடிந்தபிறகு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு ஜெயலலிதாவை முதல்முறையாக பார்ப்பதால் ஓ.பன்னீர்செல்வம் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதனை பார்த்த அமைச்சர்களும் ஜெயலலிதாவின் காலில் விழ முயன்றனர்.

21 நாள் சிறை வாசத்துக்கு பிறகு சரியாக 3.15 மணிக்கு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து ஜெயலலிதா வெளியேவந்தார். இதனை பார்த்து உற்சாகமடைந்த அதிமுகவினர் உற்சாக முழக்கமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x