Published : 01 Oct 2014 10:34 AM
Last Updated : 01 Oct 2014 10:34 AM

சாதனையாளர்கள் வெற்றிக்கு பின்னால் தாத்தா, பாட்டிகள்

இன்று உலக முதியோர் தினம்

ஒவ்வொரு சாதனையாளரின் வெற்றிக்குப் பின்னால், அவர்களின் குழந்தைப் பருவ சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு அவர்களது தாத்தா, பாட்டிகள் இருப்பதாக முதியோர் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்களை மரியாதையுடன் நடத்தவும், குடும்பம், சமூகத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவுகூரவும், அவர்களின் அறிவு, சிந்தனை ஆற்றல் மற்றும் சாதனைகளை இளைய சமுதாயத்தினர் பார்த்து கற்றுக்கொள்ளவும், ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி சர்வதேச முதியோர் தினவிழா கொண்டாடப்படுகிறது.

முதியோர் எதிர்நோக்கும் குடும்பம், சமூகப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும், அவர் களுக்கென சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.

வயதானவர்களின் சமூகப் பாதுகாப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சி.சிதம்பரம் ‘தி இந்து’விடம் கூறியது:

பொதுவாக 60 வயதைக் கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கணிப்புப்படி இன்று உலகில் பத்துக்கு ஒருவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்கள். 2050-ம் ஆண்டுக்குள் ஐந்துக்கு ஒருவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டுவார்கள் என்றும், 2150-ம் ஆண்டுக்குள் இது மூன்றுக்கு ஒருவர் என்ற நிலையை எட்டிவிடும் எனவும் கூறப்படுகிறது. தற்போது உலகில் சுமார் 60 கோடி முதியவர்கள் இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 2050-ம் ஆண்டு 200 கோடியாக அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இந்த தினம் தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கவுரவம் செலுத்தும் தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

தனி மனித ஆயுள் 81 வயது

சத்துணவு, நலவாழ்வு, மருத்துவம் இவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஒரு தனிமனிதனின் சராசரி ஆயுள்காலம் 81 ஆண்டுகளாக கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு நாடு இந்த கணிப்பு வேறுபடுகிறது. உலக மனித ஆயுள் காலப் பதிவின்படி, இதுவரை 123 வயதுக்குமேல் யாரும் வாழ்ந்ததாக சான்றுகள் இல்லை. 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர்.

உலகமயமாக்கல் சூழலில், மேலை நாடுகளின் கலாச்சாரத் தாக்கத்தால் இயந்திர வாழ்க்கையில் சிக்குண்ட மனிதன் தன் பெற்றோருடனும், முதியோருடனும் பேசும் நேரத்தைக்கூட குறைத்துக் கொண்டே வருகிறான். பொருளாதார ரீதியிலான தன்னிறைவுக்கு, தன்னை ஆற்றுப்படுத்துவதிலேயே ஆயுளை தேய்க்கிறான். கடந்த காலங்களில், உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர்கள் சரித்திரப் புகழ் சாதனையாளர்கள் அனைவரும் முதியோரின் வழிகாட்டுதலில், பராமரிப்பில் வளர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

சிந்திக்க வைக்கும் பாட்டிக் கதை

குறிப்பாக, பாட்டிக் கதை சொல்வதற்கு, முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் தாத்தா, பாட்டி இருப்பார்கள். அவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவத்தை கதைகளாக தன் பேரன், பேத்திகளுக்கு சொல்வர்.

சிறுவயது முதலே இதுபோன்று கதைகளைக் கேட்டு வளரும் குழந்தைக்கு சிந்திக்கும் திறனும், ஆக்கத்திறனும் கூடும். வரலாற்றில் பார்த்தால் ஒவ்வொரு சாதனையாளரின் குழந்தைப் பருவத்தில் தாத்தா, பாட்டிகளுக்கு பெரும் பங்கு உண்டு. அதேபோல, குடும்ப அளவில் வழிநடத்தும் நல்வழிமுறைகளை தங்கள் அனுபவ ரீதியில் தன் குடும்பத்தாருக்கு போதித்து அந்தத் தலைமுறையை செழிக்க செய்வார்கள் ’’ என்றார்.

முதியோருக்கு ஒதுக்கப்படும் நிதி கேள்விக்குறி

இதுகுறித்து சி.சிதம்பரம் மேலும் கூறியது:

இந்திய வாழ்க்கைச் சூழலில் வயதான ஆண்களைவிட, பெண்களே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இன்றைய இந்திய வாழ்வியல் சூழல் அடிப்படையில் ஆண்களின் சராசரி திருமண வயது 30-க்கும் மேலாக உள்ளது. ஒரு ஆண் திருமணம் செய்வதற்கு அடிப்படைத் தேவையாக அவனது வேலைவாய்ப்பு அமைகிறது. பிறகு திருமணம் செய்து குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே, அவனது ஆயுட்காலம் முடிந்துவிடுகிறது. பிறகு கணவரை இழந்த பெண், சமூகத்தில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

அரசும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வந்தாலும், வயதான பெண்களின் சமூகப் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. மேலை நாடுகளை ஒப்பிடும்போது வயதானோருக்கு ஒதுக்கப்படும் நிதி, பாதுகாப்பு சார்ந்த முக்கியத்துவத்தைக் காட்டிலும், இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலேயே காட்டப்படுகிறது. முதியோர்களுக்கென ஒதுக்கப்படும் நிதி, உதவிகள் அவர்களை முறையாக சென்றடைகின்றனவா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x